Monday, August 30, 2010

பதிவுலகின் Green Baby :அட நான்தாங்க...

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த சகோதரர்  சேட்டைகாரனுக்கு நன்றி :-)

வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-).

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


அஷீதா.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அஷீதா'தான் உண்மையான பெயர்(என்னா டீட்டைலா கேட்கறாங்கப்பா).என் பெயரே அழகா  இருக்கும் போது நான் ஏன்  மத்த பேருல எழுதனும்.

என்னோட வலைப்பதிவு  "நான் பேச நினைப்பதெல்லாம் " இது  உருவான   வரலாறு  சொல்றேன் கேளுங்க.எதுக்குமே  வரலாறு  ரொம்ப  முக்கியம்  பாருங்க . வீட்டுல ஆரம்பிச்சு காலேஜு ஆபிஸுன்னு ஒரு இடம் விடாம மொக்கை போட்டு போட்டு ஒரு  ஸ்டேஜுல 'பொல்லாதவன்'  படத்துல  வர  காமெடி  மாதிரி  ஆயிடுச்சு  நம்ம  நிலைமை. டேய்  குமாரு  நீ  கேளேன் , டேய்  நீ  கேளேன்  , மச்சி  நீ கேளேன் , மாப்பு  நீ  கேளேன்  இந்த  மாதிரி  நான்  மொக்கை  போட  மத்தவங்கள  கெஞ்ச  வேண்டியதா போய்டுச்சு. இதுக்கும் மேல பொறுக்க முடியாதுன்னு முடிவு பண்ணி தான்,  இனி  மக்களை  நம்பி  ப்ரோயோஜனம்  இல்லை வலையுலகத்துல இறங்கிட வேண்டியதுதான்.அங்க தான் நாம என்ன எல்லாம் பேச நினைக்கிறேமோ எல்லாமே சுதந்திரமா பேசலாம்ன்னு நினைச்சு "நான் பேச நினைப்பதெல்லாம்"ன்னு தொடங்கியாச்சு (பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல). ஏதாச்சும் இலவசமா கிடைச்சா Q' ல  நிக்கற  கூடத்துல  நானும்  ஒருத்தி . அபப்டி  இருக்கும்  போது  அன்பா  ஆதரவா கூகுளாண்டவர் எனக்கிட்ட வந்து  உன்னை மாதிரி ஒரு அறிவாளியைதான் இந்த  பதிவுலம் தேடுதுன்னு சொன்னாரு (மனசாட்சி: இப்படியா  சீனு போடுவ. உனக்கு  மொக்கை  தான்  போட  வரும்  அதுவும்  உருப்படியா  போட வராது.அதுக்கே  இவளோ  பில்டப்பா). அபப்டியே இலவசமா வலைப்பதிவு  ஒன்ணு  குடுத்தாரு அதான் ஆரம்பிச்சுட்டேன்.  காசு கட்டனும்னு ரூல் இருந்துச்சுன்னா இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
இந்த பதிவுகள் அப்படின்னு ஒன்னு இருக்குறதே குப்பைதொட்டி - ஆதவன்  அவர்களின் பதிவை படிச்ச பிறகு தான் தெரிஞ்சுகிட்டேன். தமிழிஷ் இணையத்தில் அவரோட நகைச்சுவை பதிவுகள் படிச்சிட்டு அவரோட ப்ளாக் பின்தொடர ஆரம்பித்தேன். அவர்  பதிவுகளில் வரும் பின்னூட்டத்தின் (கும்மிகள் ) மூலம் நிறைய பதிவுகளை  படிக்க ஆரம்பித்தேன்,படிக்க படிக்க எனக்கும் ஆசை வந்துவிட்டது எழுத. எனக்கு எப்போ அந்த ஆசை வந்துதோ அப்போவே பதிவுலகத்துக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒண்ணுமே செய்யல..எனக்கு விளம்பரம் பிடிக்காது.. இப்படி எல்லாம் சொல்லி உலக நடிப்பு நடிக்க ஆசை இல்லை. பிரபலம் ஆக என்ன எல்லாம் செய்யணுமோ எல்லாத்தையும் செய்தேன். முகபுத்தகம், ஆர்குட், ட்விட்டர், தமிழ்மனம், இப்படி சில இடங்களில் விளம்பரம் செய்தேன்.இப்படி  நான் செய்த விளம்பரத்தால சில பேரு உள்ளே ஏதாச்சும் இருக்கும்னு வந்து ஏமாந்துட்டுப்போனாங்க. இதை தவிர பதிவு எழுதின கையோட திருப்பதி போய் ஏழுமலையானுக்கு மூணு தடவ  மொட்டை போட்டுட்டு வந்த கதை வேற இருக்கு. இது எதுவுமே கை குடுக்காத சமயத்துல தான்,  எனக்கு கிடச்ச ஒரே ஆயுதம் என் ஆபிஸ் நண்பர்கள்.ஒவ்வொரு பதிவு எழுதி முடிச்சதும் விடாம அவங்களை மிரட்டி மிரட்டி என்னோட பதிவுகள் படிக்க வச்சேன். நான் ப்ராஜக்ட் மேனேஜரா   இருக்கறதனால என்னோட டீம் மெம்பர்ஸ்க்கு நான் தான் லீவ் சாங்க்ஷன் பண்ணனும். அதனால என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போட்டா  தான் லீவு சாங்க்ஷன் பண்ணுவேன்னு ப்ளாக்மெயில் செய்வேன்(இதெல்லாம் ஒரு பொழப்பு). இப்படி தாங்க நான் பிரபல பதிவர் ஆனேன் :)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆமா ன்னு சொன்னாலும் வம்பு , இல்லைன்னு சொன்னாலும் வம்பு. அதனால இப்போதைக்கு :) ஒரு சிரிப்பானை மட்டும் பதிலா போடறேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் பதிவுகள் மூலமா சம்பாதித்த காசு வச்சு தான் போயஸ் கார்டன்ல ரஜினி வீட்டு பக்கத்துல ஒரு பெரிய பங்களா வாங்கி  இருக்கேன். எங்க வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தா ..அப்படியே ரஜினி வீட்டுல இருக்கற மினி தியேட்டர் கூட தெரியுது..இந்திரன் படத்தையே ஜன்னல் வழியா பார்த்துட்டேன்னா
பாருங்க. அடுத்து benz கார் வாங்குறதுக்கு ரெடி ஆயிட்டு இருக்கேன். 

 
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இந்த கேள்வியை  பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்சதுல முதுகு தண்டு உடைஞ்சு இப்போ ராயபுரம் தர்ம ஹாஸ்பத்திரியில கிடக்குறேன். என்னை பார்க்க வரணும்னா ஆளுக்கு ரெண்டு  ஹோர்லிக்ஸ் பாட்டிலோடதான் வரணும். ஏனா நான் ஹோர்லிக்ஸ் அப்படியே சாப்பிடுவேன்.

அட போங்க பாஸ் இருக்கற  ஒண்ணு  வச்சுக்கிட்டு  அதுக்கு  மேட்டர்  தேத்தவே  ஐயா  புடி  அம்மா  புடின்னு  ஆயிடுது.  கேட்க்குராயிங்க பாரு கேள்விய..


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
நாகரீகம் இல்லாமல் எழுதறவங்க மேல கண்டிப்பா கோவம் வந்ததுண்டு , அவங்களவிட அந்த பதிவுக்கு பின்னூட்டம் போடறேன்னு சொல்லிட்டு ஒரு கும்பல் வந்து கும்மி அடிப்பாங்களே அவங்க மேல தான் அதிகமா கோவம் வரும்.. அபப்டியே அவங்க மூக்கு மேல குத்தனும்ன்னு தோணும். அப்புறம் அற்புதமாய் எழுதும் பலரிடம் மதிப்பும், மரியாதையும் வந்திருக்கு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
இது  வரை  யாருமே  நேரடியா தொடர்பு கொண்டு பாராட்டியது  இல்லை .பின்னூட்டத்தில  பாராட்டியதோடு  சரி .
ஆரம்பகாலத்துல ஆதவன் , சென்ஷி , வினோத்  கௌதம் , கோபி  இவங்க  எல்லோரும்  கமெண்ட்ஸ் போடுவாங்க. அன்பு  சகோதரர்  சேட்டைக்காரன் , வெட்டி  பேச்சு  சித்ரா, ஆதவன் இவங்க மூணு பேரும் தவறாம என்னுடைய ஒவ்வொரு  பதிவுக்கும் பின்னூட்டம் போட்டு இன்று  வரை  என்னை மேலும் மேலும்  எழுதுவதற்கு  உற்சாகப்படுதிட்டு இருக்காங்க. இவங்களுக்கு என் நன்றிகள்.  

நான்  எழுதுறது பாதிப் பேருக்குப் புரியாது, பாதி எனக்கே புரியாது அப்படி  இருந்தும்  என்னை மதிச்சு மூனு தடவ  விருது  குடுத்தாரு நண்பர் ஜெய்லானி. அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. (இப்போ  எல்லாம்  நமக்கு  எந்த விருதும் வரமாட்டேங்குதே என்ன மேட்டர்.அதான் நீங்க சொன்னா மாதிரியே உங்களை பிரபலம் ஆக்கிட்டேன் இல்ல, அடுத்த  விருது  ஏற்பாடு  பண்ணுங்கப்பு ). வால்பையன் , அஹ்மத்  இர்ஷாத் , ஜோ, முகிலன் , அச்சு , ஜீவ்ஸ்  இவங்களும் தொடர்ந்து  என்னை  உற்சாகப்படுதிக்கிட்டு  இருக்காங்க. இவங்களுக்கும் என்  நன்றிகள்.

இவங்க மட்டுமல்லாம, அவ்வபோது வந்து என்னுடைய பதிவுக்கு தகுந்த பின்னூட்டங்கள் போட்டு  என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைத்து அலுவலக நண்பர்களுக்கும், பதிவுலக  நண்பர்களுக்கும் , தமிழ்மணத்துக்கும், மற்ற அனைவருக்கும் என் நன்றிகள்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
சுருக்கமா  சொல்லனும்னா  நான்  ஒரு கலவை.. கொஞ்சம்  சாம்பார் , கொஞ்சம்  பாஸ்டா (pasta), கொஞ்சம்  ஜீன்ஸ் , கொஞ்சம்  மடிசார் , கொஞ்சம்  சுறுசுறுப்பு, கொஞ்சம்  சோம்பேறி , கொஞ்சம்  அறிவாளி  (அட  நம்புங்க) , கொஞ்சம்  கோமாளி , கொஞ்சம்  அழகு  (ஆசைக்கு  சொல்லிக்க  வேண்டியதுதான் ) கொஞ்சம்  சிரிப்பு , கொஞ்சம்  கோபம், கொஞ்சம் பரதம், கொஞ்சம் டிஸ்கோ கடைசியா கொஞ்சம் மொக்கை (நிஜமாவே கொஞ்சமாதான் மொக்கை போடுவேன்). மொத்ததுல நான் ஒரு Green Baby (அப்பாடா டைட்டில் வந்துடுச்சு).

Tuesday, August 17, 2010

உடைந்த பொம்மைகள்


டிகாரம் ஏழரை மணியை காட்டியது. இதே நேரத்தில் தினம் எனக்குமான ஏழரை தொடங்கி விடும். அனீஷ் கையில் மூன்று தினங்கள் முன் வாங்கிய விமான பொம்மையை சுவரில் மேலேயும் கீழேயும் தேய்த்து “ட்ருர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என சப்தம் எழுப்பிக்கொண்டிருந்தான். டிவியில் டாம் & ஜெர்ரி ஓடிக்கொண்டிருந்தது. எரிச்சலின் உச்சிக்கு சென்றேன். “டேய்ய்ய்” என மிகக்கூர்மையாக நான் எழுப்பிய அலறலில்ஒரு நிமிடம் அதிர்ந்து நிமிர்ந்தவன், இது தினமும் நடைபெறும் பள்ளிக்கு செல்லும் போராட்டத்தின் அலறல் என உணர்ந்து விமானத்தை தூக்கி எறிந்து ஓடினான். அது உடைந்தும் போனது. பின்னால் ஓடி அவனை பிடிக்க முயன்று நழுவி ஓடினான். தூரமாய் சென்று பின்பிறம் திரும்பி 'அதை' அசைத்து “ஒழுங்கு” காட்டினான். டிவியில் ”ஜெர்ரி” எகத்தாளமாய் சிரித்தது. சோர்வாய் கஜினியாகி தொடர்ந்தேன்.

ப்போ  பார்த்தாலும்  tom & jerry பார்க்கறதே வேலையா  போச்சு  உனக்கு...இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு, தினமும் இது மாதிரி அடம் பிடிக்கலாமா? அம்மா பாவம்ல? அம்மாவுக்கு ஆபிஸ்ல எவ்ளோ டென்சன் இருக்குன்னு தெரியும்ல உனக்கு? ” ரெண்டு கன்னம் அழுத்திப்பிடித்து எண்ணெய் தேய்த்த தலையில் வகிடெடுத்து வாரினேன்.
”அம்மா  ரெடி  ஆயிட்டேன்  வா  வா  போகலாம்.....இருவரும் அவசரமாக கிளம்பினோம்.” உடைந்த விமான பொம்மையை ஒரு சிறிய நீல நிறப்பெட்டியில் போட்டு அதை தன் பள்ளிகூட பையில் அடக்கினான். அவசரத்தில் அவனை விரட்டினேன். வண்டியை கிளப்பினேன்.
 
வீட்டில் இருந்து பள்ளிக்கு எனது ஸ்கூட்டியில் செல்வதற்கு சுமார் பத்து நிமிடங்கள் ஆகும்.
 
"குட்டி எப்போ பார்த்தாலும் இப்படி tom & jerry பார்த்துக்கிட்டு  இருக்கியே உனக்கு tom & jerry பைத்தியம்  தான் பிடிக்க போகுது பாரு." 
 
"நீயும் தான் மம்மி டெய்லி சூப்பர் சிங்கர் பார்க்குற, அப்போ உனக்கும் தான் சூப்பர் சிங்கர் பைத்தியம் பிடிக்க போகுது.." 
 
"எதுக்கெடுத்தாலும் இப்படி எடக்கு முடக்கா பேசிக்கிட்டே இரு உன் அப்பா மாதிரி.."
 
"மம்மி இன்னைக்கு வீட்டுக்கு சீக்கிரம் வா மம்மி, சுஜி எனக்கு ஒரு சூப்பர் விளையாட்டு சொல்லிகொடுத்தா அது விளையாடலாம்"

"சூப்பர் விளையாட்டா.." தூர சிக்னலில் மஞ்சள் விழுந்து விட்டது. பேச்சிலும் வண்டியின் வேகத்திலும் அழுத்தம் கொடுத்தேன்.

“ஆமா.. மம்மி கையை இப்படி வையேன். நான் சொல்லிகொடுக்கிறேன்” பின் சீட்டிலிருந்து கையை ஏதோ ஒரு வடிவத்தில் வைத்திருக்கிறான். சத்தம் மட்டும் வந்தது.

“டேய் சும்மா இரு மம்மி வண்டி ஓட்டிகிட்டு இருக்கேன்ல” அவன் பேச்சிற்கு வளையாமல் டிராபிக் நெரிசலில் வளைந்து போனேன்.
பள்ளிகூடத்தின் வாசலில் நிறுத்தினேன். ”சரி சரி..குட்டி இன்னைக்கு லஞ்ச் பாக்ஸ்ல சாம்பார் சாதமும் ,தயிர் சாதம் வச்சிருக்கேன். உனக்கு எது பிடிக்குதோ அது சாப்பிடு. எதுவுமே சாப்பிடாம மட்டும் இருக்காத டையர்ட் ஆயிடுவ...சரியா.  ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல  ஆப்பிள் கட் பண்ணி  வச்சிருக்கேன் புடிச்சவரைக்கும் அதையும் சாப்பிடு..” முடிக்கவில்லை

பையை துழாவிய படி ”ம்ம்...சரி  மம்மி.” என்றான்.
”ஸ்கூல்ல டீச்சர் சொல்றது கவனமா கேக்கணும் , பசங்களோட சும்மா சும்மா சண்டை போடாத. விஜய்  ஸ்டைல்ல  குத்தறேன்.. ரஜினி ஸ்டைல்ல சண்டை போடறேன்னு ..பசங்கள போட்டு அடிச்சேன்னு வச்சுக்கோ  அப்புறம் நான் உன்னை  ஹாஸ்டல்ல  சேர்த்துடுவேன் சொல்லிட்டேன். ”

”டிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...நான் அடிச்சா தாங்க மாட்ட , நாளு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட...”

”ஹ்ம்ம் ஹ்ம்ம் நீ திருந்தவே மாட்ட..”
சரி சரி பெல் அடிச்சுட்டாங்க டா குட்டி சீக்கிரம்  சீக்கிரம்  பாக் எடுத்துக்கோ, லஞ்ச் பாக் எடு" என்று சொல்லிகொண்டிருக்கும்போது..

அவன் கையில் அந்த நீல நிறப்பெட்டி இருந்தது. இன்னும் பையில் துழாவிக்கொண்டே இருந்தான்.

செல்போன் அலறியது. ராஜேஷ் காலிங்....... “ம்ம் சொல்லுங்க ராஜேஷ். ம்ம் ஆமா.. வந்துட்டே இருக்கேன். ப்ச் எல்லா ஸ்லைடும் நேத்தே ரெடி பண்ணிட்டு தானே வந்தேன். அது போட்டு காட்டி கொஞ்ச நேரம் ஓட்டுங்க. நான் வந்திடுறேன்.”
 
கையில் நீலநிறப்பெட்டியை வைத்துக்கொண்டு மிரட்சியாய் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான் அனீஷ்.

“கொஞ்ச நேரம் அவங்களை மேனேஜ் பண்ண தெரியாதா ராஜேஷ் உங்களுக்கு? எனக்கென்ன இறக்கையா இருக்கு பறந்து வர? ப்ச் மீட்டிங் இருக்கு சீக்கிரம் வரனும்னு நீங்க எனக்கு சொல்லாதீங்க, மைண்ட் இட்.. சரி வைங்க. நான் வரேன்” நெற்றியில் வியர்வை துளிர்க்க ஆரம்பித்தது.
"மம்மி.. மம்மி..." என்றான்

"என்னடா குட்டி .."

"இந்தா  மம்மி" என்று அந்த நீல நிற விளையாட்டு பெட்டியை (toy box) என்னிடம் குடுத்தான்.  
 
"என்னடா இது" என்று கேட்டதற்கு

"இது..."என்று சொல்ல ஆரம்பித்தான்..அவன் சொல்வதை கேட்க்க நேரமில்லாமல் அவன் கையிலிருந்து அந்த பெட்டியை வாங்கி அவனை ”டைம் ஆயிடுச்சு போடா குட்டி" விரட்டினேன். தொங்கிய தலையோடு பள்ளிக்குள்ளே நடந்தான். கீ கொடுத்த இயந்திரமாய் எந்திர வாகனத்தை செலுத்தினேன்.

குறுக்கே வந்த நாய், பிச்சைகாரன், ரோட்டார பான்பராக் கடையில் உத்துப்பார்க்கும் ஒரு பொறுக்கி, சிகப்பு சிக்னல், நெற்றியிலிருந்து வடியும் வியர்வை, சிரித்தபடி செல்லும் கல்லூரி மாணவிகள், ப்ளாட்பாரத்தில் தன் குழந்தைக்கு உணவை ஊட்டும் தாய், புகையை கக்கும் பேருந்து, நான்கு மாடியில் இன்னும் இரண்டு வருடங்கள் லோன் பாக்கி இருக்கும் வங்கியின் கிளை,  பற்கள் கூசும்படி மெலிதாக உராய்ந்தபடி செல்லும் பைக் காரன் என காட்சிகளை நிலைநிறுத்த முடியாமல் பைத்தியமாய் அலைந்த கண்கள், கடைசியில் சிறிது நேரத்துக்கு முன்பு கண்ட, நீலநிற பெட்டியோடு பள்ளிகூட வாசலில் மிரட்சியுடன் அனீஷ் நிற்பதில் நிலை குத்தி நிற்க  அழுகையே வந்துவிட்டது. காரணம் தான் தெரியவில்லை.

லுவலகத்திற்கு சென்றதும் மீட்டிங். அனீஷ் கொடுத்த  பெட்டி லஞ்ச் பாக்ஸோடு வைத்திருந்ததால் அதைப் பற்றி சுத்தமாக மறந்து , வேலையில் மூழ்கிவிட்டேன்.  இயந்திரத்திற்கும் ஓய்வு தேவைப்பட்டது. லேசாக  பசிக்கவே சரி சாப்பிடலாம்  என்று , பையில் இருக்கும் டிபன் பாக்ஸ் எடுக்கும் போது கண்ணில் பட்டது அனீஷ்  கொடுத்த  அந்த நீல நிற விளையாட்டு பெட்டி. என்னதான் இருக்கு இதுல என்று அந்த பெட்டியை திறந்தேன்.

இரண்டு பழுதடைந்த ரிமோட் கார்கள், 6 சாக்லேட் ராப்பர்கள், ஸ்டியரிங் உடைந்த சைக்கிள், ஒரு பக்கம் லேசாக  வீரல் விழுந்த  கூலிங் கிளாஸ், செயலற்று போன வீடியோ கேம்,பென் 10 ஸ்டிக்கர்ஸ் ,ஸ்பைடர்மான் பொம்மை, கிண்டர்ஜாய்'யில்  வந்த சிறிய யானை பொம்மை,crayons....இன்று காலை உடைந்த விமான பொம்மை.
அடடா  எல்லா பொம்மையும் இப்படி உடைஞ்சு போய் இருக்கே..என்னிடம் எதற்கு இதைக்கொடுத்தான்? ஒருவேளை எல்லாம் உடைந்து போய் இருக்கிறது. புது பொம்மை விளையாட கேட்கிறானா? இருக்கும். ...புது பொம்மைகள் வாங்கி குடுக்கணும் செல்லத்துக்கு என்று யோசித்தபடியே..சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்ததும் டேபிள் மீதி சிந்திய சாப்பாட்டுடன் சேர்த்து அந்த உடைந்து போன பொம்மைகளையும் குப்பைதொட்டியில் போட்டுவிட்டு டேபிளை சுத்தம் செய்து விட்டு மீண்டும் வேலையில் மூழ்கிவிட்டேன்.
 
ரவு சோர்வாய் வீட்டிற்குள் நுழைந்தேன். மனுஷியாய் இருக்க போகிற சில மணி நேரங்கள். சோபா மீது உட்கார்ந்து டிவியில் கண் நிலைத்திருந்தது. 
அனீஷ் சோபாவிலேயே உறங்கியிருந்தான். தலையை கோதினேன். மெலிதாய் விழித்தான். வயிற்றில் கையை வைத்து ”சிக்கிலிக்கா விளையாட்டு” விளையாடுனேன். குட்டி பையன் தூங்கிட்டீங்களா? அய்யோ சாப்பிடாம தூங்கிட்டீங்களா? என் அம்முல்ல வாடா செல்லம் மம்மி ஊட்டி விடுறேன்” கொஞ்சினேன். சிரித்துக்கொண்டே எழுந்தான். 

”மம்மி.. நான் காலையில கொடுத்த டாய்ஸ் பாக்ஸ் எங்க மம்மி?” எனக்கு ‘பக்’ என்றது. அந்த பெட்டியை பற்றி சுத்தமாக மறந்து போனது எனக்கு. அவன் அந்த பெட்டியை பற்றி கேட்ப்பான் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை, அதில் இருந்தவற்றை வேறு குப்பையில் கொட்டிய ஞாபகம். அது வேண்டும் என இவன் இப்போது அழ ஆரம்பித்தால் விடியும் வரை அழுவானே. சமாளிக்க வேண்டியது தான்.
 
"என்ன பாக்ஸ் டா செல்லம்..."
 
"மம்மி அதான் அந்த ப்ளூ கலர்ல ஒரு பாக்ஸ் குடுத்தேனே ஸ்கூல் கிட்ட.."
”மம்மி எடுத்திட்டு வர மறந்துட்டேன் டா குட்டி....ஆபீஸ்ல பத்திரமா வச்சிருக்கேன், நாளைக்கு எடுத்திட்டு வரேன்."

"மம்மி இந்த ஸ்டிக்கர் ஒட்டி தரணும்னு நினைச்சேன் ஆனா மறந்துட்டேன். அந்த பாக்ஸ்ல இருக்கிற பொம்மை எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது..  உங்களுக்கு ஆபீசுல போர் அடிக்கும் போது நீங்க விளையாடுவீங்கன்னு உங்களுக்கு கொடுத்தேன்."
"மம்மி உண்மைய சொல்லுங்க நீங்க அந்த பாக்ஸ் தொலைக்கலியே ?"
"ச்சே  ச்சே  இல்ல டா செல்லம், என் குட்டி செல்லத்தோட பாக்ஸ்சை  மம்மி தொலைப்பேனா சொல்லு".. என்று அவனை கட்டி அணைத்த போது அவன் கையில் இருக்கும் ஸ்டிக்கர் என் கண்ணில் பட...
"இது என்ன டா செல்லம்" ..என்று அவன் கையில் இருக்கும் ஸ்டிக்கரை வாங்கி பார்த்தேன்..அதில் "I love u mummy" என்றிருந்தது..

அந்த 6 வயசு  பிஞ்சு மனசுக்கு அந்த பெட்டியில் இருப்பது சாதாரண உடைந்த பொம்மைகள் இல்லை அதை அவன் பொக்கிஷமாகவே நினைச்சுகிட்டு இருக்கான்...அவனுடைய அன்பை அந்த பெட்டியின் மூலம் எனக்கு தெரிய படுத்த முயற்சி செய்திருக்கிறான், ஆனால் நான் தான் அதை புரிஞ்சிக்காம  தவறிவிட்டேன், தவறிவிட்டதும் இல்லாம அந்த பெட்டியை அலட்சியமாக குப்பைத்தொட்டியில வேற  போட்டுட்டேன்..ச்ச்சே எப்படி அவனோட இந்த அன்பை  நான் புரிஞ்சிக்காம  போனேன்னு நினைக்கும் போதே என்னையும்  அறியாமல் அழுகை வந்தது.

காலையில் முதல் வேலையா ஆபிசுக்கு போய் அந்த பொம்மை எல்லாம் எடுத்துட்டு வரணும்..இதான் மனசுல ஆழமா  இருந்துது. காலை எழுந்ததும் ஆபிசுக்கு கிளம்பினேன், காலை 7 .30 மணிக்கு ஆபிஸ் சுத்தம் செய்ய ஆயம்மா வந்துடுவாங்க,அதுக்குள்ள நாம போகணும்ன்னு அவசரமா கிளம்பினேன். ஆபீசுக்கு போனதும் கடகடன்னு குப்பைதொட்டியில் இருக்கும் எல்லா பொருட்களையும் டேபிள் மீது கொட்டி  ஒரு வழியா எல்லா பொம்மையும் எடுத்து சுத்தம் செய்து அந்த பெட்டிக்குள் போட்டதுக்கு அப்புறம் தான் போன உயிர் திரும்ப வந்தது மாதிரி இருந்துது...

ன்று மாலை.. இரவு உணவுக்கு முன்பு..அனிஷை பக்கத்தில் அமர வைத்து, அந்த பெட்டி அவனிடம் காட்டி....
'குட்டி இந்த பெட்டியில் என்ன என்ன பொம்மை இருக்கு சொல்லு பாப்போம்' என்றேன்.
அவன் ஒவ்வொவொரு பொம்மையா  வரிசையா  சொல்ல ஆரமிச்சு அப்படியே ஒவொரு பொம்மைக்கும் ஒரு பின்னணி கதையும் சொல்லிக்கிட்டே போனான்..
”அது வந்து....அது வந்து..” யோசிக்கிறான். “டிராயிங்ல பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கினப்ப கிடைச்சுதுல்ல க்ரயான்ஸ் அது.... அப்றம், அம்மம்மா என் பர்த்டேவுக்கு வாங்க் தந்தாங்கல்ல அந்த ரிமோட் கார், தாத்தா வாங்கி தந்த சைக்கிள், ஊட்டிக்கு டூர் போனப்ப டாடி வாங்கி கொடுத்த வீடியோ  கேம் , என் ப்ரெண்டு தருண் கிட்ட சண்டை போட்டு உடைஞ்சு போன என் பென்சில் பாக்ஸ்.. அப்றம் அப்றம்“ ஒவ்வொரு பிஞ்சு விரலையும் எண்ணிக்கைக்காக அவன் அடையாளப்படுத்தி யோசித்த போது ஸ்தம்பித்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் சொல்ல சொல்ல எல்லா சம்பவங்களும் அப்படியே என் மனதில் ஓட ஆரம்பித்தன. இப்போ தான் நான் உணர்ந்தேன் அந்த பெட்டியில் இருப்பது குப்பை இல்லை அவனுடைய நினைவுகளும் ,அன்பும்  நிறைந்திருக்கும் பொக்கிஷம்  என்று.
 
"நான் நீ லேட்டா வரும் போதெல்லாம் அது தான் மம்மி விளையாடுவேன். ஜாலியா இருக்கும்... நீ ஏன் மம்மி ஆபிஸ்ல இருந்து லேட்டா வர்ர? அங்க உனக்கு போரடிக்கும்ல? இந்த பொம்மையெல்லாம் ஆபிஸ் கொண்டு போய் விளையாடிட்டு , வீட்டுக்கு வரும் போது எடுத்துட்டு வந்திடு மம்மி நாம ரெண்டு பேரும் விளையாடலாம். இதெல்லாம் விளையாண்டா கோபமே வராது தெரியுமா... நீ என்னை திட்ட கூட மாட்ட பாரேன்..... மம்மி ஏன் அழற?” என் தாடையை பிடித்து தூக்கினான்.

அவனைப்பார்க்கும் சக்தியை முழுவதுமாக இழந்திருந்தேன். சத்தம்போட்டு அழுதேன். அவனை கட்டிக்கொண்டு அழுதேன். அவனும் பயந்து போய் அழ ஆரம்பித்தான். ”மம்மி அழாத மம்மி. ஏன் மம்மி அழற?
“இல்லடா செல்லம் மம்மி அழல. நீ அழாத சரியா. ரெண்டு பேரும் விளையாடலாமா” சிரித்தேன்

“மம்மி சுஜி சொல்லி கொடுத்த விளையாட்டு விளையாடலாமா?”
கைகளை விதவித வடிவங்களில் வைத்து மழலை குரலில் ஒரு பாடலுடன் விளையாட்டை மிக ஆர்வமாக சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தா
ன். நேரம் போனது தெரியவில்லை. “சரி விளையாண்டது போதும். மீதி நாளைக்கு விளையாடலாம். இப்ப வா சாப்பிடலாம்”

“போ மம்மி நாளைக்கு நீ விளையாட வரமாட்ட. ஆபிஸ் போயிடுவ”

”இனி மம்மி ஆபிஸ் போக மாட்டேன்” கிச்சனுக்குள் நுழைந்தேன். சேலையை பிடித்தபடி ”ஹேய்ய்ய்” என கத்திக்கொண்டு கூடவே ஓடி வந்தான். டிவியில் “டாம் & ஜெர்ரி” ஓடிக்கொண்டிருந்தது.