Wednesday, May 19, 2010

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல...

என்ன பதிவு எழுதுவது என்று யோசித்து கொண்டு இருக்கும் சமையத்தில் தான் நண்பர் ஆதவன் "தேர்வு" என்ற தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். ’ஆத்துல போற தண்ணிய அய்யா குடி அம்மா குடி’  என்ற மாதிரி பத்தோட பதினொன்னா பாவம் போனா போகட்டும்ன்னு என்னை கூப்பிட்டு இருந்தாரு. நமக்கு சொல்லவா வேணும் பெருமை தாங்கல....தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி பாஸ்.

பள்ளி  நாட்கள், கல்லூரி நாட்கள் எத்தனை இனிமையானதா இருந்தாலும். என்னை ஏன்டா படைச்ச ஆண்டவான்னு பொலம்ப வச்சது பரீட்சை நாட்கள். ம்ம்ம்.. மன்னிக்கணும் இந்த இடத்தில ஒரு சின்ன கொசுவத்தி.(flashback).

எங்க ஊரிலிருந்து இருபது  கிலோமீட்டர் தள்ளி தான் நாங்க படிச்ச பள்ளிக்கூடம் இருந்தது.
எங்க ஊரிலிருந்து நாங்க மூணு பேரு (நான், பிரேமா, உமா) ஒரே ஸ்கூலில் ஒரே வகுப்பில் படித்தோம். LKG முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூட பேருந்தில் சென்று கொண்டு இருந்தோம்.10 ஆம் வகுப்பில் இருந்து  நாங்க மூவரும்  டவுனில் இருக்கும் எனது சித்தி வீட்டில் தங்கி படித்தோம். பரீட்சை நேரங்களில் நாங்க செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது, கேலியும் கிண்டலுமா இருக்கும். பிரேமாவுக்கு பொறுப்புணர்ச்சி ரொம்ப ஜாஸ்தி..எப்போ பார்த்தாலும்  'நம்ம நல்லா படிக்கணும் நல்ல வேலைக்கு  போகணும்னு' ஏகப்பட்ட அட்வைஸ் செய்ஞ்சே என்  உசுரு வாங்குவா. ரொம்ப ஸ்ட்ரிக்ட், அவ சொன்னத படிக்கலன்னா  திட்டமாட்டா  அடிக்க மாட்டா...ஆனா மினிமம் ஒரு அரை மணி நேரம் லெச்சர் குடுப்பா.

பரீட்சை நேரங்களில் ராத்திரி 12 மணி வரை படிக்கணும்ன்னு ஆர்டர் போட்டுடுவா. 'History' புத்தகத்த கையில  எடுத்துகிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் செவுத்துல சாஞ்சிகிட்டு  கால நீட்டிகிட்டு உக்காருவோம். மூணு பேரு கால்களும் கிட்ட கிட்ட  வச்சிருப்போம் இதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு படிக்க படிக்க அது என்னனு உங்களுக்கே தெரியும். படிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலையே என் கண்ணு சொக்கி போய்டும். டப்புன்னு கால போட்டு தட்டி எழுப்புவா உமா...திடீர்னு முழிப்பு வரும் , நானும்  சுதாரிச்சிக்கிட்டு திரும்பவும் படிக்க ஆரம்பிப்பேன். அடுத்த 10 நிமிஷல்துல எனக்கே தெரியாம தூங்கிடுவேன். உக்காந்துட்டே தூங்கும் போது  மடி மேல இருக்கற புத்தகம் எனக்கே தெரியாம கீழே விழுந்துடும், வாயில் இருந்து ஜொள்ளு கூட வரும்.. அந்தளவுக்கு ஆழ்ந்த சுகமான தூக்கம். அப்போ இந்த சண்டாளி உமா பொண்ணு  ஏதாச்சும் பேப்பரை எடுத்து சுருளாக சிகரட்டு மாதிரி செய்ஞ்சி வாயில வச்சுடுவா..இல்லனா வத்திகுச்சி எடுத்து மூக்குல போடுவா. நானும் சடார்ன்னு எழுந்துடுவேன்...என்னை பார்த்து கேலி பண்ணி சிரிப்பாங்க ரெண்டு பேரும் . கோவம் பொத்துக்கிட்டு வரும். என்ன செய்ய விதி..இந்த சிச்சுவேசன்க்கு ஒரு பாட்டு..

ஊருசனம் தூங்கிருச்சு,
ஊத காத்தும் அடிச்சிரிச்சு,
இந்த ரெண்டு பிசாசுங்க
என்னை தூங்க விடலியே,
படிப்பும் மண்டையில் ஏரலியே...
சில சமயத்துல படிக்கிற ஆர்வத்துல அவங்க என்னை கவனிக்க மறந்திருப்பாங்க. நானும் நல்லா தூங்கி வழிவேன், கனவுல டக்குன்னு பிரேமாவோட முகம்  வந்து போகும், சடார்ன்னு முழிப்பு வரும். எப்போ எல்லாம் திடுதிப்புன்னு எழுந்திருக்கிறேனோ அப்போ எல்லாம் கால லேசா ஆட்டுவேன். நான் தூங்காம படிச்சிட்டு இருக்கேன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்கு தான்  இந்த சிக்னல். இம்புட்டு கஷ்டப்பட்டு  நடிச்சிட்டு இருக்கிற சமையத்துல, இந்த உமா  ராக்ஷசி  இருக்காளே சும்மா இருக்க மாட்டா 'ஏண்டி உன் காலு பத்து   நிமிஷத்துக்கு ஒரு தடவ ஆடிக்கிட்டே இருக்குன்னு'  பிரேமாவை உசுப்பு ஏத்தி விடுவா. அப்புறம் என்ன.. பிரேமா ஒரு 1 /2  மணி நேரம் லெச்சர் குடுக்க ஆரம்பிச்சுடுவா. இந்த கொடுமைக்கு 'History' பாடத்தையே படிச்சிருக்கலாம் போலயேன்னு தோணும். இந்த ரணகளத்துலையும் இந்த உமா பொண்ணு  ' ஹே மறந்தே போய்டோம்  இந்தியா , அமெரிக்கா  மாப் வேற பிராக்டீஸ் பண்ணனும்' ன்னு சொன்னவுடனே பிரேமா
என் தலைல கொட்டு போட்டு  ' ஏன்டி பாரு அவளை எவளோ இண்டரெஸ்ட்டா படிக்கிறா நீ மட்டும் தான் படிக்க மாட்டேங்குற, படிச்சா தான் நாளைக்கு நாம் டாக்டரோ இஞ்ஜினியரோ ஆக முடியும்'  ன்னு  பேசிட்டே போவா. நான் என்னத்த சொல்றது அது எல்லாம் அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் எவளோ கொடுமைன்னு. நட்பு என்னோட வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடி இருக்கு பாருங்க.
 
காலைல எக்ஸாம் ஹால் போகறதுக்கு முன்னாடியே காப்பி அடிக்கிற டிப்ஸ் & சிக்னல் எப்படி குடுக்கனும்னு எல்லாம் பிளான் பண்ணிடுவோம். என்ன பிளான் பண்ணி என்ன பிரயோசனம் என் பெத்தவங்க செய்த தப்புனால எங்களோட பிளான் சில நேரங்களில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். அது என்ன தப்புன்னு கேக்குறீங்களா..அந்த கொடுமை என்னன்னா அது என்னோட பேரு தாங்க. என்னோட பேரு "A" ல ஸ்டார்ட் ஆகரதுனால  நான் எப்போவுமே முதல் பெஞ்ச் தான். சோ காப்பி அடிக்கற சான்ஸ் ரொம்ப கம்மி.  'சரியான விடையை தேர்ந்தெடுக' மாதிரி கேள்விகளுக்கு மட்டும் சைகையாலேயே கேட்டுப்போம்.
பிட் எல்லாம் எடுத்திட்டு போனது கிடையாது...கணக்கு பாடத்துல வர பார்முலா(formula) எல்லாம் உள்ளங்கைல எழுதிடுவேன். அப்புறம் குட்டி குட்டி theorems எல்லாம் என்னோட எக்ஸாம் pad 'ல  பென்சில் வச்சு எழுதிட்டு போவேன். காப்பி அடிச்சு முடிச்சதும் ரப்பர்ல அழிச்சிடுவேன். எனக்கு பக்கத்துல +1, +2 படிக்கற பசங்க உட்கார்ந்து இருப்பாங்க. அவங்களுக்கு நடுவுல நான் உக்காந்து இருப்பேன். என்னோட நல்ல நேரமோ என்னமோ இது வரைக்கும் என் பக்கத்துல உட்க்கார்ந்த பசங்க எல்லாம் மக்கு பசங்க தான்.. பத்து நிமிசத்துல பரீட்சை முடிச்சிட்டு  உட்க்கார்ந்து இருப்பாங்க. என் பின்னாடி பிந்து'ன்னு என்னோட கிளாஸ்மெட் தான் உட்க்கார்ந்து  இருப்பா ..நான் உஸ் உஸ் ன்னு கூப்பிட்டு அவளோட பேப்பர்   கேட்பேன். "தருவீயா? தரமாட்டீயா? தரலைன்னா உன்பேச்சு கா!"
அவளோ பயந்து தரமாட்டேன்னு சொல்லிடுவா.

என்னடா பண்றதுன்னு நான் முழிக்கற முழிய பாத்துட்டு பக்கத்துல இருக்கற பசங்க பின்னாடி திரும்பி அவளோட பேப்பர் புடிங்கி குடுப்பாங்க. நான் காப்பி அடிச்சு முடிச்சதும் அந்த பேப்பர் எடுத்து அந்த பொண்ணுகிட்ட குடுத்திடுவாங்க. அந்த பொண்ணோட பேப்பர் அவளுக்கு போய் சேர்றதுக்குள்ள என் வாய் வழியா ஹார்ட் வெளிலே வந்துடும் போல இருக்கும். கடவுள் இருக்காருன்னு நம்பிக்கை வந்ததே இந்த பசங்களை பார்த்து தான். பரீட்சை  முடியற வரைக்கும் எனக்கு விநாயகர் , முருகன் , சிவன், எல்லாமே அந்த ரெண்டு பசங்க தான். இதே மாதிரியே காப்பியும்  கூத்துமா திக்கு தெணறி ஒரு வழியா 10ஆம்  வகுப்புல first class 'ல பாஸ் பண்ணியாச்சு.

பதினொன்றாம் வகுப்பில் (Elective groups) இருந்தது. முதல் இரண்டு க்ரூப்ல (கணிதம், வரலாறு, உயிரியல், இயற்பியல்) போன்ற பாடங்கள். மூன்றாம்  குரூப் வணிகம், கணினி  போன்றவை. நன்கு படிப்பவர்கள் முதல் இரண்டு க்ரூப்ளையும் என்னை போன்ற அறைந்த வாலுகள் மூன்றாவது  க்ரூப்ளையும் சேர்ந்தோம். பிரேமா முதல் குரூப் எடுத்ததும் எனக்கு பயங்கர சந்தோசம். இனி நமக்கு பிரேமாவின் லெச்சரிலிருந்து  விடுதலை விடுதலை.  உமாவுக்கு நர்ஸ் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்ததால் இரண்டாவது குரூப் (உயிரியல்) எடுத்த்தாள். பிரேமாவை பார்த்து ... அல்ஜிப்ரா இஸ் கோப்ரா’  என்றும்  உமாவை பார்த்து .....செத்த பிணத்தை அறுக்கிறவேலை, புண்ணைக் கழுவி மருந்து போடுறது நர்ஸ் படிப்பு சீ..சீ.. என்று  கிண்டல் பண்றதுமாவே போயிட்டு இருந்தது +1 வாழ்க்கை.
பொதுவாக மற்றவர்களை போல தினமும் படிக்கும் பழக்கம் இல்லை, தேர்வு நேரங்களில் மட்டும் புத்தகம் எங்கு இருக்கு என்று தேடி தூசு தட்டிவிட்டு படிப்பேன்.

+2 பரீட்சைக்கு பெரிதாக பயந்தது இல்லை. காப்பி அடிப்பதில் கொஞ்சம் வித்தைகள் கற்றுகொண்டதால் சிரமம் ஏதும் இல்லை (இது எல்லாம் ஒரு பொழப்பா என்று நீங்க திட்டுவது காதில் விழுகிறது). +1 &  +2   சேர்ந்தே கும்மி அடித்ததால் தோழிகளுடன் புரிதல் சற்று அதிகம் இருந்தது. இந்த புரிதல் தான் பரீட்சை நாட்களில் போட்ட பல பிளான் வெற்றி அடைய வச்சுது. என் விதிப்படி எப்போவும் நான் முதல் பெஞ்ச் தான். பல நேரங்களில் என் முன்னாடியே தான் சூப்பர்வைசர் நின்னுகிட்டு இருப்பாரு. பரீட்சை  ஹாலில் சூப்பர்வைஸ் செய்ய வரும் வாத்தியார்கள் எல்லாம் இஞ்சி தின்ன குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பின்புறம் கைகட்டி தர்பார் மண்டபத்தில் நடப்பது போல் நடக்கும் போது நான் பக்கதுல இருக்கிற பொண்ணு பேப்பர் வாங்கி காப்பியில்  மும்மரமாக மூழ்கி இருப்பேன்.

 
சில சமயம்  சூப்பர்வைஸ் செய்ய வரும் வாத்தியார் ரொம்ப சோம்பேறியா இருப்பாரு  உட்க்கார்ந்த  இடத்துல  இருந்து நகர மாட்டாரு. அதுவும் என் முன்னாடியே என் பேப்பரையே பாத்துட்டு 'என்ன இந்த பொண்ணு எதுவுமே எழுதாம முழிக்குதுன்னு'  யோசிக்கிற போல தோணும். ஏதாச்சும் தெரிஞ்சாதானே எழுதறது. ஏதோ எழுதற மாதிரி நடிக்கறதுக்குள்ள உசுரே போய்டும் ,அதுவும் இல்லாம பக்கத்துல பக்கம் பக்கமா எழுதுறவள பார்த்தா டென்ஷன் வரும் பாருங்க அதையும் அனுபவித்தா தான் தெரியும்.
ஹ்ம்ம் என் கஷ்டம் அவருக்கு எப்படி புரியும். இப்படி பட்ட வாத்தியார் வந்துட்டா.. எங்க இருந்து நாங்க போட்ட காப்பி அடிக்கும் பிளான் வொர்க் அவுட் ஆகறது. இந்த மாதிரி நேரத்துல தான் மூளையை உபயோகிப்போம். லாஸ்ட் பெஞ்ச்ல இருக்கும் பொண்ணு பார்த்து  சிக்னல் குடுப்பேன், அவளும் என்னோட கஷ்டம் புரிஞ்சுகிட்டு , அவ எழுந்து 'சார் கொஸ்டின் பேப்பர்ல ஒரு சந்தேகம் இருக்குன்னு ' சொல்லுவா. வாத்தியாரும் எழுந்து லாஸ்ட் பெஞ்ச்கு போய் சந்தேகம்  தீர்த்து வச்சுட்டு வர்ற அந்த காப்ல பக்கதுல இருக்குற பொண்ணு  பேப்பர் வாங்கிடுவேன். பின்னாடி இருக்கற பொண்ணு காப்பி அடிப்பதற்கு என்னோட பேப்பரை பெஞ்ச் மேல கொஞ்சம் நடுவுல வெப்பேன் அவளும் பாத்து எழுதிடுவா, அப்படி இல்லனா பேப்பர் நைசா கீழ போடுவேன், அவளுக்கு பார்த்து எழுதறதுக்கு வசதியா இருக்கிற மாதிரி, வாத்தியார்  பாத்துட்டு பேப்பர் ஏன் கீழ இருக்குன்னு கேட்பாரு  நான் டக்குன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி  "ஐயையோ சாரி சார் தெரியாம கீழ விழுந்துடுச்சு" ன்னு சொல்லி பேப்பர் எடுத்து வச்சுப்பேன். எப்படியோ ஒரு வழியாக +2 தேர்வு நல்ல படியாக காப்பி அடிச்சு பாஸ் ஆயாச்சு. படிக்காமலே நான் 89 % விடிய விடிய படிச்ச பிரேமாவும் உமாவும்  72 % , 69 % தான் வாங்க முடிந்தது. அன்னைக்கு அவங்க என்னை மொறச்சு பார்த்த பார்வை இன்னைக்கும் அப்படியே என் நெஞ்சுல ஈரம் ஆறாம இருக்கு. 


கல்லூரிக்குப் போய்விட்டால், மரியாதை இல்லாமல் பேசும் வாத்தியார் இருக்கமாட்டார், அடி உதை இருக்காது, தோழிகளுடன்
இஷ்டம்போல ஜாலியாகத் திரியலாம் இப்படியான எண்ணங்களுடன்தான் கல்லூரிக்குள் அடி வைத்தேன். கல்லூரியில் சேர்ந்தவுடன் ஒரு குரூப் பார்ம்  ஆச்சு..அன்றிலிருந்து வகுப்பில் உள்ள மத்த பசங்களை ஓட்டுவதும் ,கிண்டல் செய்வதுமாக  போய் கொண்டிருந்தது. படிக்காமலேயே தேர்வு எழுதினாலும் கூட எல்லா பாடங்களிலும் பாஸ் ஆக முடிந்த என்னால், இந்த accounts மட்டும் சுத்தி போட்டாலும் வரல. அப்படியும் accounts எக்ஸாம் அன்னைக்கு formulas எல்லாம் கையில எழுதிட்டு போவேன்..ஆனாலும் அந்த formula எங்க  யூஸ் பணனும்னு தெரியாம நொந்து நூடுல்ஸ் ஆனது ஏன் கேக்குறீங்க..பள்ளியில் காப்பி அடிக்க முடிந்த அளவுக்கு கல்லூரியில் காப்பி அடிக்க சந்தர்பம் கிடைக்காதது எந்த ஜன்மத்தில் செய்த பாவமோன்னு அடிக்கடி பீல் பண்ணி இருக்கேன். மத்த பாடங்களில் ஓரளவுக்கு நல்ல ரிசல்ட் வந்தாலும்  accounts மட்டும்  ரெண்டு வருசமும் அரியர் தான். எனக்கு இதான்  பிரச்சனை. எனக்குன்னு வரும்போது எதுவுமே நடக்குறது இல்ல. அப்படி நான் என்ன பெரிசா கேட்டேன். நீங்கலாம் வாங்குற மாதிரி Distinction ஆ கேக்குறேன் சாதாரண பாஸ் மார்க் தானே அது ஏன் எனக்கு மட்டும் கிடைக்க மாட்டேங்குது. எப்படியோ கடைசியா மூணாவது  அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணிட்டேன். 

கடைசி ஆண்டு பரீட்சைல நடந்த கூத்துதான் இது. Economics பேப்பர் எனறால் எங்க செட்ல எல்லோர்க்கும் கஷ்டம். எங்க கிளாஸ்ல சந்தோஷ்'ன்னு ஒரு பையன் சொன்னான்,  2000 ரூ இருந்தால் அவனுக்கு தெரிந்தவர் மூலமாக
கொஸ்டீன் பேப்பர் வாங்கிவிடலாம் என்று. நாங்க எல்லாம் அவங்க அவங்க கையில இருந்த காசு போட்டு வாங்கினோம். இதுல இருக்கற கேள்விகள் மட்டும் படிச்சா போதும்னு சந்தோஷ் சொல்ல, நாங்க எல்லோரும் அது  மட்டும் தான் படித்தோம். மறுநாள் காலைல எக்ஸாம். நாங்க எப்போவுமே இருக்கற டென்ஷன் இல்லாம கூலா போனோம் நமக்கு தான் எல்லாம் தெரியுமென்ற தெனாவட்டோட. கொஸ்டின் பேப்பர் பார்த்தவுடனே ஹார்ட்டே நின்னு போய்டும் போல ஆயிடுச்சு. நாங்க படிச்ச கேள்வி ஒன்னு கூட வரல. பரிட்சைல பெயில் ஆயிடுவுமோ என்ற கவலை விட...அந்த 2000 ரூ போன கவலை தான் பெருசா தெரிஞ்சுது. ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. ஏதோ எழுதிட்டு வெளியில வந்து முதல் வேலையா அந்த பையன் சந்தோஷை போட்டு மொத்து மொத்துன்னு மொத்தினோம்.

ரிசல்ட்ஸ்  வந்தது  நான் ஆல் பாஸ்...என்னோட செட்ல எல்லோரும் economics'ல பெயில். அதுக்கு அப்புறம் என்னோட நிலைமை எப்படி இருந்திருக்கும்ன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
எல்லோருக்கும் அவங்க பெயில் ஆனது விட நான் பாஸ் ஆனது அவங்களால தாங்க முடியாத துயரமாவே இருந்துது.

Tuesday, May 4, 2010

"யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" - விமர்சனம்


இணையத்தில்  அறிமுகமான நண்பர்  'நிலாரசிகன்' அவர்கள். நிலாரசிகனைப் பற்றியோ அவரது கவிதைகள் பற்றியோ நான் சொல்லித்தான் தெரியவேண்டியது இல்லை. தமிழ் பதிவர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் மற்றும் தமிழ் இணைய உலகில் மிகவும் அறியப்பட்டவர் நிலாரசிகன். இவரை பார்த்தது இல்லை, அதிகமாக பேசியதும் இல்லை. ஒரு முறை மடலில் பேசிக்கொண்டதோடு சரி. இந்த புத்தகம் படித்த பின் இவரை சந்தித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.
'யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்' நிலாரசிகனின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பை பற்றிய விமர்சனம் எழுதவே  நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  இந்த  சிறுகதை தொகுப்பானது 17 சிறுகதைகளை கொண்டது. ஒவ்வொரு கதையையும்  ஓரிரு பக்கங்களுக்கு மிகாமல் சொல்ல வந்த விஷயத்தை செவ்வனே சொல்லி முடித்திருப்பது இந்த சிறுகதை தொகுப்பின்  சிறப்பு அம்சம். அனைத்து கதைகளுமே மிக அருமை அதில் என்னை வெகுவாய் கவர்ந்த சில கதைகள் பற்றி என் கருத்துக்கள் இங்கே பதிவு செய்கிறேன்...

யாரோ
ஒருத்தியின் டைரி குறிப்புகள்:
சாதரணமாக படிக்க ஆரம்பித்த எனக்கு படிக்க படிக்க ஏதோ இனம் புரியாத சோகம், சுமை சூழ்ந்துகொள்கிறது. படித்து முடித்த கணம் மனதில் ஒரு சுமை ஏறியதை உணர்ந்தேன். இந்த கதையில்  வரும் அந்த சிறுமியின் கதாபாத்திரம் படிப்பவர்  மனதில் பதியுமாறு  கதையை நடத்தி செல்கிறார் நிலாரசிகன். தமிழ் படங்களில் வெளிப்படுத்தும் 'ஆர்பாட்டம்' , 'ஆபாசம்' இல்லாமல் மற்றும் ஆபாச  சுவடுகள் கூட படாமல் அந்த சிறுமியின் வேதனைகள், அல்லல்கள், அவஸ்தைகள் நம் ஆழ்மனதில் நிழற் படங்களாய் பதிய வைக்கிறார். சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று சிக்கி தவிக்கும்  பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை பற்றி எத்தனை படித்திருந்தாலும், இந்த கதை தனித்து நிற்கின்றது. சிறுமியின் சின்ன சின்ன உணர்வுகளையும் , வேதனைகளையும் மூன்றே பக்கங்களில் வெளிப்படுத்திய விதம் அருமை. கதை படித்த இரவு உறங்க முடியவில்லை, படித்து முடித்து 4 நாட்கள் ஆன பிறகும்  என்னால்  இந்த வலியிலிருந்து மீளமுடியவில்லை. ஒரு சிறுகதை இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு "முடியும்" என்று  உணர வைத்திருக்கிறார் நிலாரசிகன் அவர்கள்.


வேட்கையின் நிறங்கள்:
ஓரினச்சேர்க்கை என்ற துணிச்சலான கருவை எடுத்து ஒரு பெண்ணின்  உணர்வுகளை மிக வெளிப்படையாக எழுதிய  நிலாரசிகன் அவர்களுக்கு ஒரு சல்யூட். அங்காங்கே சில இடங்களில் மிகைப்படுத்தி எழுதி இருப்பது போன்ற உணர்வு  இருப்பினும் இரு பெண்களுக்கிடையில் இருக்கும் அந்தரங்கத்தை வெளிபடுத்திய விதம் அருமை. பெண்ணின் மனதில் புகுந்து அவளுடைய  அக உணர்வுகளை  விவரிக்கும் இடங்களிலும் சரி, காமம் கொள்ளும் தருணங்களை விவரிக்கும் இடங்களிலும் சரி , எங்குமே ஒரு சிறு சலிப்பையோ முகச்சுளிப்பையோ உண்டாக்காமல் லாவகமாக எழுதியதுதான் இந்த கதையின் சிறப்பு அம்சம்.
"அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது" இந்த முடிவு அருமை. நிலாரசிகன் அவர்களின் கற்பனை வளமும்  எழுத்தின் தீவரமும் உணர்த்திய வரி.

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்:
நிலாக்குட்டி , ராசாத்தி , சாமி இவர்கள் தான் கதையின் கதாபாத்திரங்கள். இந்த பெயர்களை உச்சரிக்கும்போதே நம்மை ஒரு கிராமத்திற்கு இழுத்து செல்கிறது கதை. இக்கதையில் வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மக்களின் இயல்புகளை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து  மண்வாசனை இந்த கதை படிக்கும் போதே வீசுகிறது. சுருக்கமாக சொன்னால் பாரதிராஜாவின் படம் பார்த்த திருப்தி கிடைத்தது. கதையின் முடிவில் தந்திருக்கும் திருப்பம் அருமை.
ப்ரியாகுட்டி நான்காம் வகுப்பு 'ஏ' பிரிவு:கிராமத்தில்  இருந்து முதன்முதலாக நகரத்திற்கு வேலை பார்க்கவரும் ஒரு இளைஞனின் கதை. வந்த இடத்தில் அவனுக்கு புதியதாய் ஒரு குட்டிதேவதையின் நட்பு கிடைக்கிறது. அதன் பின் வரும் அதிர்ச்சிகள்  தான் கதையின் அம்சம். நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு குட்டி பெண்ணிடம் கிடைக்கும் நட்பு , அவளின் குறும்புகளையும், அவள் சேட்டைகளையும் அழகாக கண் முன் வந்து நிறுத்திகிறார். அந்த சிறுமியுடன் நாமும் சேர்ந்து விளையாடுவதை  போலவே இருந்தது கதையை வாசிக்கும் பொழுது. கதாபாத்திரங்களை தன் வசமே வைத்துக்கொண்டு கதையின் நடையை இயல்பாக  நகர்த்தி செல்லும் திறன் இவருக்கு அலாதியாக இருகின்றது. அதுவே இவருடைய கதைகளுக்கு பலமாக அமைகிறது என்றும் சொல்லுவேன். "தண்ணீருக்கு பதில் சாணித்தண்ணி ஊத்திவிடுவாளோ "  இப்படி யாதர்த்தமான வரிகள் அருமை.
அவளின் கடைசி நிமிடங்களில் அவளுடைய  அன்பின் வெளிப்பாடு   வார்த்தைகளால் விவரிக்க  முடியாதவை. மிகவும் அருமையாக கதையை நடத்தி சென்றிருந்தார் நிலா அவர்கள்.
இப்படிபட்ட ஒரு தோழி நம் வாழ்வில் வந்தால் எப்படி இருக்கும்.. என்ற ஒரு ஏக்கத்துடன் கதை படித்து முடித்தேன். 
 தனலட்சுமி டாக்கீஸ்:
மிகவும்  ரசித்து படித்த கதை. 'கட்டையனின்' கதாபாத்திரம் மிக அருமையாக வந்துள்ளது. கதையின் கடைசியில் கொடுத்த  திருப்பம் மனதை பாதித்தது. எங்கள் ஊர் கொட்டகையும் 8 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டுவிட்டது. கொடுமை என்னவென்றால் அந்த இடத்தில் புதியதாய் முளைத்திருப்பது  ஒரு மது கடை. அந்த இடத்தை  கடந்து  செல்லும் போது  பல சமயங்களில் வேதனை அடைந்ததுண்டு. சிறு வயதில் எங்க ஊரில் இருந்த சீனிவாசா தியேட்டரில் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம்.    அதனால் தான் என்னமோ இந்த கதை என் மனதில் ஆழமாகவே பதிந்து போனது.

அப்பா சொன்ன நரிக்கதை:கிட்டத்தட்ட  மூன்று முறை படித்த பின் தான் எனக்கு இந்த அதை புரிந்தது. இரண்டே பக்கத்தில் எழுதிய கதையில் இவ்வளவு  திருப்பங்கள் கொடுத்தது பாராட்டிற்குரிய  விஷயம். உங்களுடைய கதைகளில் வரும் அதிர்ச்சியான வித்தியாசாமான திருப்பங்கள் பற்றி அறிந்தும், இந்த கதையில் அப்படி ஒரு அதிர்ச்சி இருக்கும் என்பதை கடைசி வரை உணரவில்லை. கதை முடிவில் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கே சில நிமிடங்கள் ஆகின எனக்கு. மனதை பொசுக்கிப் போட்டது போல் வலித்தது அந்த கதை படித்து முடித்த கணம். மனம் வலிக்கும் அளவுக்கு சிறுகதையைக் கொண்டு சென்ற விதம் தான் இந்த கதையின் வெற்றி. ஒரே வார்த்தை தான் சொல்ல முடியும்  "அருமை".
உங்களின் எல்லா கதைகளிலும்  'கடைசி வரி திருப்பங்கள்' அருமை.
அருமையான சிறுகதை தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பு தந்த நிலாரசிகன் அவர்களுக்கும் , இந்த தொகுப்பை வாங்கி கொடுத்த நண்பர் விழியன் அவர்களுக்கும் நன்றிகள்.  தொடர்ந்து எழுதுங்கள். உங்களின் எழுத்து பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உங்களுடைய படைப்புகளின் தீவிர ரசிகை,
அஷிதா.