Monday, August 30, 2010

பதிவுலகின் Green Baby :அட நான்தாங்க...

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த சகோதரர்  சேட்டைகாரனுக்கு நன்றி :-)

வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-).

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


அஷீதா.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அஷீதா'தான் உண்மையான பெயர்(என்னா டீட்டைலா கேட்கறாங்கப்பா).என் பெயரே அழகா  இருக்கும் போது நான் ஏன்  மத்த பேருல எழுதனும்.

என்னோட வலைப்பதிவு  "நான் பேச நினைப்பதெல்லாம் " இது  உருவான   வரலாறு  சொல்றேன் கேளுங்க.எதுக்குமே  வரலாறு  ரொம்ப  முக்கியம்  பாருங்க . வீட்டுல ஆரம்பிச்சு காலேஜு ஆபிஸுன்னு ஒரு இடம் விடாம மொக்கை போட்டு போட்டு ஒரு  ஸ்டேஜுல 'பொல்லாதவன்'  படத்துல  வர  காமெடி  மாதிரி  ஆயிடுச்சு  நம்ம  நிலைமை. டேய்  குமாரு  நீ  கேளேன் , டேய்  நீ  கேளேன்  , மச்சி  நீ கேளேன் , மாப்பு  நீ  கேளேன்  இந்த  மாதிரி  நான்  மொக்கை  போட  மத்தவங்கள  கெஞ்ச  வேண்டியதா போய்டுச்சு. இதுக்கும் மேல பொறுக்க முடியாதுன்னு முடிவு பண்ணி தான்,  இனி  மக்களை  நம்பி  ப்ரோயோஜனம்  இல்லை வலையுலகத்துல இறங்கிட வேண்டியதுதான்.அங்க தான் நாம என்ன எல்லாம் பேச நினைக்கிறேமோ எல்லாமே சுதந்திரமா பேசலாம்ன்னு நினைச்சு "நான் பேச நினைப்பதெல்லாம்"ன்னு தொடங்கியாச்சு (பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல). ஏதாச்சும் இலவசமா கிடைச்சா Q' ல  நிக்கற  கூடத்துல  நானும்  ஒருத்தி . அபப்டி  இருக்கும்  போது  அன்பா  ஆதரவா கூகுளாண்டவர் எனக்கிட்ட வந்து  உன்னை மாதிரி ஒரு அறிவாளியைதான் இந்த  பதிவுலம் தேடுதுன்னு சொன்னாரு (மனசாட்சி: இப்படியா  சீனு போடுவ. உனக்கு  மொக்கை  தான்  போட  வரும்  அதுவும்  உருப்படியா  போட வராது.அதுக்கே  இவளோ  பில்டப்பா). அபப்டியே இலவசமா வலைப்பதிவு  ஒன்ணு  குடுத்தாரு அதான் ஆரம்பிச்சுட்டேன்.  காசு கட்டனும்னு ரூல் இருந்துச்சுன்னா இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
இந்த பதிவுகள் அப்படின்னு ஒன்னு இருக்குறதே குப்பைதொட்டி - ஆதவன்  அவர்களின் பதிவை படிச்ச பிறகு தான் தெரிஞ்சுகிட்டேன். தமிழிஷ் இணையத்தில் அவரோட நகைச்சுவை பதிவுகள் படிச்சிட்டு அவரோட ப்ளாக் பின்தொடர ஆரம்பித்தேன். அவர்  பதிவுகளில் வரும் பின்னூட்டத்தின் (கும்மிகள் ) மூலம் நிறைய பதிவுகளை  படிக்க ஆரம்பித்தேன்,படிக்க படிக்க எனக்கும் ஆசை வந்துவிட்டது எழுத. எனக்கு எப்போ அந்த ஆசை வந்துதோ அப்போவே பதிவுலகத்துக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒண்ணுமே செய்யல..எனக்கு விளம்பரம் பிடிக்காது.. இப்படி எல்லாம் சொல்லி உலக நடிப்பு நடிக்க ஆசை இல்லை. பிரபலம் ஆக என்ன எல்லாம் செய்யணுமோ எல்லாத்தையும் செய்தேன். முகபுத்தகம், ஆர்குட், ட்விட்டர், தமிழ்மனம், இப்படி சில இடங்களில் விளம்பரம் செய்தேன்.இப்படி  நான் செய்த விளம்பரத்தால சில பேரு உள்ளே ஏதாச்சும் இருக்கும்னு வந்து ஏமாந்துட்டுப்போனாங்க. இதை தவிர பதிவு எழுதின கையோட திருப்பதி போய் ஏழுமலையானுக்கு மூணு தடவ  மொட்டை போட்டுட்டு வந்த கதை வேற இருக்கு. இது எதுவுமே கை குடுக்காத சமயத்துல தான்,  எனக்கு கிடச்ச ஒரே ஆயுதம் என் ஆபிஸ் நண்பர்கள்.ஒவ்வொரு பதிவு எழுதி முடிச்சதும் விடாம அவங்களை மிரட்டி மிரட்டி என்னோட பதிவுகள் படிக்க வச்சேன். நான் ப்ராஜக்ட் மேனேஜரா   இருக்கறதனால என்னோட டீம் மெம்பர்ஸ்க்கு நான் தான் லீவ் சாங்க்ஷன் பண்ணனும். அதனால என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போட்டா  தான் லீவு சாங்க்ஷன் பண்ணுவேன்னு ப்ளாக்மெயில் செய்வேன்(இதெல்லாம் ஒரு பொழப்பு). இப்படி தாங்க நான் பிரபல பதிவர் ஆனேன் :)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆமா ன்னு சொன்னாலும் வம்பு , இல்லைன்னு சொன்னாலும் வம்பு. அதனால இப்போதைக்கு :) ஒரு சிரிப்பானை மட்டும் பதிலா போடறேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் பதிவுகள் மூலமா சம்பாதித்த காசு வச்சு தான் போயஸ் கார்டன்ல ரஜினி வீட்டு பக்கத்துல ஒரு பெரிய பங்களா வாங்கி  இருக்கேன். எங்க வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தா ..அப்படியே ரஜினி வீட்டுல இருக்கற மினி தியேட்டர் கூட தெரியுது..இந்திரன் படத்தையே ஜன்னல் வழியா பார்த்துட்டேன்னா
பாருங்க. அடுத்து benz கார் வாங்குறதுக்கு ரெடி ஆயிட்டு இருக்கேன். 

 
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இந்த கேள்வியை  பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்சதுல முதுகு தண்டு உடைஞ்சு இப்போ ராயபுரம் தர்ம ஹாஸ்பத்திரியில கிடக்குறேன். என்னை பார்க்க வரணும்னா ஆளுக்கு ரெண்டு  ஹோர்லிக்ஸ் பாட்டிலோடதான் வரணும். ஏனா நான் ஹோர்லிக்ஸ் அப்படியே சாப்பிடுவேன்.

அட போங்க பாஸ் இருக்கற  ஒண்ணு  வச்சுக்கிட்டு  அதுக்கு  மேட்டர்  தேத்தவே  ஐயா  புடி  அம்மா  புடின்னு  ஆயிடுது.  கேட்க்குராயிங்க பாரு கேள்விய..


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
நாகரீகம் இல்லாமல் எழுதறவங்க மேல கண்டிப்பா கோவம் வந்ததுண்டு , அவங்களவிட அந்த பதிவுக்கு பின்னூட்டம் போடறேன்னு சொல்லிட்டு ஒரு கும்பல் வந்து கும்மி அடிப்பாங்களே அவங்க மேல தான் அதிகமா கோவம் வரும்.. அபப்டியே அவங்க மூக்கு மேல குத்தனும்ன்னு தோணும். அப்புறம் அற்புதமாய் எழுதும் பலரிடம் மதிப்பும், மரியாதையும் வந்திருக்கு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
இது  வரை  யாருமே  நேரடியா தொடர்பு கொண்டு பாராட்டியது  இல்லை .பின்னூட்டத்தில  பாராட்டியதோடு  சரி .
ஆரம்பகாலத்துல ஆதவன் , சென்ஷி , வினோத்  கௌதம் , கோபி  இவங்க  எல்லோரும்  கமெண்ட்ஸ் போடுவாங்க. அன்பு  சகோதரர்  சேட்டைக்காரன் , வெட்டி  பேச்சு  சித்ரா, ஆதவன் இவங்க மூணு பேரும் தவறாம என்னுடைய ஒவ்வொரு  பதிவுக்கும் பின்னூட்டம் போட்டு இன்று  வரை  என்னை மேலும் மேலும்  எழுதுவதற்கு  உற்சாகப்படுதிட்டு இருக்காங்க. இவங்களுக்கு என் நன்றிகள்.  

நான்  எழுதுறது பாதிப் பேருக்குப் புரியாது, பாதி எனக்கே புரியாது அப்படி  இருந்தும்  என்னை மதிச்சு மூனு தடவ  விருது  குடுத்தாரு நண்பர் ஜெய்லானி. அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. (இப்போ  எல்லாம்  நமக்கு  எந்த விருதும் வரமாட்டேங்குதே என்ன மேட்டர்.அதான் நீங்க சொன்னா மாதிரியே உங்களை பிரபலம் ஆக்கிட்டேன் இல்ல, அடுத்த  விருது  ஏற்பாடு  பண்ணுங்கப்பு ). வால்பையன் , அஹ்மத்  இர்ஷாத் , ஜோ, முகிலன் , அச்சு , ஜீவ்ஸ்  இவங்களும் தொடர்ந்து  என்னை  உற்சாகப்படுதிக்கிட்டு  இருக்காங்க. இவங்களுக்கும் என்  நன்றிகள்.

இவங்க மட்டுமல்லாம, அவ்வபோது வந்து என்னுடைய பதிவுக்கு தகுந்த பின்னூட்டங்கள் போட்டு  என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைத்து அலுவலக நண்பர்களுக்கும், பதிவுலக  நண்பர்களுக்கும் , தமிழ்மணத்துக்கும், மற்ற அனைவருக்கும் என் நன்றிகள்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
சுருக்கமா  சொல்லனும்னா  நான்  ஒரு கலவை.. கொஞ்சம்  சாம்பார் , கொஞ்சம்  பாஸ்டா (pasta), கொஞ்சம்  ஜீன்ஸ் , கொஞ்சம்  மடிசார் , கொஞ்சம்  சுறுசுறுப்பு, கொஞ்சம்  சோம்பேறி , கொஞ்சம்  அறிவாளி  (அட  நம்புங்க) , கொஞ்சம்  கோமாளி , கொஞ்சம்  அழகு  (ஆசைக்கு  சொல்லிக்க  வேண்டியதுதான் ) கொஞ்சம்  சிரிப்பு , கொஞ்சம்  கோபம், கொஞ்சம் பரதம், கொஞ்சம் டிஸ்கோ கடைசியா கொஞ்சம் மொக்கை (நிஜமாவே கொஞ்சமாதான் மொக்கை போடுவேன்). மொத்ததுல நான் ஒரு Green Baby (அப்பாடா டைட்டில் வந்துடுச்சு).

Tuesday, August 17, 2010

உடைந்த பொம்மைகள்


டிகாரம் ஏழரை மணியை காட்டியது. இதே நேரத்தில் தினம் எனக்குமான ஏழரை தொடங்கி விடும். அனீஷ் கையில் மூன்று தினங்கள் முன் வாங்கிய விமான பொம்மையை சுவரில் மேலேயும் கீழேயும் தேய்த்து “ட்ருர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என சப்தம் எழுப்பிக்கொண்டிருந்தான். டிவியில் டாம் & ஜெர்ரி ஓடிக்கொண்டிருந்தது. எரிச்சலின் உச்சிக்கு சென்றேன். “டேய்ய்ய்” என மிகக்கூர்மையாக நான் எழுப்பிய அலறலில்ஒரு நிமிடம் அதிர்ந்து நிமிர்ந்தவன், இது தினமும் நடைபெறும் பள்ளிக்கு செல்லும் போராட்டத்தின் அலறல் என உணர்ந்து விமானத்தை தூக்கி எறிந்து ஓடினான். அது உடைந்தும் போனது. பின்னால் ஓடி அவனை பிடிக்க முயன்று நழுவி ஓடினான். தூரமாய் சென்று பின்பிறம் திரும்பி 'அதை' அசைத்து “ஒழுங்கு” காட்டினான். டிவியில் ”ஜெர்ரி” எகத்தாளமாய் சிரித்தது. சோர்வாய் கஜினியாகி தொடர்ந்தேன்.

ப்போ  பார்த்தாலும்  tom & jerry பார்க்கறதே வேலையா  போச்சு  உனக்கு...இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு, தினமும் இது மாதிரி அடம் பிடிக்கலாமா? அம்மா பாவம்ல? அம்மாவுக்கு ஆபிஸ்ல எவ்ளோ டென்சன் இருக்குன்னு தெரியும்ல உனக்கு? ” ரெண்டு கன்னம் அழுத்திப்பிடித்து எண்ணெய் தேய்த்த தலையில் வகிடெடுத்து வாரினேன்.
”அம்மா  ரெடி  ஆயிட்டேன்  வா  வா  போகலாம்.....இருவரும் அவசரமாக கிளம்பினோம்.” உடைந்த விமான பொம்மையை ஒரு சிறிய நீல நிறப்பெட்டியில் போட்டு அதை தன் பள்ளிகூட பையில் அடக்கினான். அவசரத்தில் அவனை விரட்டினேன். வண்டியை கிளப்பினேன்.
 
வீட்டில் இருந்து பள்ளிக்கு எனது ஸ்கூட்டியில் செல்வதற்கு சுமார் பத்து நிமிடங்கள் ஆகும்.
 
"குட்டி எப்போ பார்த்தாலும் இப்படி tom & jerry பார்த்துக்கிட்டு  இருக்கியே உனக்கு tom & jerry பைத்தியம்  தான் பிடிக்க போகுது பாரு." 
 
"நீயும் தான் மம்மி டெய்லி சூப்பர் சிங்கர் பார்க்குற, அப்போ உனக்கும் தான் சூப்பர் சிங்கர் பைத்தியம் பிடிக்க போகுது.." 
 
"எதுக்கெடுத்தாலும் இப்படி எடக்கு முடக்கா பேசிக்கிட்டே இரு உன் அப்பா மாதிரி.."
 
"மம்மி இன்னைக்கு வீட்டுக்கு சீக்கிரம் வா மம்மி, சுஜி எனக்கு ஒரு சூப்பர் விளையாட்டு சொல்லிகொடுத்தா அது விளையாடலாம்"

"சூப்பர் விளையாட்டா.." தூர சிக்னலில் மஞ்சள் விழுந்து விட்டது. பேச்சிலும் வண்டியின் வேகத்திலும் அழுத்தம் கொடுத்தேன்.

“ஆமா.. மம்மி கையை இப்படி வையேன். நான் சொல்லிகொடுக்கிறேன்” பின் சீட்டிலிருந்து கையை ஏதோ ஒரு வடிவத்தில் வைத்திருக்கிறான். சத்தம் மட்டும் வந்தது.

“டேய் சும்மா இரு மம்மி வண்டி ஓட்டிகிட்டு இருக்கேன்ல” அவன் பேச்சிற்கு வளையாமல் டிராபிக் நெரிசலில் வளைந்து போனேன்.
பள்ளிகூடத்தின் வாசலில் நிறுத்தினேன். ”சரி சரி..குட்டி இன்னைக்கு லஞ்ச் பாக்ஸ்ல சாம்பார் சாதமும் ,தயிர் சாதம் வச்சிருக்கேன். உனக்கு எது பிடிக்குதோ அது சாப்பிடு. எதுவுமே சாப்பிடாம மட்டும் இருக்காத டையர்ட் ஆயிடுவ...சரியா.  ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல  ஆப்பிள் கட் பண்ணி  வச்சிருக்கேன் புடிச்சவரைக்கும் அதையும் சாப்பிடு..” முடிக்கவில்லை

பையை துழாவிய படி ”ம்ம்...சரி  மம்மி.” என்றான்.
”ஸ்கூல்ல டீச்சர் சொல்றது கவனமா கேக்கணும் , பசங்களோட சும்மா சும்மா சண்டை போடாத. விஜய்  ஸ்டைல்ல  குத்தறேன்.. ரஜினி ஸ்டைல்ல சண்டை போடறேன்னு ..பசங்கள போட்டு அடிச்சேன்னு வச்சுக்கோ  அப்புறம் நான் உன்னை  ஹாஸ்டல்ல  சேர்த்துடுவேன் சொல்லிட்டேன். ”

”டிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...நான் அடிச்சா தாங்க மாட்ட , நாளு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட...”

”ஹ்ம்ம் ஹ்ம்ம் நீ திருந்தவே மாட்ட..”
சரி சரி பெல் அடிச்சுட்டாங்க டா குட்டி சீக்கிரம்  சீக்கிரம்  பாக் எடுத்துக்கோ, லஞ்ச் பாக் எடு" என்று சொல்லிகொண்டிருக்கும்போது..

அவன் கையில் அந்த நீல நிறப்பெட்டி இருந்தது. இன்னும் பையில் துழாவிக்கொண்டே இருந்தான்.

செல்போன் அலறியது. ராஜேஷ் காலிங்....... “ம்ம் சொல்லுங்க ராஜேஷ். ம்ம் ஆமா.. வந்துட்டே இருக்கேன். ப்ச் எல்லா ஸ்லைடும் நேத்தே ரெடி பண்ணிட்டு தானே வந்தேன். அது போட்டு காட்டி கொஞ்ச நேரம் ஓட்டுங்க. நான் வந்திடுறேன்.”
 
கையில் நீலநிறப்பெட்டியை வைத்துக்கொண்டு மிரட்சியாய் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான் அனீஷ்.

“கொஞ்ச நேரம் அவங்களை மேனேஜ் பண்ண தெரியாதா ராஜேஷ் உங்களுக்கு? எனக்கென்ன இறக்கையா இருக்கு பறந்து வர? ப்ச் மீட்டிங் இருக்கு சீக்கிரம் வரனும்னு நீங்க எனக்கு சொல்லாதீங்க, மைண்ட் இட்.. சரி வைங்க. நான் வரேன்” நெற்றியில் வியர்வை துளிர்க்க ஆரம்பித்தது.
"மம்மி.. மம்மி..." என்றான்

"என்னடா குட்டி .."

"இந்தா  மம்மி" என்று அந்த நீல நிற விளையாட்டு பெட்டியை (toy box) என்னிடம் குடுத்தான்.  
 
"என்னடா இது" என்று கேட்டதற்கு

"இது..."என்று சொல்ல ஆரம்பித்தான்..அவன் சொல்வதை கேட்க்க நேரமில்லாமல் அவன் கையிலிருந்து அந்த பெட்டியை வாங்கி அவனை ”டைம் ஆயிடுச்சு போடா குட்டி" விரட்டினேன். தொங்கிய தலையோடு பள்ளிக்குள்ளே நடந்தான். கீ கொடுத்த இயந்திரமாய் எந்திர வாகனத்தை செலுத்தினேன்.

குறுக்கே வந்த நாய், பிச்சைகாரன், ரோட்டார பான்பராக் கடையில் உத்துப்பார்க்கும் ஒரு பொறுக்கி, சிகப்பு சிக்னல், நெற்றியிலிருந்து வடியும் வியர்வை, சிரித்தபடி செல்லும் கல்லூரி மாணவிகள், ப்ளாட்பாரத்தில் தன் குழந்தைக்கு உணவை ஊட்டும் தாய், புகையை கக்கும் பேருந்து, நான்கு மாடியில் இன்னும் இரண்டு வருடங்கள் லோன் பாக்கி இருக்கும் வங்கியின் கிளை,  பற்கள் கூசும்படி மெலிதாக உராய்ந்தபடி செல்லும் பைக் காரன் என காட்சிகளை நிலைநிறுத்த முடியாமல் பைத்தியமாய் அலைந்த கண்கள், கடைசியில் சிறிது நேரத்துக்கு முன்பு கண்ட, நீலநிற பெட்டியோடு பள்ளிகூட வாசலில் மிரட்சியுடன் அனீஷ் நிற்பதில் நிலை குத்தி நிற்க  அழுகையே வந்துவிட்டது. காரணம் தான் தெரியவில்லை.

லுவலகத்திற்கு சென்றதும் மீட்டிங். அனீஷ் கொடுத்த  பெட்டி லஞ்ச் பாக்ஸோடு வைத்திருந்ததால் அதைப் பற்றி சுத்தமாக மறந்து , வேலையில் மூழ்கிவிட்டேன்.  இயந்திரத்திற்கும் ஓய்வு தேவைப்பட்டது. லேசாக  பசிக்கவே சரி சாப்பிடலாம்  என்று , பையில் இருக்கும் டிபன் பாக்ஸ் எடுக்கும் போது கண்ணில் பட்டது அனீஷ்  கொடுத்த  அந்த நீல நிற விளையாட்டு பெட்டி. என்னதான் இருக்கு இதுல என்று அந்த பெட்டியை திறந்தேன்.

இரண்டு பழுதடைந்த ரிமோட் கார்கள், 6 சாக்லேட் ராப்பர்கள், ஸ்டியரிங் உடைந்த சைக்கிள், ஒரு பக்கம் லேசாக  வீரல் விழுந்த  கூலிங் கிளாஸ், செயலற்று போன வீடியோ கேம்,பென் 10 ஸ்டிக்கர்ஸ் ,ஸ்பைடர்மான் பொம்மை, கிண்டர்ஜாய்'யில்  வந்த சிறிய யானை பொம்மை,crayons....இன்று காலை உடைந்த விமான பொம்மை.
அடடா  எல்லா பொம்மையும் இப்படி உடைஞ்சு போய் இருக்கே..என்னிடம் எதற்கு இதைக்கொடுத்தான்? ஒருவேளை எல்லாம் உடைந்து போய் இருக்கிறது. புது பொம்மை விளையாட கேட்கிறானா? இருக்கும். ...புது பொம்மைகள் வாங்கி குடுக்கணும் செல்லத்துக்கு என்று யோசித்தபடியே..சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்ததும் டேபிள் மீதி சிந்திய சாப்பாட்டுடன் சேர்த்து அந்த உடைந்து போன பொம்மைகளையும் குப்பைதொட்டியில் போட்டுவிட்டு டேபிளை சுத்தம் செய்து விட்டு மீண்டும் வேலையில் மூழ்கிவிட்டேன்.
 
ரவு சோர்வாய் வீட்டிற்குள் நுழைந்தேன். மனுஷியாய் இருக்க போகிற சில மணி நேரங்கள். சோபா மீது உட்கார்ந்து டிவியில் கண் நிலைத்திருந்தது. 
அனீஷ் சோபாவிலேயே உறங்கியிருந்தான். தலையை கோதினேன். மெலிதாய் விழித்தான். வயிற்றில் கையை வைத்து ”சிக்கிலிக்கா விளையாட்டு” விளையாடுனேன். குட்டி பையன் தூங்கிட்டீங்களா? அய்யோ சாப்பிடாம தூங்கிட்டீங்களா? என் அம்முல்ல வாடா செல்லம் மம்மி ஊட்டி விடுறேன்” கொஞ்சினேன். சிரித்துக்கொண்டே எழுந்தான். 

”மம்மி.. நான் காலையில கொடுத்த டாய்ஸ் பாக்ஸ் எங்க மம்மி?” எனக்கு ‘பக்’ என்றது. அந்த பெட்டியை பற்றி சுத்தமாக மறந்து போனது எனக்கு. அவன் அந்த பெட்டியை பற்றி கேட்ப்பான் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை, அதில் இருந்தவற்றை வேறு குப்பையில் கொட்டிய ஞாபகம். அது வேண்டும் என இவன் இப்போது அழ ஆரம்பித்தால் விடியும் வரை அழுவானே. சமாளிக்க வேண்டியது தான்.
 
"என்ன பாக்ஸ் டா செல்லம்..."
 
"மம்மி அதான் அந்த ப்ளூ கலர்ல ஒரு பாக்ஸ் குடுத்தேனே ஸ்கூல் கிட்ட.."
”மம்மி எடுத்திட்டு வர மறந்துட்டேன் டா குட்டி....ஆபீஸ்ல பத்திரமா வச்சிருக்கேன், நாளைக்கு எடுத்திட்டு வரேன்."

"மம்மி இந்த ஸ்டிக்கர் ஒட்டி தரணும்னு நினைச்சேன் ஆனா மறந்துட்டேன். அந்த பாக்ஸ்ல இருக்கிற பொம்மை எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது..  உங்களுக்கு ஆபீசுல போர் அடிக்கும் போது நீங்க விளையாடுவீங்கன்னு உங்களுக்கு கொடுத்தேன்."
"மம்மி உண்மைய சொல்லுங்க நீங்க அந்த பாக்ஸ் தொலைக்கலியே ?"
"ச்சே  ச்சே  இல்ல டா செல்லம், என் குட்டி செல்லத்தோட பாக்ஸ்சை  மம்மி தொலைப்பேனா சொல்லு".. என்று அவனை கட்டி அணைத்த போது அவன் கையில் இருக்கும் ஸ்டிக்கர் என் கண்ணில் பட...
"இது என்ன டா செல்லம்" ..என்று அவன் கையில் இருக்கும் ஸ்டிக்கரை வாங்கி பார்த்தேன்..அதில் "I love u mummy" என்றிருந்தது..

அந்த 6 வயசு  பிஞ்சு மனசுக்கு அந்த பெட்டியில் இருப்பது சாதாரண உடைந்த பொம்மைகள் இல்லை அதை அவன் பொக்கிஷமாகவே நினைச்சுகிட்டு இருக்கான்...அவனுடைய அன்பை அந்த பெட்டியின் மூலம் எனக்கு தெரிய படுத்த முயற்சி செய்திருக்கிறான், ஆனால் நான் தான் அதை புரிஞ்சிக்காம  தவறிவிட்டேன், தவறிவிட்டதும் இல்லாம அந்த பெட்டியை அலட்சியமாக குப்பைத்தொட்டியில வேற  போட்டுட்டேன்..ச்ச்சே எப்படி அவனோட இந்த அன்பை  நான் புரிஞ்சிக்காம  போனேன்னு நினைக்கும் போதே என்னையும்  அறியாமல் அழுகை வந்தது.

காலையில் முதல் வேலையா ஆபிசுக்கு போய் அந்த பொம்மை எல்லாம் எடுத்துட்டு வரணும்..இதான் மனசுல ஆழமா  இருந்துது. காலை எழுந்ததும் ஆபிசுக்கு கிளம்பினேன், காலை 7 .30 மணிக்கு ஆபிஸ் சுத்தம் செய்ய ஆயம்மா வந்துடுவாங்க,அதுக்குள்ள நாம போகணும்ன்னு அவசரமா கிளம்பினேன். ஆபீசுக்கு போனதும் கடகடன்னு குப்பைதொட்டியில் இருக்கும் எல்லா பொருட்களையும் டேபிள் மீது கொட்டி  ஒரு வழியா எல்லா பொம்மையும் எடுத்து சுத்தம் செய்து அந்த பெட்டிக்குள் போட்டதுக்கு அப்புறம் தான் போன உயிர் திரும்ப வந்தது மாதிரி இருந்துது...

ன்று மாலை.. இரவு உணவுக்கு முன்பு..அனிஷை பக்கத்தில் அமர வைத்து, அந்த பெட்டி அவனிடம் காட்டி....
'குட்டி இந்த பெட்டியில் என்ன என்ன பொம்மை இருக்கு சொல்லு பாப்போம்' என்றேன்.
அவன் ஒவ்வொவொரு பொம்மையா  வரிசையா  சொல்ல ஆரமிச்சு அப்படியே ஒவொரு பொம்மைக்கும் ஒரு பின்னணி கதையும் சொல்லிக்கிட்டே போனான்..
”அது வந்து....அது வந்து..” யோசிக்கிறான். “டிராயிங்ல பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கினப்ப கிடைச்சுதுல்ல க்ரயான்ஸ் அது.... அப்றம், அம்மம்மா என் பர்த்டேவுக்கு வாங்க் தந்தாங்கல்ல அந்த ரிமோட் கார், தாத்தா வாங்கி தந்த சைக்கிள், ஊட்டிக்கு டூர் போனப்ப டாடி வாங்கி கொடுத்த வீடியோ  கேம் , என் ப்ரெண்டு தருண் கிட்ட சண்டை போட்டு உடைஞ்சு போன என் பென்சில் பாக்ஸ்.. அப்றம் அப்றம்“ ஒவ்வொரு பிஞ்சு விரலையும் எண்ணிக்கைக்காக அவன் அடையாளப்படுத்தி யோசித்த போது ஸ்தம்பித்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் சொல்ல சொல்ல எல்லா சம்பவங்களும் அப்படியே என் மனதில் ஓட ஆரம்பித்தன. இப்போ தான் நான் உணர்ந்தேன் அந்த பெட்டியில் இருப்பது குப்பை இல்லை அவனுடைய நினைவுகளும் ,அன்பும்  நிறைந்திருக்கும் பொக்கிஷம்  என்று.
 
"நான் நீ லேட்டா வரும் போதெல்லாம் அது தான் மம்மி விளையாடுவேன். ஜாலியா இருக்கும்... நீ ஏன் மம்மி ஆபிஸ்ல இருந்து லேட்டா வர்ர? அங்க உனக்கு போரடிக்கும்ல? இந்த பொம்மையெல்லாம் ஆபிஸ் கொண்டு போய் விளையாடிட்டு , வீட்டுக்கு வரும் போது எடுத்துட்டு வந்திடு மம்மி நாம ரெண்டு பேரும் விளையாடலாம். இதெல்லாம் விளையாண்டா கோபமே வராது தெரியுமா... நீ என்னை திட்ட கூட மாட்ட பாரேன்..... மம்மி ஏன் அழற?” என் தாடையை பிடித்து தூக்கினான்.

அவனைப்பார்க்கும் சக்தியை முழுவதுமாக இழந்திருந்தேன். சத்தம்போட்டு அழுதேன். அவனை கட்டிக்கொண்டு அழுதேன். அவனும் பயந்து போய் அழ ஆரம்பித்தான். ”மம்மி அழாத மம்மி. ஏன் மம்மி அழற?
“இல்லடா செல்லம் மம்மி அழல. நீ அழாத சரியா. ரெண்டு பேரும் விளையாடலாமா” சிரித்தேன்

“மம்மி சுஜி சொல்லி கொடுத்த விளையாட்டு விளையாடலாமா?”
கைகளை விதவித வடிவங்களில் வைத்து மழலை குரலில் ஒரு பாடலுடன் விளையாட்டை மிக ஆர்வமாக சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தா
ன். நேரம் போனது தெரியவில்லை. “சரி விளையாண்டது போதும். மீதி நாளைக்கு விளையாடலாம். இப்ப வா சாப்பிடலாம்”

“போ மம்மி நாளைக்கு நீ விளையாட வரமாட்ட. ஆபிஸ் போயிடுவ”

”இனி மம்மி ஆபிஸ் போக மாட்டேன்” கிச்சனுக்குள் நுழைந்தேன். சேலையை பிடித்தபடி ”ஹேய்ய்ய்” என கத்திக்கொண்டு கூடவே ஓடி வந்தான். டிவியில் “டாம் & ஜெர்ரி” ஓடிக்கொண்டிருந்தது.

Friday, July 16, 2010

தேவையில்லாதவற்றை நீக்குங்கள்..

இன்று  என் கைபேசியில் "phone  memory full delete unwanted messages" என்ற ஒரு அலெர்ட் வந்ததும் இன்பாக்ஸ் சென்று இருக்கிற மெசேஜஸ் ஒவ்வொன்றாக படித்துவிட்டு எது தேவை இல்லையோ அதை எல்லாம் டெலிட் செய்கிறேன். எப்பொழுதும் யோசிப்பது  உண்டு , ஏன் நான் ஒரு மெசேஜ் வந்ததும் அதை படித்து பார்த்து தேவையற்றது  எனறால் உடனுக்குடன் டெலிட் செய்வது இல்லை என்று. ஆனாலும் இது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

மெசேஜஸ் நிரம்பி வழிவதால் என்னுடைய கைபேசியின் செய்யல்பாடோ இல்லை செயலாற்றலோ சிறுதும்  குறைந்துவிட போவதில்லை, அதனால் தான் என்னமோ இதை பற்றி பெரிதாக கவலை படுவதும் இல்லை. என்னை பொறுத்தவரை  கைபேசியில் இருக்கும் மெமரி ஸ்பேஸ் தான் தீர்மானிக்கிறது எப்பொழுது மெசேஜஸ் டெலிட் செய்வதென்று.

இதே  நிலைமை  தான் என்னுடைய ஈமெயில் அக்கௌன்ட்... கிட்டத்தட்ட மூனாயிரதிற்க்கும்  மேற்பட்ட மடல்கள் குவிந்துள்ளன. படித்தவுடன் தேவையற்ற மடல்களை டெலிட் செய்வதில்லை. அதற்கென்று ஒரு நாள் ஒதுக்கி "clean up day" என்று சொல்லி வீட்டில் பந்தா காட்டிக்கொண்டு பழைய மடல்களை  டெலிட் செய்து கொண்டிருப்பேன். இன்று மாலை தேநீர் அருந்திக்கொண்டே இந்த வேலையில்  ஈடுபட்டு கொண்டிருந்த போது தோன்றிய விஷயம் தான் இது. கைப்பேசி , ஈமெயில் அக்கௌன்ட் போலவே என் நினைவகத்திலும் (memory)  பல தேவைற்ற நிகழ்வுகள்,  நினைவுகளை எல்லாம் குப்பையை போன்று போட்டு வைத்துகொள்கிறேன்.

ரோடோரத்தில் எவனோ ஒருத்தன் என்னை பார்த்து கிண்டல் செய்திருக்கலாம், நான் பைக்கில் செல்லும் போது ஆட்டோ டிரைவர் ஏளனம் செய்திருக்கலாம், பஸ்ஸில் சில்லறை இல்லை என்பதற்காக  பஸ் நடத்துனர் கடித்துக்கொண்டிருக்கலாம், எவனோ ஒருத்தன் பின்னாடி  இருந்து கேலி பேச்சுக்கள் வீசி இருக்கலாம், பக்கத்தில் நிற்பவன் இம்சை படுத்தி இருக்கலாம்...ஏன்... வீட்டில் கூட  ஏதோ ஒரு சந்தர்பத்தில் மாமியாரோ/கணவரோ கடுப்புடன் ஏதேனும் சொல்லி இருக்கலாம்.

இந்த விஷயங்களை என் மனதில் அசை போட்டுகொண்டு வீணாக மனவுளைச்சலுக்கு ஆளாகிறேன். பாதி நேரம் அவர்கள் சொல்லும் விஷயத்தை விட "அவள்/அவன் எப்படி சொல்லலாம்" என்ற எண்ணம் எழுவது தான் அதிகம். இந்த கோபம் கொப்பளித்து  சிறிது நேரத்தில் தானகவே தணியும், என்றாலும் இதை எல்லாம் என்னுடைய நினைவகத்தில்  வைத்துக்கொள்கிறேன்.  அவ்வப்போது இந்த நிகழ்சிகளை நினைவு கூர்ந்து தேவைற்ற கோபம் அடைகிறேன்.

எங்கோ படித்த ஞாபகம், சில  நேரங்களில் நம் நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும் negative thoughts வாயிலாக பல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று. உதாரணத்திற்கு, என்றோ ஒரு நாள் எல்லாமே சரியாகத்தான் இருக்கும், விடியல் நன்றாகவே விடியும், மற்ற நாட்கள் விட அன்றைய நாள் நல்லபடியாகவே இருக்கும் , இருப்பினும் ஏதோ ஒரு எண்ணம் தோன்றும், எதுவுமே சரி இல்லை போன்ற உணர்வு, எளிதாக உணர்ச்சிவசப்படுவது, ம்ச் "செத்துவிடலாம்" போல இருக்கு என்ற எண்ணம், ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது?, மத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்களே, நாம் ஏன் அப்படி இருக்க முடியல?, என்னத்தே செய்து என்னத்தே ஆகப் போகுது, நான் இருக்கிற நிலைமைக்கு இதையெல்லாம் எங்கே செய்ய முடியும்? , சுய பச்சாதாபம், இப்படி சில... இவ்வாறாக  தோன்றுவதற்கு என்ன காரணம், நம் நினைவகத்தில்  நாம் குப்பையாக சேர்த்துவைத்திருக்கும் negative thoughts துளிர் விட்டு, கொடிகளாக நம் எண்ணங்களை சூழ்ந்து படர்ந்து கொண்டிருப்பதால் தான்.

இது  வரை  மொக்கை  போட்டது  போதும் இப்போ என்னதான் சொல்லவறீங்க என்று நீங்கள் முறைப்பது எனக்கு தெரியுது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான், உங்கள்குக்குள் ஒரு அளவுகோல்(sensor) வைத்துகொண்டு  நீங்கள் சந்திக்கும்  நல்ல விஷயங்களையும்  கெட்ட விஷயங்களையும் செயலாக்கம் (processing) செய்து கெட்டவைகளை உங்கள் நினைவகத்தில் இருந்து அழித்துவிட்டு முடிந்தவரை நல்ல விஷயங்களை மட்டுமே வைத்துக்கொள்வதுதான்.

அலுவலகத்தில் யாரோ  தன்னை காயப்படுத்திவிட்டார்கள் என்றோ தன்னை மேனேஜர் திட்டிவிட்டார் என்றோ காரணம் சொல்லிக்கொண்டு வேலை விட்டே நின்று விடுபவர்கள் உண்டு. இதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் மீது அவருக்கு இல்லாத தன்னம்பிக்கைதான். 

மற்றும்  சிலர் , அவர்களால்  செய்ய முடியாது என்று நாம் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடித்துவிடுவார். அது அவர்கள் மீது அவருக்கு இருக்கும் தனம்பிக்கைதான் முக்கிய காரணம். இவர்களிடம் இருக்கும் ஒரு விஷேஷதன்மை என்னவென்றால் தங்களை காயப்படுத்தும்  அதிகாரத்தையோ உரிமையோ  மற்றவர்களுக்கு கொடுப்பதே  இல்லை. இவர்களின் இந்த விசேஷ செயல்பாட்டுக்கு காரணம் என்னவென்றால்,   இவர்கள் அனைவரும் கையாளும் ஒரே உத்தி தங்களுடைய நினைவகத்தில் இருக்கும் எண்ணங்களில் அவ்வபோது தேவையற்றவைகளை நீக்கிவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்து பரிசோதித்து அதனை செயல்படுத்துவது தான்.

முயற்சி செய்யுங்கள்..

Thursday, June 17, 2010

நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா ?

என்னோட நண்பர் ஒருத்தர் இன்னைக்கு சாட்ல வந்து "பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல. இப்படியே போனா பதிவுலகத்துல எல்லோரும் உங்கள மறந்துடுவாங்க"ன்னு குண்டு தூக்கி போட்டு போய்ட்டாரு. அவரு பிரபல பதிவர் வேற..பழம் தின்னு கொட்டைய போட்டவரு சொன்னா உண்மையாதான் இருக்கும். அப்போவே ஆரம்பம் ஆயிடுச்சு பதிவு போடணும்ன்ற டென்ஷன்.


எப்படி தான் தினம் ஒரு பதிவு, வாரத்துல மூணு நாலுன்னு சர்வ சாதாரணமா போடறாங்களோ தெரியல. சீனியர்  பதிவர்கள் கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு  கேட்டேன். உட்காந்து  யோசிப்போமில்ல'ன்னு ஒருத்தர், குந்திக்கினு யோசிப்போமிலன்னு ஒருத்தர்  (உக்காந்து யோசிக்கிறதும் குந்திக்கினு யோசிக்கறதும் ஒன்னுதானே ன்னு கேக்குற ரகமா இருந்தா இப்படியே எஸ் ஆயிக்கலாம்..உங்க அறிவுக்கு ஏத்த இடம்  இது இல்லை) ரூம் போட்டு யோசிப்போன்னு இன்னொருத்தர், மொட்டைமாடில மல்லாக்கு படுத்து வானம் பார்த்து யோசிப்போம்ன்னு ஒருத்தர், குப்புற படுத்திக்கிட்டு யோசிப்போம்னு சிலர்....ஹ்ம்ம் இன்னும் சில ரகளையான பதில்கள் வந்துது அது எல்லாம் இங்க போட முடியாதுங்கறதால போடல.  

பதிவர்களே என்னோட கேள்வி எல்லாம் இது தான். ஏனுங்க புதுசா வந்தவங்க எங்களுக்கு யோசிக்கறதுக்கு ஒரு பொசிஷன் கூட விட்டு வைக்கலியே நாங்க எல்லாம் எப்படி யோசிக்கறது எப்படி பதிவு போடறது. இதை எல்லாம் கேட்டு  எனக்கு பதிவு என்ன எழுதணும்ன்னு யோசனை போய் நாம எந்த பொசிஷன்ல யோசிக்கனும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். பரிட்சையில கூட இவளோ டென்சன் ஆனது இல்ல...ஏகப்பட்ட டென்சன் ஒரு பதிவு போடறதுக்குள்ள. பரிட்சையிலயாவது  காப்பி  அடிச்சு பாஸ் பண்ணிடலாம் ஆனா  இங்க காப்பி  அடிச்சா காப்பிரைட்  பிரச்சனை பண்றாங்க.

பதிவுலகத்தையே அலசி ஆராய்ஞ்சதுல ஒரு பொசிஷன்  கிடைச்சது. இதுக்கும் ஏகப்பட்ட டிமாண்டுன்னு கேள்விப்பட்டு  விட கூடாதுன்னு ஏகப்பட்ட ரெகமென்டேசன்ல வாங்கீருக்கேன்.சும்மா சொல்லகூடாது இந்த பொசிஷன்ல யோசிக்கும்போது மண்டைக்குள் ரத்த ஓட்டம் அதிகரித்து அறிவு கண்ணு தானா திறக்குது. அப்படியே சிந்தனைகள் அருவியா ஊத்துது. இப்படி தான் நேத்து யோசிக்கும்போது ஒரு டவுட் வந்துது. அதை  நான் முகபுத்தகத்திலும் (facebook)   ஆர்குட்லயும் (orkut)  போட்டேன்.

"எனக்கு  ஒரு டவுட்... மனிதர்களுக்கு "SHUT UP"  கம்ப்யூட்டர்க்கு ஏன் "SHUT DOWN"? . செய்யபோற வேல ஒன்னுதானே.."

இந்த கேள்விக்கு சில நண்பர்களின் பதில் மிக சுவாரசியமாக இருந்தது.


//ரொம்ப ஜிம்பிள்
மனுசனுக்கு வாய் மேல இருக்கு
அதான் ஷட் அப்


மேசைக் கணினியில் சிபியு மேசைக்குக் கீழ
இருக்கு அங்க குனிஞ்சுதான் ஷட் டவும் செய்யணும்
அதான் ஷட் டவுண். மேதைகளின் மேதை//

இவரு நெசமாலுமே மாமேதை தான். என்னமா பட்டைய கெளப்புறாரு :))

//லேப்டாப் வேலை முடிஞ்சா அதை மூடி வக்கிறோம். அதுனால “DOWN"..
மனுசன் வேலை முடிஞ்சா எந்திருச்சு போய்டுவான். அதுனால “UP"//

மக்கா.. எப்படிதான் இப்புடி எல்லாம் சிந்திக்கிறாங்களோ..

//கம்ப்யூட்டர் வேலை முடிஞ்சா அதுக்கு பீஸ் புடுங்கிடுறோம்... Down
ஆனா நமக்கு வேலை முடிஞ்சதுக்கு அப்புறாம் தான் பல்பே எரியுது Up//

//மனிதர்களை shut up னு சொன்னாத்தான் பேசவே ஆரம்பிப்பாங்க :)
ஆனா கம்ப்யூடர் அபப்டியில்ல ... shut down பண்ணின உடனே அமைதி ஆகிடும் :))//
எப்போவுமே எனக்கு ஒரு கவலை இருந்துட்டே இருக்கும். நம் நாடு  வல்லரசு ஆகுமான்னு. நம்ம ஆளுங்க இப்படி எல்லாம் யோசிக்கறது பார்த்து அந்த கவலை போய்டுச்சு இப்போ.

புனைப்பெயர் தேவை..
எல்லோரும் அவங்களுக்கு ஒரு புனை பெயர் வச்சுக்கிட்டு தான் பதிவு எழுதறாங்க. நாமளும் ஏன் ஒரு புனைவு பெயர் வச்சுக்க கூடாதுன்னு யோசிச்சு சில புனைபெயர்கள் தேர்வு செய்திருக்கேன்.
கருவாச்சி காவியம், கருத்து கருத்தம்மா, கருத்தம்மா கருத்துக்கள் etc etc . உங்களுக்கு ஏதேனும் புனை பெயர் தோன்றினால் சொல்லுங்க.
(இதை படிச்சிட்டு, "நீங்க கருப்பா இருப்பீங்களா?" ன்னு கேட்டு பின்னூட்டம் போடறவங்க, ஒரு வருசத்துக்கான fair & lovely எனக்கு குரியரில் அனுப்பி வைக்கணும் சொல்லிட்டேன்.)

சும்மா சொல்றேன் தெரிஞ்சுக்குங்க...
நாணயத்தை சுண்டிப்போடற பழக்கத்தை ஏற்படுத்தியவரு யாருன்னு கேட்டா உடனே சூப்பர் ஸ்டாருன்னு சொல்றாங்க..ஏன்னு கேட்டா அவருதான் "சிவாஜி" படத்துல படு ஜோரா பூவா தலையா சுண்டி போடுவாறாம். குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்.

என்னா நக்கலுஒரு நிமிட கதை...
என் நண்பன் சக்தி BSC (Electronics) படிச்சு முடிச்சிட்டு வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டு இருந்தான். ஒரு நாள் திடீர்னு NOKIA கம்பெனில இருந்து இண்டர்வீயுக்கு அழைப்பு வந்துது. சக்திக்கு பயங்கர சந்தோசம். அடுத்த நாளே  இண்டர்வீயுக்கு வர சொன்னாங்க. மறுநாள் காலைல சக்தி அதிசயமா சீக்கரம் எழுந்திரிச்சு  நல்ல தோச்சு இஸ்திரி பண்ணின டிரஸ் போட்டுக்கிட்டு கிளம்பினான்.
கம்பெனிக்கு போனவுடனே 10 நிமிஷம் வெயிட் பண்ண சொன்னாங்க. 10 நிமிஷம் கழிச்சு இண்டர்வீயு ரூம்ல இருந்து அழைப்பு வரவே அவனும் உள்ளே போனான்.
சக்தி உள்ள நுழைஞ்சதும் அவனோட பைல் கொஞ்ச நேரம் புரட்டி பாத்துட்டு , வழக்கம் போல படிப்பு, குடும்ப பின்னணி, வேலை செய்த முன்னனுபவங்கள் போன்ற  தகவல்கள் எல்லாத்தையும்  கேட்டு அறிந்தார் HR. அவருக்கு சக்தியின் பதில்கள் கொஞ்சம் பிடித்து போகவே அடுத்த கேள்வி கேட்டார்.
''ஏதாவது ஒரு குறிப்பிட்ட டிப்பார்ட்மென்டுல வேலை பாக்கணும்ன்னு விருப்பம் இருக்கா?" 
"எஸ் சார். முடிஞ்சா கம்பெனி CEO இல்லன்னா அட்லீஸ்ட் ஜெனரல் மேனேஜரா  மேனேஜ்மென்ட்ல இருக்க விருப்பம்.."
இதை  கேட்ட  அந்த HR மேனேஜர்க்கு அதிர்ச்சியும் கோபமும் பொங்க.....
''உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?'  என்றார்..
சக்தி ஒரு நொடி யோசித்து விட்டு ..
''ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?'' 

நாங்களும் கவிதை எழுதுவோம்ல..
வரம் கேட்டேன் இறைவனிடம்
இரவோடு இரவாக 
என்னை த்ரிஷாவாக
மாற்றிவிட சொல்லி..
மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?
த்ரிஷாவின்  மடியில் உயிர் பிரியும் போது!!!
என்று நீ சொன்ன அந்த
நொடிப்பொழுதில் !

சும்மா சிரிங்க..
மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..
மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..

ஹ ஹி மொக்கை வேணுமா...
நேத்து ராத்திரி டி.வி'ல வானிலை அறிக்கை கேட்டாயா?
நான் கேட்கலை, அவங்கதான் சொன்னாங்க.

என்னடா இது தலைப்புக்கும்  பதிவுக்கும் சம்மந்தமே இல்லையேன்னு கேக்குறீங்களா?. இப்போ இதாங்க பாஷன். அது எல்லாம் ஒத்துக்கப்படாது  பதிவுக்கு பொருதம்மா தான் தலைப்பு வைக்கணும்ன்னு அடம் புடிச்சா. கடைசி வரை படிச்சிட்டு கமெண்ட் போடாமா போறியே நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனான்னு கேட்ப்பேன். இப்போ  ஒத்துபோகுதுல்ல..

Wednesday, May 19, 2010

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல...

என்ன பதிவு எழுதுவது என்று யோசித்து கொண்டு இருக்கும் சமையத்தில் தான் நண்பர் ஆதவன் "தேர்வு" என்ற தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். ’ஆத்துல போற தண்ணிய அய்யா குடி அம்மா குடி’  என்ற மாதிரி பத்தோட பதினொன்னா பாவம் போனா போகட்டும்ன்னு என்னை கூப்பிட்டு இருந்தாரு. நமக்கு சொல்லவா வேணும் பெருமை தாங்கல....தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி பாஸ்.

பள்ளி  நாட்கள், கல்லூரி நாட்கள் எத்தனை இனிமையானதா இருந்தாலும். என்னை ஏன்டா படைச்ச ஆண்டவான்னு பொலம்ப வச்சது பரீட்சை நாட்கள். ம்ம்ம்.. மன்னிக்கணும் இந்த இடத்தில ஒரு சின்ன கொசுவத்தி.(flashback).

எங்க ஊரிலிருந்து இருபது  கிலோமீட்டர் தள்ளி தான் நாங்க படிச்ச பள்ளிக்கூடம் இருந்தது.
எங்க ஊரிலிருந்து நாங்க மூணு பேரு (நான், பிரேமா, உமா) ஒரே ஸ்கூலில் ஒரே வகுப்பில் படித்தோம். LKG முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூட பேருந்தில் சென்று கொண்டு இருந்தோம்.10 ஆம் வகுப்பில் இருந்து  நாங்க மூவரும்  டவுனில் இருக்கும் எனது சித்தி வீட்டில் தங்கி படித்தோம். பரீட்சை நேரங்களில் நாங்க செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது, கேலியும் கிண்டலுமா இருக்கும். பிரேமாவுக்கு பொறுப்புணர்ச்சி ரொம்ப ஜாஸ்தி..எப்போ பார்த்தாலும்  'நம்ம நல்லா படிக்கணும் நல்ல வேலைக்கு  போகணும்னு' ஏகப்பட்ட அட்வைஸ் செய்ஞ்சே என்  உசுரு வாங்குவா. ரொம்ப ஸ்ட்ரிக்ட், அவ சொன்னத படிக்கலன்னா  திட்டமாட்டா  அடிக்க மாட்டா...ஆனா மினிமம் ஒரு அரை மணி நேரம் லெச்சர் குடுப்பா.

பரீட்சை நேரங்களில் ராத்திரி 12 மணி வரை படிக்கணும்ன்னு ஆர்டர் போட்டுடுவா. 'History' புத்தகத்த கையில  எடுத்துகிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் செவுத்துல சாஞ்சிகிட்டு  கால நீட்டிகிட்டு உக்காருவோம். மூணு பேரு கால்களும் கிட்ட கிட்ட  வச்சிருப்போம் இதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு படிக்க படிக்க அது என்னனு உங்களுக்கே தெரியும். படிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலையே என் கண்ணு சொக்கி போய்டும். டப்புன்னு கால போட்டு தட்டி எழுப்புவா உமா...திடீர்னு முழிப்பு வரும் , நானும்  சுதாரிச்சிக்கிட்டு திரும்பவும் படிக்க ஆரம்பிப்பேன். அடுத்த 10 நிமிஷல்துல எனக்கே தெரியாம தூங்கிடுவேன். உக்காந்துட்டே தூங்கும் போது  மடி மேல இருக்கற புத்தகம் எனக்கே தெரியாம கீழே விழுந்துடும், வாயில் இருந்து ஜொள்ளு கூட வரும்.. அந்தளவுக்கு ஆழ்ந்த சுகமான தூக்கம். அப்போ இந்த சண்டாளி உமா பொண்ணு  ஏதாச்சும் பேப்பரை எடுத்து சுருளாக சிகரட்டு மாதிரி செய்ஞ்சி வாயில வச்சுடுவா..இல்லனா வத்திகுச்சி எடுத்து மூக்குல போடுவா. நானும் சடார்ன்னு எழுந்துடுவேன்...என்னை பார்த்து கேலி பண்ணி சிரிப்பாங்க ரெண்டு பேரும் . கோவம் பொத்துக்கிட்டு வரும். என்ன செய்ய விதி..இந்த சிச்சுவேசன்க்கு ஒரு பாட்டு..

ஊருசனம் தூங்கிருச்சு,
ஊத காத்தும் அடிச்சிரிச்சு,
இந்த ரெண்டு பிசாசுங்க
என்னை தூங்க விடலியே,
படிப்பும் மண்டையில் ஏரலியே...
சில சமயத்துல படிக்கிற ஆர்வத்துல அவங்க என்னை கவனிக்க மறந்திருப்பாங்க. நானும் நல்லா தூங்கி வழிவேன், கனவுல டக்குன்னு பிரேமாவோட முகம்  வந்து போகும், சடார்ன்னு முழிப்பு வரும். எப்போ எல்லாம் திடுதிப்புன்னு எழுந்திருக்கிறேனோ அப்போ எல்லாம் கால லேசா ஆட்டுவேன். நான் தூங்காம படிச்சிட்டு இருக்கேன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்கு தான்  இந்த சிக்னல். இம்புட்டு கஷ்டப்பட்டு  நடிச்சிட்டு இருக்கிற சமையத்துல, இந்த உமா  ராக்ஷசி  இருக்காளே சும்மா இருக்க மாட்டா 'ஏண்டி உன் காலு பத்து   நிமிஷத்துக்கு ஒரு தடவ ஆடிக்கிட்டே இருக்குன்னு'  பிரேமாவை உசுப்பு ஏத்தி விடுவா. அப்புறம் என்ன.. பிரேமா ஒரு 1 /2  மணி நேரம் லெச்சர் குடுக்க ஆரம்பிச்சுடுவா. இந்த கொடுமைக்கு 'History' பாடத்தையே படிச்சிருக்கலாம் போலயேன்னு தோணும். இந்த ரணகளத்துலையும் இந்த உமா பொண்ணு  ' ஹே மறந்தே போய்டோம்  இந்தியா , அமெரிக்கா  மாப் வேற பிராக்டீஸ் பண்ணனும்' ன்னு சொன்னவுடனே பிரேமா
என் தலைல கொட்டு போட்டு  ' ஏன்டி பாரு அவளை எவளோ இண்டரெஸ்ட்டா படிக்கிறா நீ மட்டும் தான் படிக்க மாட்டேங்குற, படிச்சா தான் நாளைக்கு நாம் டாக்டரோ இஞ்ஜினியரோ ஆக முடியும்'  ன்னு  பேசிட்டே போவா. நான் என்னத்த சொல்றது அது எல்லாம் அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் எவளோ கொடுமைன்னு. நட்பு என்னோட வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடி இருக்கு பாருங்க.
 
காலைல எக்ஸாம் ஹால் போகறதுக்கு முன்னாடியே காப்பி அடிக்கிற டிப்ஸ் & சிக்னல் எப்படி குடுக்கனும்னு எல்லாம் பிளான் பண்ணிடுவோம். என்ன பிளான் பண்ணி என்ன பிரயோசனம் என் பெத்தவங்க செய்த தப்புனால எங்களோட பிளான் சில நேரங்களில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். அது என்ன தப்புன்னு கேக்குறீங்களா..அந்த கொடுமை என்னன்னா அது என்னோட பேரு தாங்க. என்னோட பேரு "A" ல ஸ்டார்ட் ஆகரதுனால  நான் எப்போவுமே முதல் பெஞ்ச் தான். சோ காப்பி அடிக்கற சான்ஸ் ரொம்ப கம்மி.  'சரியான விடையை தேர்ந்தெடுக' மாதிரி கேள்விகளுக்கு மட்டும் சைகையாலேயே கேட்டுப்போம்.
பிட் எல்லாம் எடுத்திட்டு போனது கிடையாது...கணக்கு பாடத்துல வர பார்முலா(formula) எல்லாம் உள்ளங்கைல எழுதிடுவேன். அப்புறம் குட்டி குட்டி theorems எல்லாம் என்னோட எக்ஸாம் pad 'ல  பென்சில் வச்சு எழுதிட்டு போவேன். காப்பி அடிச்சு முடிச்சதும் ரப்பர்ல அழிச்சிடுவேன். எனக்கு பக்கத்துல +1, +2 படிக்கற பசங்க உட்கார்ந்து இருப்பாங்க. அவங்களுக்கு நடுவுல நான் உக்காந்து இருப்பேன். என்னோட நல்ல நேரமோ என்னமோ இது வரைக்கும் என் பக்கத்துல உட்க்கார்ந்த பசங்க எல்லாம் மக்கு பசங்க தான்.. பத்து நிமிசத்துல பரீட்சை முடிச்சிட்டு  உட்க்கார்ந்து இருப்பாங்க. என் பின்னாடி பிந்து'ன்னு என்னோட கிளாஸ்மெட் தான் உட்க்கார்ந்து  இருப்பா ..நான் உஸ் உஸ் ன்னு கூப்பிட்டு அவளோட பேப்பர்   கேட்பேன். "தருவீயா? தரமாட்டீயா? தரலைன்னா உன்பேச்சு கா!"
அவளோ பயந்து தரமாட்டேன்னு சொல்லிடுவா.

என்னடா பண்றதுன்னு நான் முழிக்கற முழிய பாத்துட்டு பக்கத்துல இருக்கற பசங்க பின்னாடி திரும்பி அவளோட பேப்பர் புடிங்கி குடுப்பாங்க. நான் காப்பி அடிச்சு முடிச்சதும் அந்த பேப்பர் எடுத்து அந்த பொண்ணுகிட்ட குடுத்திடுவாங்க. அந்த பொண்ணோட பேப்பர் அவளுக்கு போய் சேர்றதுக்குள்ள என் வாய் வழியா ஹார்ட் வெளிலே வந்துடும் போல இருக்கும். கடவுள் இருக்காருன்னு நம்பிக்கை வந்ததே இந்த பசங்களை பார்த்து தான். பரீட்சை  முடியற வரைக்கும் எனக்கு விநாயகர் , முருகன் , சிவன், எல்லாமே அந்த ரெண்டு பசங்க தான். இதே மாதிரியே காப்பியும்  கூத்துமா திக்கு தெணறி ஒரு வழியா 10ஆம்  வகுப்புல first class 'ல பாஸ் பண்ணியாச்சு.

பதினொன்றாம் வகுப்பில் (Elective groups) இருந்தது. முதல் இரண்டு க்ரூப்ல (கணிதம், வரலாறு, உயிரியல், இயற்பியல்) போன்ற பாடங்கள். மூன்றாம்  குரூப் வணிகம், கணினி  போன்றவை. நன்கு படிப்பவர்கள் முதல் இரண்டு க்ரூப்ளையும் என்னை போன்ற அறைந்த வாலுகள் மூன்றாவது  க்ரூப்ளையும் சேர்ந்தோம். பிரேமா முதல் குரூப் எடுத்ததும் எனக்கு பயங்கர சந்தோசம். இனி நமக்கு பிரேமாவின் லெச்சரிலிருந்து  விடுதலை விடுதலை.  உமாவுக்கு நர்ஸ் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்ததால் இரண்டாவது குரூப் (உயிரியல்) எடுத்த்தாள். பிரேமாவை பார்த்து ... அல்ஜிப்ரா இஸ் கோப்ரா’  என்றும்  உமாவை பார்த்து .....செத்த பிணத்தை அறுக்கிறவேலை, புண்ணைக் கழுவி மருந்து போடுறது நர்ஸ் படிப்பு சீ..சீ.. என்று  கிண்டல் பண்றதுமாவே போயிட்டு இருந்தது +1 வாழ்க்கை.
பொதுவாக மற்றவர்களை போல தினமும் படிக்கும் பழக்கம் இல்லை, தேர்வு நேரங்களில் மட்டும் புத்தகம் எங்கு இருக்கு என்று தேடி தூசு தட்டிவிட்டு படிப்பேன்.

+2 பரீட்சைக்கு பெரிதாக பயந்தது இல்லை. காப்பி அடிப்பதில் கொஞ்சம் வித்தைகள் கற்றுகொண்டதால் சிரமம் ஏதும் இல்லை (இது எல்லாம் ஒரு பொழப்பா என்று நீங்க திட்டுவது காதில் விழுகிறது). +1 &  +2   சேர்ந்தே கும்மி அடித்ததால் தோழிகளுடன் புரிதல் சற்று அதிகம் இருந்தது. இந்த புரிதல் தான் பரீட்சை நாட்களில் போட்ட பல பிளான் வெற்றி அடைய வச்சுது. என் விதிப்படி எப்போவும் நான் முதல் பெஞ்ச் தான். பல நேரங்களில் என் முன்னாடியே தான் சூப்பர்வைசர் நின்னுகிட்டு இருப்பாரு. பரீட்சை  ஹாலில் சூப்பர்வைஸ் செய்ய வரும் வாத்தியார்கள் எல்லாம் இஞ்சி தின்ன குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பின்புறம் கைகட்டி தர்பார் மண்டபத்தில் நடப்பது போல் நடக்கும் போது நான் பக்கதுல இருக்கிற பொண்ணு பேப்பர் வாங்கி காப்பியில்  மும்மரமாக மூழ்கி இருப்பேன்.

 
சில சமயம்  சூப்பர்வைஸ் செய்ய வரும் வாத்தியார் ரொம்ப சோம்பேறியா இருப்பாரு  உட்க்கார்ந்த  இடத்துல  இருந்து நகர மாட்டாரு. அதுவும் என் முன்னாடியே என் பேப்பரையே பாத்துட்டு 'என்ன இந்த பொண்ணு எதுவுமே எழுதாம முழிக்குதுன்னு'  யோசிக்கிற போல தோணும். ஏதாச்சும் தெரிஞ்சாதானே எழுதறது. ஏதோ எழுதற மாதிரி நடிக்கறதுக்குள்ள உசுரே போய்டும் ,அதுவும் இல்லாம பக்கத்துல பக்கம் பக்கமா எழுதுறவள பார்த்தா டென்ஷன் வரும் பாருங்க அதையும் அனுபவித்தா தான் தெரியும்.
ஹ்ம்ம் என் கஷ்டம் அவருக்கு எப்படி புரியும். இப்படி பட்ட வாத்தியார் வந்துட்டா.. எங்க இருந்து நாங்க போட்ட காப்பி அடிக்கும் பிளான் வொர்க் அவுட் ஆகறது. இந்த மாதிரி நேரத்துல தான் மூளையை உபயோகிப்போம். லாஸ்ட் பெஞ்ச்ல இருக்கும் பொண்ணு பார்த்து  சிக்னல் குடுப்பேன், அவளும் என்னோட கஷ்டம் புரிஞ்சுகிட்டு , அவ எழுந்து 'சார் கொஸ்டின் பேப்பர்ல ஒரு சந்தேகம் இருக்குன்னு ' சொல்லுவா. வாத்தியாரும் எழுந்து லாஸ்ட் பெஞ்ச்கு போய் சந்தேகம்  தீர்த்து வச்சுட்டு வர்ற அந்த காப்ல பக்கதுல இருக்குற பொண்ணு  பேப்பர் வாங்கிடுவேன். பின்னாடி இருக்கற பொண்ணு காப்பி அடிப்பதற்கு என்னோட பேப்பரை பெஞ்ச் மேல கொஞ்சம் நடுவுல வெப்பேன் அவளும் பாத்து எழுதிடுவா, அப்படி இல்லனா பேப்பர் நைசா கீழ போடுவேன், அவளுக்கு பார்த்து எழுதறதுக்கு வசதியா இருக்கிற மாதிரி, வாத்தியார்  பாத்துட்டு பேப்பர் ஏன் கீழ இருக்குன்னு கேட்பாரு  நான் டக்குன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி  "ஐயையோ சாரி சார் தெரியாம கீழ விழுந்துடுச்சு" ன்னு சொல்லி பேப்பர் எடுத்து வச்சுப்பேன். எப்படியோ ஒரு வழியாக +2 தேர்வு நல்ல படியாக காப்பி அடிச்சு பாஸ் ஆயாச்சு. படிக்காமலே நான் 89 % விடிய விடிய படிச்ச பிரேமாவும் உமாவும்  72 % , 69 % தான் வாங்க முடிந்தது. அன்னைக்கு அவங்க என்னை மொறச்சு பார்த்த பார்வை இன்னைக்கும் அப்படியே என் நெஞ்சுல ஈரம் ஆறாம இருக்கு. 


கல்லூரிக்குப் போய்விட்டால், மரியாதை இல்லாமல் பேசும் வாத்தியார் இருக்கமாட்டார், அடி உதை இருக்காது, தோழிகளுடன்
இஷ்டம்போல ஜாலியாகத் திரியலாம் இப்படியான எண்ணங்களுடன்தான் கல்லூரிக்குள் அடி வைத்தேன். கல்லூரியில் சேர்ந்தவுடன் ஒரு குரூப் பார்ம்  ஆச்சு..அன்றிலிருந்து வகுப்பில் உள்ள மத்த பசங்களை ஓட்டுவதும் ,கிண்டல் செய்வதுமாக  போய் கொண்டிருந்தது. படிக்காமலேயே தேர்வு எழுதினாலும் கூட எல்லா பாடங்களிலும் பாஸ் ஆக முடிந்த என்னால், இந்த accounts மட்டும் சுத்தி போட்டாலும் வரல. அப்படியும் accounts எக்ஸாம் அன்னைக்கு formulas எல்லாம் கையில எழுதிட்டு போவேன்..ஆனாலும் அந்த formula எங்க  யூஸ் பணனும்னு தெரியாம நொந்து நூடுல்ஸ் ஆனது ஏன் கேக்குறீங்க..பள்ளியில் காப்பி அடிக்க முடிந்த அளவுக்கு கல்லூரியில் காப்பி அடிக்க சந்தர்பம் கிடைக்காதது எந்த ஜன்மத்தில் செய்த பாவமோன்னு அடிக்கடி பீல் பண்ணி இருக்கேன். மத்த பாடங்களில் ஓரளவுக்கு நல்ல ரிசல்ட் வந்தாலும்  accounts மட்டும்  ரெண்டு வருசமும் அரியர் தான். எனக்கு இதான்  பிரச்சனை. எனக்குன்னு வரும்போது எதுவுமே நடக்குறது இல்ல. அப்படி நான் என்ன பெரிசா கேட்டேன். நீங்கலாம் வாங்குற மாதிரி Distinction ஆ கேக்குறேன் சாதாரண பாஸ் மார்க் தானே அது ஏன் எனக்கு மட்டும் கிடைக்க மாட்டேங்குது. எப்படியோ கடைசியா மூணாவது  அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணிட்டேன். 

கடைசி ஆண்டு பரீட்சைல நடந்த கூத்துதான் இது. Economics பேப்பர் எனறால் எங்க செட்ல எல்லோர்க்கும் கஷ்டம். எங்க கிளாஸ்ல சந்தோஷ்'ன்னு ஒரு பையன் சொன்னான்,  2000 ரூ இருந்தால் அவனுக்கு தெரிந்தவர் மூலமாக
கொஸ்டீன் பேப்பர் வாங்கிவிடலாம் என்று. நாங்க எல்லாம் அவங்க அவங்க கையில இருந்த காசு போட்டு வாங்கினோம். இதுல இருக்கற கேள்விகள் மட்டும் படிச்சா போதும்னு சந்தோஷ் சொல்ல, நாங்க எல்லோரும் அது  மட்டும் தான் படித்தோம். மறுநாள் காலைல எக்ஸாம். நாங்க எப்போவுமே இருக்கற டென்ஷன் இல்லாம கூலா போனோம் நமக்கு தான் எல்லாம் தெரியுமென்ற தெனாவட்டோட. கொஸ்டின் பேப்பர் பார்த்தவுடனே ஹார்ட்டே நின்னு போய்டும் போல ஆயிடுச்சு. நாங்க படிச்ச கேள்வி ஒன்னு கூட வரல. பரிட்சைல பெயில் ஆயிடுவுமோ என்ற கவலை விட...அந்த 2000 ரூ போன கவலை தான் பெருசா தெரிஞ்சுது. ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. ஏதோ எழுதிட்டு வெளியில வந்து முதல் வேலையா அந்த பையன் சந்தோஷை போட்டு மொத்து மொத்துன்னு மொத்தினோம்.

ரிசல்ட்ஸ்  வந்தது  நான் ஆல் பாஸ்...என்னோட செட்ல எல்லோரும் economics'ல பெயில். அதுக்கு அப்புறம் என்னோட நிலைமை எப்படி இருந்திருக்கும்ன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
எல்லோருக்கும் அவங்க பெயில் ஆனது விட நான் பாஸ் ஆனது அவங்களால தாங்க முடியாத துயரமாவே இருந்துது.

Tuesday, May 4, 2010

"யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" - விமர்சனம்


இணையத்தில்  அறிமுகமான நண்பர்  'நிலாரசிகன்' அவர்கள். நிலாரசிகனைப் பற்றியோ அவரது கவிதைகள் பற்றியோ நான் சொல்லித்தான் தெரியவேண்டியது இல்லை. தமிழ் பதிவர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் மற்றும் தமிழ் இணைய உலகில் மிகவும் அறியப்பட்டவர் நிலாரசிகன். இவரை பார்த்தது இல்லை, அதிகமாக பேசியதும் இல்லை. ஒரு முறை மடலில் பேசிக்கொண்டதோடு சரி. இந்த புத்தகம் படித்த பின் இவரை சந்தித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.
'யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்' நிலாரசிகனின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பை பற்றிய விமர்சனம் எழுதவே  நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  இந்த  சிறுகதை தொகுப்பானது 17 சிறுகதைகளை கொண்டது. ஒவ்வொரு கதையையும்  ஓரிரு பக்கங்களுக்கு மிகாமல் சொல்ல வந்த விஷயத்தை செவ்வனே சொல்லி முடித்திருப்பது இந்த சிறுகதை தொகுப்பின்  சிறப்பு அம்சம். அனைத்து கதைகளுமே மிக அருமை அதில் என்னை வெகுவாய் கவர்ந்த சில கதைகள் பற்றி என் கருத்துக்கள் இங்கே பதிவு செய்கிறேன்...

யாரோ
ஒருத்தியின் டைரி குறிப்புகள்:
சாதரணமாக படிக்க ஆரம்பித்த எனக்கு படிக்க படிக்க ஏதோ இனம் புரியாத சோகம், சுமை சூழ்ந்துகொள்கிறது. படித்து முடித்த கணம் மனதில் ஒரு சுமை ஏறியதை உணர்ந்தேன். இந்த கதையில்  வரும் அந்த சிறுமியின் கதாபாத்திரம் படிப்பவர்  மனதில் பதியுமாறு  கதையை நடத்தி செல்கிறார் நிலாரசிகன். தமிழ் படங்களில் வெளிப்படுத்தும் 'ஆர்பாட்டம்' , 'ஆபாசம்' இல்லாமல் மற்றும் ஆபாச  சுவடுகள் கூட படாமல் அந்த சிறுமியின் வேதனைகள், அல்லல்கள், அவஸ்தைகள் நம் ஆழ்மனதில் நிழற் படங்களாய் பதிய வைக்கிறார். சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று சிக்கி தவிக்கும்  பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை பற்றி எத்தனை படித்திருந்தாலும், இந்த கதை தனித்து நிற்கின்றது. சிறுமியின் சின்ன சின்ன உணர்வுகளையும் , வேதனைகளையும் மூன்றே பக்கங்களில் வெளிப்படுத்திய விதம் அருமை. கதை படித்த இரவு உறங்க முடியவில்லை, படித்து முடித்து 4 நாட்கள் ஆன பிறகும்  என்னால்  இந்த வலியிலிருந்து மீளமுடியவில்லை. ஒரு சிறுகதை இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு "முடியும்" என்று  உணர வைத்திருக்கிறார் நிலாரசிகன் அவர்கள்.


வேட்கையின் நிறங்கள்:
ஓரினச்சேர்க்கை என்ற துணிச்சலான கருவை எடுத்து ஒரு பெண்ணின்  உணர்வுகளை மிக வெளிப்படையாக எழுதிய  நிலாரசிகன் அவர்களுக்கு ஒரு சல்யூட். அங்காங்கே சில இடங்களில் மிகைப்படுத்தி எழுதி இருப்பது போன்ற உணர்வு  இருப்பினும் இரு பெண்களுக்கிடையில் இருக்கும் அந்தரங்கத்தை வெளிபடுத்திய விதம் அருமை. பெண்ணின் மனதில் புகுந்து அவளுடைய  அக உணர்வுகளை  விவரிக்கும் இடங்களிலும் சரி, காமம் கொள்ளும் தருணங்களை விவரிக்கும் இடங்களிலும் சரி , எங்குமே ஒரு சிறு சலிப்பையோ முகச்சுளிப்பையோ உண்டாக்காமல் லாவகமாக எழுதியதுதான் இந்த கதையின் சிறப்பு அம்சம்.
"அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது" இந்த முடிவு அருமை. நிலாரசிகன் அவர்களின் கற்பனை வளமும்  எழுத்தின் தீவரமும் உணர்த்திய வரி.

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்:
நிலாக்குட்டி , ராசாத்தி , சாமி இவர்கள் தான் கதையின் கதாபாத்திரங்கள். இந்த பெயர்களை உச்சரிக்கும்போதே நம்மை ஒரு கிராமத்திற்கு இழுத்து செல்கிறது கதை. இக்கதையில் வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மக்களின் இயல்புகளை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து  மண்வாசனை இந்த கதை படிக்கும் போதே வீசுகிறது. சுருக்கமாக சொன்னால் பாரதிராஜாவின் படம் பார்த்த திருப்தி கிடைத்தது. கதையின் முடிவில் தந்திருக்கும் திருப்பம் அருமை.
ப்ரியாகுட்டி நான்காம் வகுப்பு 'ஏ' பிரிவு:கிராமத்தில்  இருந்து முதன்முதலாக நகரத்திற்கு வேலை பார்க்கவரும் ஒரு இளைஞனின் கதை. வந்த இடத்தில் அவனுக்கு புதியதாய் ஒரு குட்டிதேவதையின் நட்பு கிடைக்கிறது. அதன் பின் வரும் அதிர்ச்சிகள்  தான் கதையின் அம்சம். நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு குட்டி பெண்ணிடம் கிடைக்கும் நட்பு , அவளின் குறும்புகளையும், அவள் சேட்டைகளையும் அழகாக கண் முன் வந்து நிறுத்திகிறார். அந்த சிறுமியுடன் நாமும் சேர்ந்து விளையாடுவதை  போலவே இருந்தது கதையை வாசிக்கும் பொழுது. கதாபாத்திரங்களை தன் வசமே வைத்துக்கொண்டு கதையின் நடையை இயல்பாக  நகர்த்தி செல்லும் திறன் இவருக்கு அலாதியாக இருகின்றது. அதுவே இவருடைய கதைகளுக்கு பலமாக அமைகிறது என்றும் சொல்லுவேன். "தண்ணீருக்கு பதில் சாணித்தண்ணி ஊத்திவிடுவாளோ "  இப்படி யாதர்த்தமான வரிகள் அருமை.
அவளின் கடைசி நிமிடங்களில் அவளுடைய  அன்பின் வெளிப்பாடு   வார்த்தைகளால் விவரிக்க  முடியாதவை. மிகவும் அருமையாக கதையை நடத்தி சென்றிருந்தார் நிலா அவர்கள்.
இப்படிபட்ட ஒரு தோழி நம் வாழ்வில் வந்தால் எப்படி இருக்கும்.. என்ற ஒரு ஏக்கத்துடன் கதை படித்து முடித்தேன். 
 தனலட்சுமி டாக்கீஸ்:
மிகவும்  ரசித்து படித்த கதை. 'கட்டையனின்' கதாபாத்திரம் மிக அருமையாக வந்துள்ளது. கதையின் கடைசியில் கொடுத்த  திருப்பம் மனதை பாதித்தது. எங்கள் ஊர் கொட்டகையும் 8 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டுவிட்டது. கொடுமை என்னவென்றால் அந்த இடத்தில் புதியதாய் முளைத்திருப்பது  ஒரு மது கடை. அந்த இடத்தை  கடந்து  செல்லும் போது  பல சமயங்களில் வேதனை அடைந்ததுண்டு. சிறு வயதில் எங்க ஊரில் இருந்த சீனிவாசா தியேட்டரில் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம்.    அதனால் தான் என்னமோ இந்த கதை என் மனதில் ஆழமாகவே பதிந்து போனது.

அப்பா சொன்ன நரிக்கதை:கிட்டத்தட்ட  மூன்று முறை படித்த பின் தான் எனக்கு இந்த அதை புரிந்தது. இரண்டே பக்கத்தில் எழுதிய கதையில் இவ்வளவு  திருப்பங்கள் கொடுத்தது பாராட்டிற்குரிய  விஷயம். உங்களுடைய கதைகளில் வரும் அதிர்ச்சியான வித்தியாசாமான திருப்பங்கள் பற்றி அறிந்தும், இந்த கதையில் அப்படி ஒரு அதிர்ச்சி இருக்கும் என்பதை கடைசி வரை உணரவில்லை. கதை முடிவில் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கே சில நிமிடங்கள் ஆகின எனக்கு. மனதை பொசுக்கிப் போட்டது போல் வலித்தது அந்த கதை படித்து முடித்த கணம். மனம் வலிக்கும் அளவுக்கு சிறுகதையைக் கொண்டு சென்ற விதம் தான் இந்த கதையின் வெற்றி. ஒரே வார்த்தை தான் சொல்ல முடியும்  "அருமை".
உங்களின் எல்லா கதைகளிலும்  'கடைசி வரி திருப்பங்கள்' அருமை.
அருமையான சிறுகதை தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பு தந்த நிலாரசிகன் அவர்களுக்கும் , இந்த தொகுப்பை வாங்கி கொடுத்த நண்பர் விழியன் அவர்களுக்கும் நன்றிகள்.  தொடர்ந்து எழுதுங்கள். உங்களின் எழுத்து பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உங்களுடைய படைப்புகளின் தீவிர ரசிகை,
அஷிதா.

Thursday, April 15, 2010

ஏக்கம் - சிறுகதை மாதிரி :)

தூக்கம் முழுதாக கலையவில்லை அலாரம் எழுப்புகிறது. பக்கத்தில் படுத்திருக்கும்  கார்த்தி'யை ஆசையோடு பார்த்து செல்லமாக சின்ன முத்தம் நெற்றியில் குடுத்து விட்டு எழுந்தாள் ஜானகி.

இயந்திரமாய் பல் துலக்கி, அரைகுறையாய் குளித்து ஓடுகிறாள் சமையல் அறைக்கு.

ஜானு..கெட் மீ காபி டா செல்லம்...

இதோ ஒரு நிமிஷம் எடுத்திட்டு வரேன்....

கார்த்திக்கு காபி குடுத்து விட்டு, அவளும் அவசர அவசரமாய் ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு சமைக்க ஆரம்பித்தாள்.

பதம் பார்த்து சமைகிறாள்..அஸ்வினுக்கு மிகவும் பிடித்த முட்டை நூட்லஸ்.

இப்போ நமக்கு ஏதாச்சும் சமைக்கணுமே..சரி சாம்பார் வச்சுடலாம்,சாம்பார்னா இட்லிக்கும் தொட்டுக்கலாம் அப்புறம் மத்தியானம்  பொழுதும் கழியும் என்று நினைத்து கொண்டே குக்கரில் பருப்பு போட்டு அடுப்பில் வைத்தாள்.

அச்சு எழுந்திடு..ஸ்கூல்'க்கு டைம் ஆயிடுச்சு. கமான்.. கமான் கெட் அப்..

மம்மி 5 mins ப்ளீஸ் என்று சிணுங்கிக்கொண்டே புரண்டு படுக்கிறான் அஸ்வின்..

சொன்னா கேக்காம ராத்திரி பத்து மணி வரைக்கும் டிவி பார்க்க வேண்டியது ...காலைல சீக்கிரம் எழுந்திக்கிறது கிடையாது.. சரி சரி எழுந்திடு டைம் ஆச்சு. ஹோம்வொர்க் என்ன குடுத்திருக்காங்களோ ..என்று பொலம்பி கொண்டே அவனுடைய புத்தகங்களை புரட்டுகிறாள்..
கண்ணா எழுந்திரி டா டைம் ஆயிடுச்சு...ப்ளீஸ் டா...
அஸ்வினும் எழுந்து வந்தான்.

பாத்ரூம்ல ப்ரஷும் பேஸ்டும் வச்சிருக்கேன்...பொய் ப்ரஷ் பண்ணிட்டு வா..என்றதும் அவனும் சென்று ப்ரஷ் செய்துவிட்டு வந்தான்.

வீட்டுபாடம் புத்தகத்தை புரட்டிக்கொண்டே அடடே இன்னைக்கு கொரில்லா படம் ஓட்டிட்டு வரணும்னு சொல்லி இருக்காங்களே..இப்போ என்ன செய்றது. நேத்தே பாத்திருந்தா பக்கத்துக்கு கடைல வாங்கி ஒட்டி இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே..

ஏண்டா பட்டு...பேசாம உங்க அப்பா போட்டோ ஒட்டிடலாமான்னு... பக்கத்துல செய்தித்தாளை புரட்டிகொண்டிருக்கும் கார்த்தியை பார்த்து நக்கல் அடித்தாள்.

கார்த்தி..அவளை பார்த்து லேசா ஒரு நமட்டு புன்னைகையோட ...ஏண்டி செல்லம் என் போட்டோ விட உங்க அப்பன் போட்டோ இன்னும் மாட்சிங்கா இருக்குமே..

இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறச்சல் கெடையாது..காலைல எழுந்து பாவம் பொண்டாட்டி கஷ்ட்டப்படுராளேன்னு ஏதாச்சும் ஹெல்ப் செய்றீங்களா..மாடீங்களே.

காலைல உன்னோட பொலம்பல் ஆரம்பிசிட்டியான்னு மொனங்கிகொண்டே பாத்ரூம்குள் நுழைந்தான் கார்த்தி.

ஒரு வழியாக சமையல், வீட்டுபாடம் , காலை உணவு என்று
அத்தனையும் முடித்து..அவசரமாக அஸ்வின்'யை பள்ளிக்கு கிளப்புகிறாள்.

அச்சு கமான் கமான் ID Card போடு..பாக் மாட்டு டைம் ஆயிடுச்சு ...பஸ் வந்துடும். அம்மாக்கும் ஆபீஸ் போகணும் டைம் ஆயிடுச்சு..என்று சொல்லிக்கொண்டே அவரசரமாய் திரும்புகையில் அவளை பார்த்து சிரிக்கிறாள் அம்மு..ஜானுவின் இளைய மகள் ஒரு வயசு ஆகுது...புதிதாய் பூக்கும் பூவை போல் அவளது கண்கள் மெல்ல திறக்க, அவளுக்கே உரிய மழலையில் ‘அம்மா ’..’அம்மா ’ என்று அழைக்கிறாள். ஜானுவின் மனம் துள்ளி குதிக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க்கிறாள் அவளை அழைக்கச் சொல்லி ….மிக்க ஆசை அவளுக்கு அம்முவின் மழலை கேட்க , ஆனால் நேரம் இல்லை.யாழ் இனிது குழல் இனிது என்பார் மழழை சொல் கேளாதார்! என்று சும்மாவா சொன்னார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு ஏக்கத்துடன் பார்க்கிறாள் அம்முவை.

கடிகார முள் 8 தொட்டது, இவளுக்கு அலுவக பஸ் வரும் நேரம் ஆயிற்று, அஸ்வின்'க்கும் ஸ்கூல் பஸ் வரும் நேரம் ஆகிவிட்டது.

அத்தை.. காபி போட்டு வச்சிருக்கேன், சூடு பண்ணி சாப்பிடுங்க அப்படியே மாமாக்கும் குடித்திடுங்க. அப்புறம் சாம்பார் வச்சிருக்கேன் இட்லிக்கும் மதியான சாப்பாடுக்கும் அதே தான். அட்ஜஸ்ட் பண்ணிகோங்க அத்தை என்று சொல்லிவிட்டு..
அம்முக்கு சிறிய முத்தம் மட்டும் கொடுத்துவிட்டு .'பை டா..குட்டிம்மா , மம்மி சாயந்திரம் சீக்கிரமா வந்துடறேன்...சமத்தா இருக்கணும் சரியா'.. என்று கொஞ்சிவிட்டு அவளை மாமியாரிடம் குடுத்துவிட்டு கிளம்பினாள்..

கொடுத்த முத்தத்தின் ஈரம் குறையவே இல்லை ..அவளுடைய மனசு முழுக்க பிஞ்சு மழலையே சுற்றி கொண்டிருக்க..அலுவலகத்தில் அவள்.

நுனி நாக்கு ஆங்கிலம் ,கம்ப்யூட்டர்,டார்கெட்..இப்படி எல்லாமே வசப்பட்டுவிட்டது அவளுடைய இந்த அலுவலக வாழ்கையில் ...

மதியம் 1 மணி, வீட்டுக்கு போன் செய்கிறாள்.
ஹலோ , அத்தை நான் தான் பேசுறேன். என்ன செய்றா குட்டிம்மா ?
இன்னைக்கு என்னனே தெரியல ஒரே அழுகை "அம்மா" அம்மா" ன்னு அழுதுகிட்டே இருக்கா, சரியா சாப்பிட கூட இல்லை.

ஓ..அப்படியா, என்ன ஆச்சு செல்லத்துக்கு..ம்ச்..  சரி நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்ரம் வருவதற்கு முயற்சி செய்றேன். எங்கே பக்கத்துல குட்டிம்மா இருந்தா காதுல வைங்க நான் பேசுறேன்..

இந்தா குட்டி உங்க மம்மி பேசுறாங்க பேசு..ம்ம் ..பேசு..என்று அம்முவின் காதில் வைத்தாள் ஜானுவின் மாமியார், அம்முவோ ம்ஹும்....உஊம்ம்ம்... என்று சிணுங்க , இவளுக்கு கண்களில் கண்ணீர் தவற பேச்சு வரவில்லை...தொலைபேசியை துன்டித்தாள்.

3 மணி அளவில் திரும்பவும் வீட்டுக்கு போன் செய்தாள் ஜானு .
இந்த முறை ஜானுவின் மாமனார் "ஹலோ" என்றார்.

ஹலோ மாமா...நான் தான் ஜானு பேசுறேன். அஸ்வின் வந்துட்டானா?..
ம்ம் வந்துட்டான் மா....இப்போ தான் வந்தான் , பால் கலந்து குடுத்தேன், குடிச்சிட்டு டிவி பாத்துகிட்டு இருக்கான்.

சரி மாமா நான் வச்சுடறேன், சாயந்திரம் சீக்கிரம் வந்துடறேன். தொலைபேசியை துன்டித்தாள் பெருமூச்சுடன்.
நான் வீட்டுல இருந்திருந்தா, அச்சு ஸ்கூல் விட்டு வந்ததும் அவனை கட்டி அணைச்சு முத்தம் குடுத்து, அச்சு இன்னைக்கு ஒழுங்கா சாப்டியா  இல்ல சாப்பாடு மிச்சம் வச்சிட்டியா? டீச்சர் இன்னைக்கு புதுசா என்ன சொல்லி குடுத்தாங்க? இப்படி பல கேள்விகள் கேட்க்க...அவனும் பட பட'ன்னு குறும்பா  பதில் சொல்லி இருப்பான்..ஹ்ம்ம்....என்று பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டு,  மீண்டும் அலுவலக வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

இதோ ஆசையோடு அவள் எதிர்பார்த்த மாலை நேரம் வந்தாச்சு, வீட்டுக்கு கிளம்ப தயாரானாள், கிளம்பையில் வருகிறது ஒரு ஈமெயில் ..ப்ரோபோசல் வேண்டுமென்றும்.. மிகவும் அவசரம் என்றும் .

அவள் ப்ரோபோசல் ரெடி செய்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் ரமேஷிடம்
ரமேஷ், எனக்காக ஒரு சின்ன உதவி செய்வீங்களா?

சொல்லுங்க ஜானகி, என்ன செய்யணும்.

இன்னைக்குள்ள இந்த ப்ரோபோசல் கஸ்டமர்க்கு அனுபிடனும், நான் ப்ரொபோசல் ரெடி பண்ணிட்டேன் கஸ்டமரோட முகவரி, மற்ற தகவல்கள் எல்லாம் இதுல எழுதி இருக்கேன். இதை கொஞ்சம் பிரிண்ட் அவுட் எடுத்து கொரியர் அனுபிடறீங்களா?

ஓ ஸூர்..கண்டிப்பா செய்றேன்..

நான் அவசரமா போகணும், அதான் கிளம்பறேன்..

நீங்க கிளம்புங்க நான் பாத்துகறேன்.

ஒரு வழியாக எல்லாம் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள் ஆர்வத்துடன்
மழலை மொழி கேட்டு ரசிப்பதற்கு, அவள் வருவதற்குள் தூங்கியே விட்டாள் அம்மு. அம்மு பக்கத்தில் படுக்கிறாள் ஜானு அம்முவை  தழுவிக்கொண்டே...சிறிது நேரத்தில்
ஜானுவின் கண்களும் உறங்கின வழியும் கண்ணீரோடு ..
அவள் இதயமோ விழித்திருந்தது..ஏக்கத்தில்!

Sunday, March 28, 2010

பொது மனிதர்களின் செயல்களால் ஏற்படும் எதிர்மறை தாக்கம்!

இன்று  பேருந்தில் இரண்டு  இளைஞர்கள் பேசிக் கொண்டது.. 

டேய் மச்சான் நான் பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு  இருக்கேன் டா...கம்பனிக்காக நாயா உழைக்கிறோம் ஆனா எந்த நாயும் நம்மள மதிக்க மாட்டேங்குது..
(நாய் என்னைக்கு உழைச்சிருக்கு  சும்மா தானே வாலு ஆட்டிக்கிட்டு இருக்கும்...இந்த சந்தேகம் ரொம்ப  நாளா  இருக்கு...யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா )

பைனான்சு  கம்பெனி ஒன்னு ஆரம்பிக்கலாம்ன்னு  நினைக்கிறன் டா..முதலீடு எங்க மாமா குடுக்கறேன்னு சொல்லி இருக்காரு.

டேய் மாப்பு அதெல்லாம் வேணாம் டா இப்போ இருக்கற லேட்டஸ்ட் trend ஆசிரமம்  தாண்டா.....தனி  பங்களா , நல்ல சாப்பாடு, சொகுசான வாழக்கை,அது மட்டும் இல்லாம சூப்பர் பிகரு  எல்லாம்  நம்மை  தேடி  வரும் மாப்பு...நமக்கு  காலு  அமுக்கி  விடுவாங்க :))) சிம்பிலா  ஏதாவது  ஒரு  சாமி  பேரு  சொல்லிட்டு  ஜல்சாவா  வாழ்க்கை  நடத்தரத விட்டுட்டு  பைனான்சு கம்பெனி  அது  இதுன்னு  சொல்லிட்டு பொழக்க  தெரியாதவனா இருக்கியே டா  நீ ..
டேய்  மாப்பு  நம்ம  ஆசிரமம் தொடங்கினா முதல்ல புல்லா  centralised  a/c போடணும்  மாப்பு  இல்லைனா ...'கதவை  திற  காற்று  வரட்டும்'  பதிலா  ...sun tv  காரன் கேமரா வந்துடும் .

டேய்  மச்சான் ஒரு சந்தேகம் டா..எப்புடி  டா  அவளோ  ஞான திருஷ்டி இருக்கற  அவனுங்களுக்கே    தெரியாமே  video எடுப்பானுங்க...
அதான்  மாப்பு அந்த வீடியோ எடுத்த ரெண்டு நாளும் அவரு ஞான திருஷ்டிக்கு பேட்டரி வீக்கா போயிடுச்சாம்  ...அதனால சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருந்தானாம்...அந்த நேரம் பாத்து சன் tv காரன்  பூந்துட்டான் .
என்ன டா மச்சான் இது... ஏதோ செல்போனுக்கு சார்ச் இல்லைன்னு சொல்ற மாதிரி சொல்ற!

(இது வரை போதும் இதற்கு மேல் அவர்கள் பேசியதை இங்கு பதுவு செய்ய விருமபவில்லை )

இன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு நடுவில் இப்போது தலையோங்கி ஆடுவது இந்த சாமியார்கள் பிரச்சனை. இந்த பிரச்சனைகள் நம் இளைஞர் சமுதாயம்  மத்தியில்  ஒரு எதிர்மறை  தாக்கம் (Negative Impact) உண்டாக்கி  கொண்டிருக்கின்றது என்பது  தான் உண்மை. கல்கி ஆசிரமத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்று பல பெற்றோர்கள் புகார் செய்வதாக செய்திகள் படித்தேன். பல ஆசைகளோடும் கனவுகளோடும்  தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்து  ஆளாக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி இந்த ஆன்மிக பிரச்சனைகளில் சிக்கி  நிலை தடுமாறுவதை கண்டு  மனம் வேதனை அடைகின்றனர். 


இளைஞர்களின் மனதில், சாமியார்களின்  வசதி வாழ்க்கையைப் பார்த்தே பலருக்கு சாமியார் ஆகும் ஆசை வந்திருக்க வேண்டும் என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. வியர்வை சிந்தி உழைக்காமலேயே வேளாவேளைக்கு அறுசுவை உணவு, கால் கை பிடிச்சு விட பக்தகைகள், என அனைத்தும் உழைக்காமலேயே.. ஏதோ  ஒரு  கடவுள்  பெயரை  சொல்லிக்கொண்டு  காலத்தை கழிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்ற பயம் கலந்த வேதனை கூட சில சமயங்களில் வருவதுண்டு.
இப்படி போனால் நம் அப்துல் கலாம் கண்ட கனவு  எப்படி நிறைவேறும்? நம் நாடு எப்படி வல்லரசு ஆகும்?.

**இளைஞர்களே நீங்கள் தான் நம் சமுதாயத்தின் முதுகெலும்பு என்பதை  மறவாதீர்கள், இப்படி பட்ட சில பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் உங்களின் இலக்குகளை நோக்கி  பயணம் செய்யுங்கள்.....


கடவுளை  தேடி ..
வருத்தமாக இருக்கிறது, என்னுடைய பதிவில் இந்த செய்தியை பற்றி எழுதுவது.. தற்போது  எல்லா பத்திரிகைகளும், தொலைகாட்சிகளிலும் , மற்றும் பதிவுலகமே எழுதிக்  கொண்டிருக்கும் சூடான செய்தி பரமஹம்ஸ நித்யானந்தர் மற்றும் அம்மா(கல்கி) பகவான் பற்றி தான்.
இந்த இரண்டு செய்திகளும்  நிறைய மாறுபட்ட கருத்துக்களை மட்டும் அல்லாமல் இத்தனகாலமாக இவர்களை நம்பிபொதுமக்களமத்தியிலபெரும் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம், கொந்தளிப்பையு‌ம் ஏற்படுத்தியுள்ளது.
அதான்  நிறையப் பேர் வீடியோவே போட்டிட்டாங்களே.. நான் வேற என் வலைப்பதிவை அசிங்கப் படுத்தணுமா? என்று இதை பற்றி இங்கே எழுதாமல் இருந்தேன் ஆனால் பேருந்தில் நடந்த சம்பவத்தை பார்த்து, இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் நாளை நம் நாட்டில் எந்த பிரச்சனை பற்றியும் பேசுவதற்கு உரிமை இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால் விருப்பமே இல்லாமல் மனவேதனையுடன் எழுதியது தான் இந்தப் பதிவு.

சன் டிவி'யில் இந்த செய்தி வெளயிட்டபோது ஏன் நடிகையின் முகத்தை மட்டும் மறைத்தார்கள்?.காரணம்... விளம்பரம். “சாமியார் நித்தியானந்தருடன் இருந்த நடிகை யார்” – 7 மணி செய்திகளில் என்று விளம்பரம் தேடிக் கொண்டார்கள். பாலியல் காட்சிகளை பகிரங்கமாக வெளியிட்டு தங்களை நீதிமான்களாக காட்டிக்கொண்ட தொலைக்காட்சியை என்னவென்று  சொல்லுவது .

இதில் நகைச்சுவை என்னவென்றால்..அந்த நடிகையின் பெயர் "ர"'வில் தொடங்கும் என்பதை மட்டும் சொல்லியது தான். அப்பொழுது  மக்கள் மத்தியில் நிலவி கொண்டிருந்த  குழப்பமே நித்தியானந்த சுவாமிகளின் லீலைகள் பற்றி அல்ல..யாரு அந்த நடிகை என்பது தான். நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்களா?. இன்று தமிழ்நாட்டின் மூளை முடுக்கு என்று எல்லா இடங்களிலும் இதே பிரச்சனை தான் , டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு, அடுத்தவர்களின் அந்தரங்கம் மீது நமக்கு  எவ்வளவு ஆர்வம் இருக்கிறது பாருங்கள்.


......முடிவில் இத்தகைய பொது மனிதர்கள் இந்த மாதிரியான சர்ச்சைகளில் ஈடுபடுவது தவிர்க்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து.
கடவுள்  'உண்டு'  'இல்லை' என்பதை நான்  வாதிக்க  விரும்பவில்லை , ஆனால்  இந்து சமயத்தின்படி வளர்க்கப்பட்டவள்  நான், அப்படி  இருக்க  இந்த சாமியார்கள் இப்படியான சில சர்ச்சைகளில் ஈடுப்பட்டு அகப்படும்போதேல்லாம் இந்து சமயத்தை இவர்கள் கேவலப்படுத்துவதாக மனம்  மிகவும்  சங்கடம்  அடைகின்றது .

யாரை குற்றம் சொல்வது ஏமாற்றுபவர்களையா ஏமாறுபவர்களை
யா?..நம் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் அதற்க்கு தீர்வு காண கோயிலுக்கு போகிறார்கள், மனதில் இருக்கும் சுமையை இறைவனிடம் இறக்கிவைத்து வந்தால் மனம் லேசாகும் என்ற நமிக்கையில். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம் மக்கள் கடவுளை நம்புவதை விட கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.

இதைதான் விவேகானந்தர் சொன்னார் ,கடவுளை எங்கும் தேட வேண்டாம் அவர் நம்முள் தான் இருக்கிறார் என்று.


கீதை,குரான்,பைபிள்,எல்லாவற்றிலும் சொல்லப்படுவது இது தான்..
கடவுளை நம்பு! உன்னுள் இருக்கும் கடவுளை நம்பு!
மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.

Thursday, March 11, 2010

அய்யோ படிக்காதீங்க!

ஏனுங்க சொன்னா கேக்க மாடீங்களாக்கும் ..அதான்  மேல  கொட்டை  எழுத்துல போட்டிருகோம் இல்ல படிகாதீங்கன்னு..அப்புறம்  என்ன  மொறச்சு  மொறச்சு  பாத்துகிட்டு  கெளம்ப வேண்டியது தானே ...

வேணாம்னு சொன்னா அதையே செய்யுவேன்னு  அடம் புடிச்சுகிட்டு ...சின்ன  புள்ள  தனமா  இல்ல இருக்கு.  ஒரு சப்ப மட்டேர்தாங்க எழுதிருக்கேன் வேற ஒன்னும் இல்லீங்க அத நீங்க படிச்சு உங்க நேரத்த வீணாக்க வேணாம்..

ப்ளீஸ் இதை படிக்காதீங்க  -  நான்  மறுபடியும்  உங்கள  அலெர்ட்  பண்றேன். சொன்னா சொன்ன பேச்சு கேக்கணும் ...அத விட்டுட்டு  சும்மா படிக்காதிங்கன்னா வந்து படிச்சிகிட்டு ..

ஆபீசெளையும்  சரி ..ப்ரேன்ட்ஸ்  கிட்டயும் சரி... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் வேண்டாம்  இத படிக்காதீங்கன்னு அவங்களும்  கேக்கல படிச்சே தீருவேன்னு முரண்டு பிடிச்சு படிச்சுட்டு போய் அவன் அவன் மண்டைய பிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான்...இது எல்லாம் தேவையா உங்களுக்கு..

இப்போவாச்சும் நான் சொல்றத கேளுங்க...risk  எடுக்காதீங்க...risk எடுக்கறது  rusk சாபிடறமாதிரி ' ன்ற  கூட்டத்த சேர்ந்தவங்களா இருந்தா...உங்களோட  சொந்த  ரிஸ்க்ல  உள்ள வந்துக்கலாம்...பாதிப்புகளுக்கு  நான்  காரணம் கிடையாது சொல்லிட்டேன்.

பரவால்லையே இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களே...உங்க தைரியத்தை நான் பாராட்டறேன்.

பெருசா ஒன்னும் இல்லைனாலும்..என்னக்கு ஒரு சந்தேகம்ங்க ..
அது வந்துங்க..

நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,

சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,

கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்'ன்னு


சொல்றாங்களே...இதுக்கு என்ன அர்த்தம்.

இப்போ  ஏன்  மொரைகிறீங்க ...சரி  சரி ..no tension...

நான் தான் சொனேன் இல்ல, நீங்க தான் கேக்கல....அதான்  இப்போ படிச்சிட்டு  ஒன்னும்  இல்லன்னு  தெரிஞ்சுகிட்டீங்க  இல்ல,  இப்போவாச்சும்  கிளம்பலாம்  இல்ல ...

அட சத்தியமா  கீழ  ஒன்னும்  இல்லீங்க ...

சரி  வந்தது  வந்துடீங்க ...என்னோட அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போய்டுங்க.

"நீங்க செய்யக் கூடாதுன்னு சொன்னா அதை செய்யணுமுன்னு ஏன் தோணுது...? படிக்காதீங்கண்ணு சொன்னா ஏன் உங்களுக்கு படிச்சே ஆகணும்ன்னு  தோணுது?..."

என்னங்க தேடிறீங்க...கொம்புங்களா?...

ஐயையோ..

இந்தா... கெளம்பிட்டேன்...போய்டேன்...போயிட்டேன்..

excuse me..

மொறைக்காதீங்க... கிளம்பறதுக்கு முன்னாடி  ஒரு சின்ன request...

சரி  இம்புட்டு நேரம்  படிச்சிங்களே அப்படி  என்னதாங்க தெரிஞ்சிகிடீங்க?..சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்.

ஓகே ரைட் ..போதும்  இத்தோட  பூராத்தையும்  நிறுத்திப்போம் ..

வர்ட்டா..

Monday, March 8, 2010

பைக் ஓட்டும் ஆசாமிகளுக்கு!!!

அசாரசமா யாரோட பைக்கிலும் அவளோ சீக்ரம் ஏறமாட்டேன்... பைக்'ன்னா கொஞ்சம் பயம் எனக்கு. அலுவலகத்துல இருந்து கிளம்பர நேரத்துல..ஆனந்த் (எங்க ஆபீஸ்ல வெப் டிசைனரா வேலை செய்றான்) "மேடம் வாங்க நான் ட்ரோப் பண்றேன்....நானும் உங்க ஏரியா பக்கம் தான் போறேன்" என்று சொல்லி அழைத்தான்.

கொஞ்சம் தயங்கினேன். நான் தயங்கிக்கிட்டு இருந்ததை பார்த்த அவன் "மேடம் பயப்படாம வாங்க பத்திரமா  கொண்டு போய் சேக்கிறேன்"ன்னு அசால்ட்டா சொன்னான்.

சரி பைக்ல போனா சீக்கரமா போய்டலாமேன்னு ஆசைப்பட்டு  அவனோட பைக்ல ஏறிட்டேன். ஏறினது தாங்க தாமிசம், சும்மா பிச்சிகிட்டு போகுது வண்டி. எனக்கு குடல் அப்படியே நடுங்க ஆரம்பிச்சுடுச்சு ..."ஆனந்த் கொஞ்சம் மெதுவா போ பயமா இருக்கு, இல்லைன்னா விட்டுடு நான் பஸ்லயே போறேன்"ன்னு கதரிகிட்டே இருந்த  என்னை "மேடம்...பயப்படாம வாங்க ...எத்தனை நாளா வண்டி ஓட்டிகிட்டு இருக்கோம், சும்மா கில்லி.. கில்லி மாதிரி உங்கள கரெக்டா சேர்க்கவேண்டிய இடத்துல சேர்த்துடறேன்". அவனோட ஸ்பீடும் அலும்பளும் தாங்கல... தெரியாத்தனமா ஏறிட்டோமேன்னு  நொந்துகிட்டு "என்ன கொடுமை சார் இது' ன்னு எனக்கு நானே டயலாக் சொல்லிகிட்டேன்...அந்த நேரத்து
லயும் என்னோட குசும்பு பாருங்க :)

இப்போ ஸ்டோரியோட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கோம். பைக் போய்கிட்டே தான் இருந்துச்சு சடன்னா கண்ணு மூடி கண்ணு  திறக்கரதுக்குள்ள நடு ரோட்ல விழுந்து கிடக்கிறேன். எழுந்து பார்த்தா, பைக் பக்கத்துல போயிட்டு இருந்த ஆட்டோ மேல மோதி விழுந்துகிடக்குது...Just Miss இல்லைன்னா எனக்கு  இன்னைக்கு சங்கு தான். யாரு  முகத்துல  முழிச்சேனோ இன்னைக்கு...

பைக்குக்கு  ஏதாச்சும் சேதாரம் ஆச்சான்னு  பாத்துகிட்டு இருந்த ஆனந்த்'யை
"ஆனந்த்  என்ன ஆச்சு."ன்னு கேட்டேன்.
 "சாரி மேடம்...லெப்ட்ல சூப்பர் பிகரு  கிராஸ் ஆச்சா...அதான் பாத்துகிட்டே வண்டிய தெரியாம லேசா  ரைட்டுல விட்டுட்டேன்னு.." சொல்லி முடிச்சான்.
என்னோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுகோங்க..
"அடப்பாவி...சிவனேனுதனடா  நான் போயிட்டு  இருந்தேன்...என்ன வற்புறுத்தி உன் வண்டில வர சொல்லி...இப்படி பண்ணிட்ட..அப்படி என்னடா சைட் வேண்டி இருக்கு உனக்கு" ன்னு  நொந்துகிட்டு..
வேணும் டி நல்லா வேணும் உனக்கு...இனிமேல் யாரோட பைக்லயாச்சும்  ஏறுவ.."Be careful" ன்னு எனக்கு நானே வடிவேலு ஸ்டைல்ல சொல்லிகிட்டேன்.

மக்களே (especially பைக் ஓட்டும் நண்பர்களே)  உங்களுக்கு அன்பான வேண்டுகோள்:
உங்க பின்சீட்டு காலியா இருந்தா ஜாலியா ஓட்டுங்க வேணாம்னு சொல்லல ..ஆனா என்னை  மாதிரி குடும்ப இஸ்திரி யாராச்சும் உட்கார்ந்திருக்கும் போது லெப்ட்ல பிகர பார்த்தா பைக்கை ஸ்டிரேட்டா ஓட்டாம  ரைட்ல விட்டுடாதீங்க.... எங்கள நம்பி ஒரு பெரிய  கூட்டமே இருக்கு..யோசிச்சுகோங்கோ!

வாழக்கை புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கம்! - சிறுகதை


 நான் என்னை மறந்த வினாடி அது , அவனை அந்த புத்தக கண்காட்சியில் பார்த்தது. அவனை பார்த்த நொடியே அவனை மிகவும் பிடித்து போனது. வசீகரமான முகம். சின்னதாய் ஒரு புன்னகை. காதல் வயப்படும் அனைவருக்கும் ஏற்படும் அதே உணர்வு என்னையும் தொற்றிக்கொண்டது. இதய துடிப்பு அப்படியே நின்று  போய்விடும் போல் ஒரு உணர்வு.


அவனை நேரடியாக காணும் சக்தியை என் கண்கள் இழந்திருந்தன. அவன் "காமெடி செக்க்ஷனில்"... "தி பெஸ்ட் ஆப்  லாப்பர் " என்ற புத்தகைத்தை புரட்டி கொண்டு லேசாக சிரித்து கொண்டிருந்தான்.
என்ன அழகு அவனோட சிரிப்பு...ரசித்து கொண்டே இருந்தேன் சற்று தொலைவில் இருந்து.

அதிக நேரம் அவனையே பார்த்து கொண்டிருப்பதை அவன் கவனித்து இருப்பான் போல, சட்டேன்று என்னை பார்த்து ஒரு சின்ன புன்னகை வீசினான்....அதிர்ந்து போனேன். நம்ப  முடியவில்லை. இந்த பக்கம் அந்த பக்கம் திரும்பி பார்த்து ...அவன் என்னை பார்த்து தான் சிரித்தானா என்று கன்பார்ம் செய்து கொள்வதற்குள் அவன் திரும்பி விட்டான். இது வரை இருந்த படபடப்பு விடவும் சற்று அதிகமாக இருக்கிறது அவனுடைய சிரிப்பிற்கு பிறகு.

சுதாரித்துகொண்டு அவன் இருந்த செக்சனுக்கு சென்று...ஏதோ ஒரு புத்தகத்தை  எடுத்து புரட்டினேன்.. சற்று நேரம் கழிந்த பின்,
அவன் என்னை பார்த்து ..
"ஹாய்..ஐயம் மகேஷ்" என்றான்.....மகேஷ்..நல்ல பெயர்.
".........ஹாய்..ஐ..ஐ...ஐயம்... சித்ரா.."
"புக்ஸ் வாங்க  வந்தீங்களா? ன்னு  ஒரு அசட்டு கேள்வியை அவன் என்னிடம் கேட்க...நான் புன்னகைத்தேன் ஆமாம் என்ற சைகையால்.
"நிறைய புக்ஸ் கலெக்சன்  இருக்கு இந்த வருஷம்...உங்களுக்கு எந்த ஆர்தரோட புக்ஸ் ரொம்ப பிடிக்கும்?"  என்று இயல்பாக கேட்டான்.
"ஜெப்ரி  ஆர்ச்சர்" என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தேன்.
"நான் அண்ணாநகர்ல தான் இருக்கேன். நீங்க?" அவன் கேட்டதுக்கு
"திநகர்..வெங்கட்நாராயனா ரோடு" என்றேன்.
"ஓ.. திநகர்...ரொம்ப  நல்ல ஏறியா வாச்சே" என்றாவறே பேசிக்கொண்டு வெளியில் வந்தோம்.

வாசலில் நின்றுகொண்டிருந்தோம், கிளம்புவதற்கு தயாராக..
அவனுக்கு  பேச்சு வரவில்லை.."ம்ம்..ம்ம்..வந்து..வந்து..உங்க போன் நம்பர் குடுக்க முடியுமா, உங்களுக்கு பிடிச்ச ஆர்தரோட  புக் எங்கயாவது பார்த்தேன்னா சொல்றேன்".  நானும் கொடுத்தேன்.
"உங்க நம்பர்க்கு  மிஸ்டு  கால் கொடுக்கிறேன்"...என்று நாசுக்காக அவனோட நம்பரை கொடுத்தான்.."பை"  சொல்லிக்  கொண்டு பிரிந்தோம்.

ஆட்டோவில் செல்லும்போது முழுவதும்...அவனோட நினைப்பு தான். அவனோட பார்வை...அவனோட சிரிப்பு ..அப்படியே என்னை முழுசா ஆக்கிரமிச்சிக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு. வயிற்றுக்குள் ஏதோ பூதம் புகுந்து புரண்டி எடுக்கிறது போல் உணர்வு..

வீடு செல்வதற்குள் ஒரு sms "ஹாய்" என்று...அதை பார்த்தவுடன் மனம் துள்ளி குதித்தது ..ஆட்டோவை நிறுத்த சொல்லி ...கீழே இறங்கி ஒரு குட்டி ஆட்டம் போட்டேன். ரோட்டில் ......
ரிப்ளை அனுப்பினேன் அதே "ஹாய்". அதற்கு பின் ஏதும் வரவில்லை அவனிடம் இருந்து. ஆயிரம் முறை பார்த்திருப்பேன்...மெசேஜ் ஏதாச்சும் வந்திருக்கிறதா என்று.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை..புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை..பைத்தியம் பிடித்தார் போல் இருந்தது....என்றும் இல்லாத ஒரு  உணர்வு ... எத்தனை சுகம் இந்த காதல் வலி என்பது அன்றுதான் உணர்ந்தேன்.

"காதலை தேடி போக கூடாது, அது  நிலைக்காது, அதுவா  நடக்கணும், உன்ன  போட்டு  தாக்கனும், தல கிழா போட்டு  திருப்பனும்." என்ற விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவின் டயலாக் தான் ஞாபகம் வருகிறது.
இரவு முழுவதும் தூங்காமல், போர்வைக்குள் சுருண்டு கிடக்கிறேன்....காலை மணி 8. sms வருகிறது "ஹாய் குட்மோர்னிங் "  என்று அவனிடம் இருந்து. பார்த்ததும் அப்படி ஒரு ஆனந்தம்.. ஆகாயத்தில் பறப்பதை போல. புன்னகையுடன் "ஹாய் குட்மோர்னிங்"  என்று நானும் ரிப்ளை அனுப்பினேன்..
சந்தோசத்துடன் விடிந்த காலையது சங்கடமேதுமில்லாமல் நகர்கிறது.
"ப்ரேக்பாஸ்ட் சாபிட்டாச்சா" என்ற அடுத்த sms வருகிறது சற்று நேரம் கழித்து....இப்படியே ஒரு மணி நேரம் sms  வழியாகவே பேசிக்கொள்ளும்போது ஒரு sms "நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க  மாட்டீங்களே ?" என்று....
"மாட்டேன் " என்றேன் ..
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" அடுத்த sms ..
ஆஹா ....என்று எழுந்து திரும்பவும் குட்டி  ஆட்டம்   போட்டேன்.  அடக்கி கொள்ள  முடியவில்லை அந்த சந்தோசத்தை ...உண்மையில் சொல்லப் போனால் காதல் என்னும் அந்த காந்தம் நம்மை பற்றிக் கொள்ளும் போது நாம் நாமாகவே இருப்பதில்லை.
சில நொடிகள் கழித்து அடுத்த sms அவனிடமிருந்து "சாரிங்க...நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா"....
"ச்ச்சே  ச்ச்சே அப்படி எல்லாம்  ஒன்றும இல்லை" என்றேன்..
கட்டில் மேல் விழுந்து புரண்டு... தலகாணி  நடுவில் முகத்தை புதைத்து சிரித்துகொள்கிறேன்.
என் உதட்டின்  ஓரம் எப்போதும் ஒரு புன்னகை மின்னிக்கொண்டே இருக்கிறது. வெட்கத்தை மறைக்க நினைத்தாலும் முடியாமல் தவிக்கிறேன். கண்ணாடியை ஆயிரம் முறை பார்த்து அசடு வழிகிறேன்..காதல் எத்தனை சுகமானது. ஒவ்வொருவரும் கட்டாயம் கடந்து வர வேண்டிய சிலிர்க்க வைக்கும் வசந்த காலம் அது.

பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள் சித்ரா தன் தோழி அனுவிடம்...."இப்படி எல்லாம் எனக்கு நடந்து, என்னோட இந்த காதல் சுகத்தையும், காதல் வலியையும் உன்னிடம் சொல்லணும்னு  ரொம்ப  ஆசையடி  எனக்கு".
"ஏய்...என்னடி சொல்ற...உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு மறந்துடாத..குழைந்தை கூட  இருக்கு..என்ன பேசற நீ..? " என கடித்து  கொண்டாள் அனு, சித்ராவை பார்த்து.

சித்ரா தன் தோழி கேட்ட கேள்விக்கு..
"நிச்சயித்த திருமணம்.. நல்ல பையனா, குடும்பத்துக்கு ஏத்தவரான்னு  பார்த்து அம்மா அப்பா கல்யாணம் செய்து வைக்கிறாங்க. பிரச்சனை என்னன்னா யாரையும் பார்த்தவுடனே இந்த காதல் உணர்வு , ஈர்ப்பு ஏற்படறது  இல்லை. சில பேருக்குதான் அந்த மாதிரி அதிர்ஷடவசமா அமையுது. சொன்னாலும் அம்மா அப்பா கேட்க்கிறது இல்லை. கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆயிடும்'ன்னு சொல்லி கட்டிவச்சுடுறாங்க. கல்யாணம் ஆயிடுச்சு, புருஷன் தான் எல்லாம்ன்னு திருப்திபடுத்திகிட்டு வாழ்ந்துடறாங்க.
நான் சொன்ன இந்த காதல் வலி, சுகம், ஈர்ப்பு, தன்னிலை அறியாத ஒரு  உணர்வு..இது எல்லாம் சினிமால தான் நடக்கும்...நிஜ  வாழ்க்கைல நடக்காதுன்னு நிறைய பேரு நினச்சுகிட்டு  இருக்காங்க....அப்படி எல்லாம் இல்லை. நம்ம மனசுக்கு பிடிச்சவன பார்த்தவுடனே இது எல்லாம் கண்டிப்பா நடக்கும்.

என்னோட வாழக்கை புத்தகத்துல காதல் என்ற பக்கம் மட்டும்
நிரப்பபடாமலே  இருக்கு...அதை நிரப்பாமல் வைத்திருக்க நான் விரும்ப வில்லை. அந்த அனுபவங்களை அனுபவிக்காமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் ஆசை இல்லை....." என்று சொல்லி முடித்தாள்.

அனு திடுக்கிட்டு பார்க்கிறாள் சித்ராவை...ஏதும் பேசாமல் அப்படியே  விசித்திரமாக பார்துகொண்டிருக்கிறாள்...

சித்ரா, தன் தோழி அனுவின் பக்கத்தில் சென்று...அவளுடைய கையை  பிடித்து கொண்டு "அனு..ஆயிரம் கேள்விகள் உன் மனசுக்குள் ஓடிக்கொண்டு இருப்பதை என்னால் உணர முடிகிறது ..அத்தனை கேள்விகளுக்கும் பதில்...என்னிடமும் இல்லை...." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சித்ரா.

Tuesday, March 2, 2010

தொலைத்து கொண்டிருக்கின்றோம் !

வழக்கம் போல் இல்லாமல் சற்று சீக்கரமாகவே  கிளம்பினேன் அலுவலகத்தில் இருந்து. பேருந்து நிலையத்தில்  D 70 பேருந்திற்காக காத்திருந்தேன்,  முதலில் ஒரு பேருந்து வந்தது , சீட் ஏதும்  காலி இல்லாத காரணத்தால் நான் ஏறவில்லை. அப்படியே இரண்டு பேருந்துகளை விட்டுவிட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து அடுத்த பேருந்து வந்தது.சற்று காலியாக இருந்ததால் ஏறினேன், நல்ல வேளையாக அமருவதற்கு இடமும் கிடைத்தது பேருந்தின் கடைசிக்கு  முந்தைய சீட்டில்.

அடுத்த நிலையத்தில் வயதான பாட்டி ஒருவர் முன்புறமாக ஏறினார். அவரை பார்த்தவுடன்  முன்பு அமர்ந்திருக்கும்  யாரேனும் கட்டாயம் இடம் கொடுப்பார்கள் என்று நினைத்தேன். 3 நிமிடங்கள் கழிந்தன யாரும் தன் இடத்தில இருந்து எழுந்து அந்த வயதான பாட்டிக்கு இடம் கொடுக்க வில்லை. நான் எழுந்து போய் அவர்களை அழைத்து வந்து என் இடத்தில அமரவைத்தேன்.

அந்த பாட்டி என்னை ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் மேலும் கீழுமாய் பார்த்தார். அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் முழுதாக தெரியா விட்டாலும் நான் யூகித்த இரண்டு விஷயங்கள்..

ஒன்று, ஜீன்ஸ் போட்டுருந்தாலும் இந்த பொண்ணு  நமக்கு சீட்டு  குடுத்திருக்குன்னா நல்ல பொண்ணுதான்..

இரண்டு,  இந்த காலத்துல யாரு நம்மள மாதிரி வயசானவங்கள பாத்து எழுந்து சீட்டு குடுக்குறாங்க, காலம் மாறி போச்சு ...அது எல்லாம் அந்த காலம் வயசானவங்கள பாத்தவுடனே அனுதாபப்படறதும் மரியாதை குடுக்கறதும்...
பரவால்லையே இப்படி பட்டவங்க  இருக்காங்கன்னா ஆச்சர்யமா தான்  இருக்கு.... 

மறுபக்கம், கடைசி சீட்டில் அமர்ந்திருந்த நான் எழுந்து போய் அந்த பாட்டியை அழைத்து வந்து என் சீட்டில் அமர வைத்தது, அந்த  பேருந்தில் பயணித்த அனைவருக்கும் சற்று ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருந்தது.  முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு சிலர் என்னை சில நொடிகள் வெறித்து பார்த்தனர் ஒரு குற்ற உணர்ச்சியோடு ...

 இதை எல்லாம் என்னை பெருமைப்  படுத்திக்கொள்வதற்காக  சொல்லவில்லை, சற்று யோசித்து பாருங்கள் எங்கே போனது நமது பண்பு....கொஞ்சம் கொஞ்சமாக நமது கலாச்சாரம் எங்கேயோ தொலைந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் உணர்ந்தேன்.

விஷயம் சிறிதாயினும் அதனுடைய தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கின்றது என்னுள்..

Monday, March 1, 2010

யார் நீ...?

யார் நீ...?

நம்மை அறிமுகபடுத்தியது என்ன உறவு?
காதலா. .. ஈர்ப்பா....?
யோசித்தாலும் பதில் தெரியவில்லை..
நீயும் யோசிக்க ஆரம்பித்து விட்டாயா?..
அறிமுகப்படுத்திய உறவு
எதுவாக இருப்பினும்
இன்று வரை தொடர வைப்பது
என்ன உறவு?

உறவை பற்றிய யோசனை ஒரு புறம் இருக்க..
உன்னை பற்றியும் சில வரிகள்..

உன்னிடம் பிடித்தது
உன்
நேர்மை..
உழைப்பு..
புத்திசாலித்தனம்..
தேடலில் இருக்கின்ற ஆர்வம்..
உன் அன்றாட நிகழ் கால இறந்த கால
நிகழ்வுகளை என்னிடம் சொல்வது..
...தினமும் நலம் விசாரிப்பதில் ஆரம்பித்து..
அப்படியே அலசல் தொடர்கிறது..
அவ்வப்போது "நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்களே"
என்று குறும்பாக நான் நக்கல் அடிக்க ..
பெருமையில் நீ ஆழ்ந்து போக..
ஜோக் அடிச்சேன் என்று சொல்லி சிரிக்க..
ஏய் அடி வாங்குவ என்கிறாய் நீ..
ஏனோ சந்தோசத்தில் மிதக்கிறது மனம் ..
ஆனால் இது காதல் இல்லை!

இப்படியே நாட்கள் கடக்க
ஒரு நாள்..
என்னை அசர வைத்த சம்பவம் அது..
முத்தமிட்ட இதழ்கள்..
அள்ளி அனைத்த கைகள்...
என்னிடம் சிலுமிஷம் செய்து
செல்லமாக குத்தும்
உன் மீசை...
இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது.
என்னையும் அறியாமல்
உன்பால் என்னை ஈர்த்தது
உண்மை.
ஆனால் இது காதல் இல்லை!

மனம் சொல்கிறது
இது
கலாசார முரண்பாடு...
எனினும்
மரபுகளை முறித்துக்கொண்டு...
யதார்த்தமாக இருக்க சொல்கிறது
எனது சுயம்!

இவை அத்தனையும் கடந்து..
இருவரும் வெவ்வேறு திசையில்
பயணிக்கிறோம்..
வாழ்க்கை இயல்பு !

இது வரை நீ படித்தது போதும்.

இப்பொழுது சொல்..

எனக்கு நீ என்ன உறவு?

மொக்கை கவிதைகள்..

மொக்கை கவிதைகள்..
---------------------------------------
1 . என்னுடைய முகப்பருவை பார்த்து "அழகா இருக்கே" என்று சொல்லி நக்கல் அடித்த என்னுடைய நண்பருக்காக எழுதியது இந்த கவிதை..

முகப்பரு
நண்பா …
அழகென்று  ரசித்ததும்  இல்லை …
அசிங்கமென்று  வருந்தியதும்  இல்லை ..

எத்தனை  விசித்ரமானது  இந்த  முகப்பரு ..
என்  முகத்தையும்  அழகாக்கி  விட்டதே !
எத்தனை  முறை  வந்து  சென்றிருக்கும்  …
அப்போது  ரசிக்காத  எனக்கு 

இப்போது  ரசிக  தோன்றியதே  …

எதற்காக ?

முகப்பருவும்  அழகு  என்று  …
அறிய  வைத்தவன்   நீ  தானே !


 =======================================

2 .என்னுடன் வேலை செய்யும் தோழி சுஜாதா ஒரு நாள் ஏதோ ஒரு சின்ன விஷயத்துக்காக கோபித்து கொண்ட போது எழுதிய கவிதை இது..

சுஜாதா’வின்  மௌனம் :
 அளவில்லாமல்   நீ  பேசியதை  ரசித்த  எனக்கு 
 உன்னுடைய  மௌனத்தை  ரசிக்க  முடிய  வில்லை ..

ஏனடி ,

ஏன்  இந்த  மௌனம் ..?
என்ன  பெரிதாய்  சாதித்திருகிறது  உன்  மௌனம் ?

உண்மையோ  !
பொய்யோ  !
ரசிப்பேன்
நீ  பேசினால் ..............

நட்பு
அறிமுகம்  இல்லாமல்  வந்தோம் …
அடிகடி  சந்தித்து  கொண்டோம் …
உறவுகளுக்கு  மேலே  உயிர்  ஆனோம்  
காலங்கள்  கடந்து  சென்றாலும் 
கடைசிவரை  தொடர  வேண்டும் 
நம்  நட்பு …

======================================
3 . அருள்சிங்க் வேலையை விட்டு சென்ற போது எழுதியது..

பிரியா  விடை …
எங்கிருந்தோ  வந்தோம் ...
எப்படியோ  சந்திதோம் …
தலைஎழுத்து என்று  எண்ணிக்கொண்டே ...
நண்பர்களாக  ஆனோம் ..
அடிகடி  சந்தித்து  கொண்டோம் …
வேலையை  தவிர  மற்ற 
தேவைற்ற  வேலைகளை செய்தோம் ..
மற்றவர்களை  கலாய்த்து  கொண்டே  காலங்கள்  கழித்தோம் ..
பிரியும்  நேரம்  வந்துவிட்டது ...
பிரிய  மனம்  இல்லை ..
காலங்கள்  கடந்து  சென்றாலும் 
கடைசிவரை  தொடர  வேண்டும் 
நம்  நட்பு …

கதை கேளு.. கதை கேளு!

நேத்துல இருந்து  ஒரே வயிறு வலி...ஒரு வேல நேத்து சிக்கன் நாலு பீஸ் அதிகமா சாப்டோமே அதனால இருக்குமோ..இல்ல ஆபீஸ்ல சிக்கன் ப்ரயிட் ரைஸ் சாப்டோமே அதனால இருக்குமோன்னு...யோசிச்சுக்கிட்டு  தொலைகாட்சியில  "சமையல் சமையல்" நிகழ்ச்சி பாத்துட்டு இருந்த நேரம்.. என் அக்கா (என்னுடைய நாத்தனாரை அக்கா என்று அழைப்பேன்.  சனிக்கிழமை பள்ளி விடுமுறை, அதனால பசங்கள கூட்டிகிட்டு வந்திருந்தாங்க.)  டப்புன்னு  தலைல ஒரு தட்டு தட்டி என்னமா  எவளோ நேரமா கூப்பிடறேன்...காது கேக்கலையா? என்றார்.

 ...ஒரு ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்ன்னு இங்க வந்தா தொல்லையா இருக்கே..."

செல்லம்..(ஓவர் பாசம் வந்தா அப்படி தான் கூப்பிடுவாங்க) கிச்சன்ல நிறைய வேலை இருக்குடா. இந்த இரண்டு வாண்டுகளும் தூங்க மாட்டேங்குது....நீ தான் ஏதேதோ எழுதுவியாம்ல! அப்படியே இரண்டு பேரையும் எதுனா கதை சொல்லி தூங்க வை பார்ப்போம்..

என்றபடி பதிலுக்கு என் பதிலைக் கூற பெறாமல் இரண்டு பசங்களையும் "அத்தை எதுனா கதை சொல்லுவாங்க . அப்படியே தூங்கிடனும். சரியா" என்றபடி கிச்சன்னுக்குள்  சென்றுவிட்டார்.

இப்போதானே என்னோட வாண்டுகள கஷ்டப்பட்டு தூங்க வச்சேன்...மறுபடியுமா கஷ்ட காலம்'ன்னு மோனங்கிகிட்டே...
என்ன கதை சொல்வது?? நான் கதை எழுதுவேன் என்று யார் புரளியை கிளப்பியது? ..நானே பெருமைக்கு எப்போவாச்சும் பில்ட் அப் குடுத்திருப்பேன் போல..ம்ம் .. யோசிச்சிட்டே இருந்த என்னை..
கத சொல்லுங்க அத்தை என்றான் பவிக்...

மனதை தேத்திக் கொண்டு.. என்னுடைய வலையில் எழுதுவதற்காக  ஒரு சிறுகதை ஒன்றை கற்பனை செய்து வைத்திருந்தேன்...அந்த கதையைச் சொல்லி வாண்டுகளின் கருத்தை வாங்குவது என்று முடிவெடுத்தேன்.

ஆரம்பித்தேன்..

"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. 
ரெண்டு பேரும் என்னை மொரைகிறாங்க....

பவிக்: போங்க அத்தை கதை ரொம்ப பழசு ...

"சரி சரி...ஒரு ஊர்ல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி  இருந்தாராம் . 
விஷால்: ரஜினி வேணாம் அத்தை சூர்யா....

சரி...சூர்யா இருந்தானாம்...அவனோட தோட்டத்துல மாம்பழ செடி வச்சானாம், செடி மரமாச்சாம்....ஆனா ஒரு மாங்காய் கூட வந்ததே இல்லையாம்.

பவிக்: தண்ணி ஊத்தலியா அத்தை?

"சொல்றது மட்டும் கேளு. குறுக்கால கேள்வி கேட்காத சரியா"

விஷால்: "சரி நீங்க சொல்லுங்க அத்தை " 

சூர்யா ஒரு நாளு தோட்டத்துக்கு போனானாம்...போனவனுக்கு பயங்கர அதிர்ச்சி..

பவிக்: "பூதம் வந்துச்சா அத்தை "

"இங்கபாரு..இப்படியெல்லாம் கூடால பேசுனா அத்தைக்கு மறந்து போயிடும் அப்புறம் கதை கிடைக்காது. சொல்லிட்டேன்"

"ஓய்ய்" கிச்சனிலிருந்து அக்கா குரல்....

"விடமாட்டாங்களே...சரி..

அவனோட மாம்பழ மரத்துல நிறைய மாம்பழம் இருந்துச்சாம்.ஆனா அவன் ஒ
ரு பழங்ககூட சாப்பிடல.

பவிக்: "ஏன் அத்தை அவனுக்கு எட்டலியா?

"ஸ்ஸ்ஸ்ப்பா"

பவிக்: "சரி சொல்லுங்க. நான் இனிமே பேசமாட்டேன்" 

"அப்புறமா ரொம்ப நேரம் கழிச்சு ஒரு பழம் பரிச்சு சாப்பிட்டு பாத்தானாம், பழம் சூப்பரா இருந்துச்சாம்"

பவிக்: "சூப்பரான்னா?"

"நல்லா ஸ்வீட்டா இருந்துச்சாம். அவனுக்கு ஒரே சந்தோசமாம். ஊர்ல எல்லோரும் அவன் மரத்துல பழம் பறிக்க ஆரம்பிச்சாங்களாம்.  எல்லாரும் பழம் பரிச்சுடுராங்கலேன்னு நெனச்சு அவனோட மரத்தை சுத்தி வேளி போட்டு வச்சானாம். அப்படி இருக்கும் போது ஒரு நாள்.."

விஷால்: "ஒரு நாளு..."

"ஒரு நாள் காலையில அவன் எழுந்திருச்சு பார்த்தா வேளி எல்லாம் உடைஞ்சு போயிருக்குதாம். சரின்னு மறுபடியும்  வேளியை  சரி பண்ணிட்டு அன்னைக்கு போய் படுத்து தூங்கினானாம். திரும்ப காலையில வந்தப்ப வேளி உடைஞ்சு கிடக்குதாம்."

பவிக்: "ஏன் அத்தை உடைஞ்சு போச்சு?" 

விஷால் : "ஏய் அது ஸ்டாராங்கா இல்லடா . இல்ல அத்தை?"

"அதான் சொல்றேன்ல அதுக்குள்ள என்ன அவசரம்?.

ஊர்ல எல்லார்கிட்டேயும் பயங்கரமா கோவப்பட்டானாம். எல்லோரும் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். சரின்னு அன்னைக்கு
வேளியை சரி செஞ்சுட்டு.. .."

விஷால் : "காலையில பார்த்தா வேளி உடைஞ்சு கிடக்குதாம்" 

"டேய் அதிகபிரசங்கிதனமா பேசாதே. அதான் அத்தை சொல்றேன்ல.....

அன்னைக்கு வேளியை சரி பண்ணிகிட்டு ராத்திரி அங்கேயே வெயிட் பண்ணி யார் இந்த மாதிரி செய்யுறான்னு பார்த்தானாம். சரியா பன்னெண்டு மணிக்கு "திபு திபு திபு திபு"ன்னு நிலாலருந்து ஒரு பெரிய யானை இறங்கி ஓடி வந்துச்சாம். "

பவிக் : "பெரிய யானையா அத்தை" 

"ஆமாண்டா செல்லம். ரொம்ம்ம்ம்ப  பெருசாம். அதோட வாலு  ரொம்ம்ப பெருசா இருந்துச்சாம்."

விஷால்: "டேய் பவிக் இவ்ளோ பெருசா இருக்கும்டா" கையை முடிந்த மட்டும் விரிக்கிறான் விஷால்.

பவிக்: "இல்லடா அது நம்ம ஸ்கூல் விட பெருசா இருக்கும் தெரியுமா"

"அத்தை இங்க பாருங்க அத்தை  ஸ்கூல் விட பெருசா எங்கன்னா யானை  இருக்குமா?ஹ..ஹ. அப்படின்னா அது டைனோஸர்" சிரிக்கிறான் விஷால்.

விஷால் : "அத்தை நேத்து டிவி'ல டைனோஸர் படம் போட்டான். அதுல ஒரு.."

"டாய் அத்தை கதை சொல்லிட்டுருக்கேன்ல. அத கவனிங்கடா அப்புறம் பேசலாம்.
அந்த யானை வேளியை உடைச்சு வந்து மாம்பழம் எல்லாத்தையும் சாபட்டுச்சாம்.  

 பவிக் :  கொட்டையோடவா அத்தை ?


ஸ்ப்பா....டேய் கதைய கேளுடா முதல்ல..   
 
அத பார்த்துகிட்டுருந்த அவன் ஓடிப் போய் அந்த வாலை புடிச்சுகிட்டானாம். அந்த யானை நிலாவுக்கு நேரா போச்சாம்"

"செல்லம்... அந்த யானை திரும்பி பாக்கல" குரல் கேட்டு திரும்பினேன். கையில் கரண்டியுடன் அக்கா.

அக்கா: "சீக்கிரம் சொல்லுடா. எனக்கு வேலை இருக்கு"

"உள்ள வேலை இருக்குன்னு இங்க என்ன பண்றீங்க ?"

அக்கா: "அதெல்லாம் உனக்கெதுக்கு நீ கதைய கண்டினியூ பண்ணு" என்றார் அக்கா...

"நிலாவுல இறங்கிப் பார்த்தா நிறைய தங்கம்,வைரம், வைடூரியமெல்லாம் இருந்ததாம்" கண்களையும் நெற்றியையும் சுருக்கி அதன் பிரம்மாண்டத்தை விளக்கினேன்.

பவிக் : "வைடூரியம்ன்னா என்ன அத்தை?" 

"சரி கிண்டர் ஜாய், குர்குரே, டைரி மில்க், லேஸ்ன்னு வச்சுக்கோ...நிறைய இருந்துதாம் எல்லாத்தையும் கைநிறைய அள்ளிகிட்டு மறுநாள் நைட்டு அங்கிருந்து யானை கிளம்பும் போது திரும்பி வந்தானாம்.

ஆனா அன்னைக்கு இவனை காணாம அவன் பொண்டாட்டி ஜோதிகா  ரொம்ப கவலைப்பட்டாளாம். ஊர்ல யார கேட்டாலும் ஒன்னும் தெரியலையாம். அப்புறம் அவன் வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாளாம். கொண்டு வந்த தங்கத்தையெல்லாம் அவளுக்கு கொடுத்தானாம். பொண்ணுக்கு கிண்டர் ஜாய்யும்
  ,குர்குரேயும், லேஸூம் கொடுத்தானாம்.

எப்படி கிடைச்சுதுன்னு கேட்டதுக்கு நைட்டு நடந்த விசயத்த சொன்னானாம். இத யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னான். அவுங்களும் சரின்னு தலையாட்டினாங்களாம் . சரி ஏதாவது உங்களுக்கு புரியுதா?"
"ம்ம் புரியுது அத்தை" கோரஸ்...

"ஜோதிகாவும் , அவங்க பொண்ணு தியாவும் நிலாவுக்கு போகனும்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க. சரி சரி இன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான் சூர்யா. அப்புறம் ஜோதிகா தண்ணியெடுக்க வந்த அவளோட ஃப்ரெண்டு, எங்கடி போனான் உன் புருஷன்னு கேட்க.. இவளும் யார்கிட்டயும் சொல்லாதேன்னு உண்மைய சொல்லிட்டா. இது கொஞ்சம் கொஞ்சமா ஊர் ஃபுல்லா பரவிடுச்சு"

அக்கா: "அய்யய்யோ..."

"என்ன அய்யய்யோ......உள்ள போயி வேலைய பாருங்க" என்றேன். நகருவது போல் நகர்ந்து பின்னாலேயே இருந்தார்.

"மறுநாள் சூர்யா.. பொண்டாட்டி ஜோதிகாவுடனும்  பொண்ணு தியாவுடனும்  பெரிய பெரிய பையோட காத்திருந்தானாம். அவனுக்கு தெரியாம இன்னொருத்தரும், அவுங்களுக்கு தெரியாம இன்னொருத்தரும்னு ஊரே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வெயிட் பண்ணிட்டுருந்தாங்களாம். அப்ப அந்த யானை "திபு திபு திபு திபு"னு ஓடி வந்ததாம். இவன் ஓடிப் போய் யானையோட வாலை பிடிக்க,அவன் கால அவனோட பொண்ணு  புடிக்க, அவளோட பொண்ணு கால அவளோட அம்மா புடிக்க , அவங்களோட கால இன்னொரு புள்ள புடிக்க, அவன் கால அவுங்கம்மா பிடிக்க...இப்படியே ஒருத்தர் கால ஒருத்தர் புடிச்சுகிட்டு ஊரே மேல போச்சாம்"

பவிக்: "காலு வலிக்காதா அத்தை ?"

"வலிக்கும் தான். ஆனா ஆசை யார விட்டது. அப்படியே போனாங்களா.....

"அப்ப அவனோட பொண்ணு தியா  "அப்பா நிலா ரொம்ப சூடா இருக்குமாப்பான்னு" கேட்டாளா , அதுக்கு  "இல்லடா ஸ்வீடி ரொம்ப ஜில்லுன்னு இருக்கும்னு" அப்பங்காரன் சொன்னான். நிலா எவ்ளோ பெரிசா இருக்கும்ப்பான்னு கேட்டா அவனோட பொண்ணு . அப்பங்காரன் இரண்டு கையும் விரிச்சு இவ்ளோஓஓஓஒ பெரிசா இருக்கும்னான். அவ்வளவு தான்.......எல்லாரும் செத்து போய்டாங்க"

பவிக் : "எப்படி அத்தை செத்து போனாங்க"

"அதான் டா யானை வால்ல இருந்து கைய எடுத்தவுடனே அவனும், எல்லாரும் கீழ விழுந்திடுவாங்கல்ல...அதான் செத்து போய்டாங்க"

விஷால்: "அப்புறம் என்னாச்சு அத்தை " 

"அதான் செத்து போய்டாங்களே அப்புறம் என்னாகும் கதை முடிஞ்சுது"

ம்ம்ம்ம் என்றபடியே இரண்டு பேரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அக்கா: ஏய்ய்ய்... எழுந்திருங்க உங்க அத்தைக்கு தான் எந்த வேலவெட்டியும்  இல்லை.. ஏதோ ஒலரிக்கிட்டு  இருகாங்கன்னா நீங்களும் உட்கார்ந்து கேட்டுகிட்டு, எழுந்திரிங்கடா  போய் கண்ண மூடி படுங்க போங்க  கண்ண தொறந்தீங்க வெங்காயத்தை தட்டி கண்ல போடுவேன்.

அவர்களும் அந்த அதட்டலில் தூங்கிவிட்டனர்...

நம்ம கதை அவ்வளவு மோசமாவா இருக்கு???.......அவ்வ்வ்வ்வ்வ்....டோடல் டாமேஜ்!!!!

(நண்பர் ஒருவரின் வலைப்பதிவு படித்து அந்த ஸ்டைலில் நான் முயற்சி செய்தது)