Monday, March 8, 2010

வாழக்கை புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கம்! - சிறுகதை


 நான் என்னை மறந்த வினாடி அது , அவனை அந்த புத்தக கண்காட்சியில் பார்த்தது. அவனை பார்த்த நொடியே அவனை மிகவும் பிடித்து போனது. வசீகரமான முகம். சின்னதாய் ஒரு புன்னகை. காதல் வயப்படும் அனைவருக்கும் ஏற்படும் அதே உணர்வு என்னையும் தொற்றிக்கொண்டது. இதய துடிப்பு அப்படியே நின்று  போய்விடும் போல் ஒரு உணர்வு.


அவனை நேரடியாக காணும் சக்தியை என் கண்கள் இழந்திருந்தன. அவன் "காமெடி செக்க்ஷனில்"... "தி பெஸ்ட் ஆப்  லாப்பர் " என்ற புத்தகைத்தை புரட்டி கொண்டு லேசாக சிரித்து கொண்டிருந்தான்.
என்ன அழகு அவனோட சிரிப்பு...ரசித்து கொண்டே இருந்தேன் சற்று தொலைவில் இருந்து.

அதிக நேரம் அவனையே பார்த்து கொண்டிருப்பதை அவன் கவனித்து இருப்பான் போல, சட்டேன்று என்னை பார்த்து ஒரு சின்ன புன்னகை வீசினான்....அதிர்ந்து போனேன். நம்ப  முடியவில்லை. இந்த பக்கம் அந்த பக்கம் திரும்பி பார்த்து ...அவன் என்னை பார்த்து தான் சிரித்தானா என்று கன்பார்ம் செய்து கொள்வதற்குள் அவன் திரும்பி விட்டான். இது வரை இருந்த படபடப்பு விடவும் சற்று அதிகமாக இருக்கிறது அவனுடைய சிரிப்பிற்கு பிறகு.

சுதாரித்துகொண்டு அவன் இருந்த செக்சனுக்கு சென்று...ஏதோ ஒரு புத்தகத்தை  எடுத்து புரட்டினேன்.. சற்று நேரம் கழிந்த பின்,
அவன் என்னை பார்த்து ..
"ஹாய்..ஐயம் மகேஷ்" என்றான்.....மகேஷ்..நல்ல பெயர்.
".........ஹாய்..ஐ..ஐ...ஐயம்... சித்ரா.."
"புக்ஸ் வாங்க  வந்தீங்களா? ன்னு  ஒரு அசட்டு கேள்வியை அவன் என்னிடம் கேட்க...நான் புன்னகைத்தேன் ஆமாம் என்ற சைகையால்.
"நிறைய புக்ஸ் கலெக்சன்  இருக்கு இந்த வருஷம்...உங்களுக்கு எந்த ஆர்தரோட புக்ஸ் ரொம்ப பிடிக்கும்?"  என்று இயல்பாக கேட்டான்.
"ஜெப்ரி  ஆர்ச்சர்" என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தேன்.
"நான் அண்ணாநகர்ல தான் இருக்கேன். நீங்க?" அவன் கேட்டதுக்கு
"திநகர்..வெங்கட்நாராயனா ரோடு" என்றேன்.
"ஓ.. திநகர்...ரொம்ப  நல்ல ஏறியா வாச்சே" என்றாவறே பேசிக்கொண்டு வெளியில் வந்தோம்.

வாசலில் நின்றுகொண்டிருந்தோம், கிளம்புவதற்கு தயாராக..
அவனுக்கு  பேச்சு வரவில்லை.."ம்ம்..ம்ம்..வந்து..வந்து..உங்க போன் நம்பர் குடுக்க முடியுமா, உங்களுக்கு பிடிச்ச ஆர்தரோட  புக் எங்கயாவது பார்த்தேன்னா சொல்றேன்".  நானும் கொடுத்தேன்.
"உங்க நம்பர்க்கு  மிஸ்டு  கால் கொடுக்கிறேன்"...என்று நாசுக்காக அவனோட நம்பரை கொடுத்தான்.."பை"  சொல்லிக்  கொண்டு பிரிந்தோம்.

ஆட்டோவில் செல்லும்போது முழுவதும்...அவனோட நினைப்பு தான். அவனோட பார்வை...அவனோட சிரிப்பு ..அப்படியே என்னை முழுசா ஆக்கிரமிச்சிக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு. வயிற்றுக்குள் ஏதோ பூதம் புகுந்து புரண்டி எடுக்கிறது போல் உணர்வு..

வீடு செல்வதற்குள் ஒரு sms "ஹாய்" என்று...அதை பார்த்தவுடன் மனம் துள்ளி குதித்தது ..ஆட்டோவை நிறுத்த சொல்லி ...கீழே இறங்கி ஒரு குட்டி ஆட்டம் போட்டேன். ரோட்டில் ......
ரிப்ளை அனுப்பினேன் அதே "ஹாய்". அதற்கு பின் ஏதும் வரவில்லை அவனிடம் இருந்து. ஆயிரம் முறை பார்த்திருப்பேன்...மெசேஜ் ஏதாச்சும் வந்திருக்கிறதா என்று.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை..புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை..பைத்தியம் பிடித்தார் போல் இருந்தது....என்றும் இல்லாத ஒரு  உணர்வு ... எத்தனை சுகம் இந்த காதல் வலி என்பது அன்றுதான் உணர்ந்தேன்.

"காதலை தேடி போக கூடாது, அது  நிலைக்காது, அதுவா  நடக்கணும், உன்ன  போட்டு  தாக்கனும், தல கிழா போட்டு  திருப்பனும்." என்ற விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவின் டயலாக் தான் ஞாபகம் வருகிறது.
இரவு முழுவதும் தூங்காமல், போர்வைக்குள் சுருண்டு கிடக்கிறேன்....காலை மணி 8. sms வருகிறது "ஹாய் குட்மோர்னிங் "  என்று அவனிடம் இருந்து. பார்த்ததும் அப்படி ஒரு ஆனந்தம்.. ஆகாயத்தில் பறப்பதை போல. புன்னகையுடன் "ஹாய் குட்மோர்னிங்"  என்று நானும் ரிப்ளை அனுப்பினேன்..
சந்தோசத்துடன் விடிந்த காலையது சங்கடமேதுமில்லாமல் நகர்கிறது.
"ப்ரேக்பாஸ்ட் சாபிட்டாச்சா" என்ற அடுத்த sms வருகிறது சற்று நேரம் கழித்து....இப்படியே ஒரு மணி நேரம் sms  வழியாகவே பேசிக்கொள்ளும்போது ஒரு sms "நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க  மாட்டீங்களே ?" என்று....
"மாட்டேன் " என்றேன் ..
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" அடுத்த sms ..
ஆஹா ....என்று எழுந்து திரும்பவும் குட்டி  ஆட்டம்   போட்டேன்.  அடக்கி கொள்ள  முடியவில்லை அந்த சந்தோசத்தை ...உண்மையில் சொல்லப் போனால் காதல் என்னும் அந்த காந்தம் நம்மை பற்றிக் கொள்ளும் போது நாம் நாமாகவே இருப்பதில்லை.
சில நொடிகள் கழித்து அடுத்த sms அவனிடமிருந்து "சாரிங்க...நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா"....
"ச்ச்சே  ச்ச்சே அப்படி எல்லாம்  ஒன்றும இல்லை" என்றேன்..
கட்டில் மேல் விழுந்து புரண்டு... தலகாணி  நடுவில் முகத்தை புதைத்து சிரித்துகொள்கிறேன்.
என் உதட்டின்  ஓரம் எப்போதும் ஒரு புன்னகை மின்னிக்கொண்டே இருக்கிறது. வெட்கத்தை மறைக்க நினைத்தாலும் முடியாமல் தவிக்கிறேன். கண்ணாடியை ஆயிரம் முறை பார்த்து அசடு வழிகிறேன்..காதல் எத்தனை சுகமானது. ஒவ்வொருவரும் கட்டாயம் கடந்து வர வேண்டிய சிலிர்க்க வைக்கும் வசந்த காலம் அது.

பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள் சித்ரா தன் தோழி அனுவிடம்...."இப்படி எல்லாம் எனக்கு நடந்து, என்னோட இந்த காதல் சுகத்தையும், காதல் வலியையும் உன்னிடம் சொல்லணும்னு  ரொம்ப  ஆசையடி  எனக்கு".
"ஏய்...என்னடி சொல்ற...உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு மறந்துடாத..குழைந்தை கூட  இருக்கு..என்ன பேசற நீ..? " என கடித்து  கொண்டாள் அனு, சித்ராவை பார்த்து.

சித்ரா தன் தோழி கேட்ட கேள்விக்கு..
"நிச்சயித்த திருமணம்.. நல்ல பையனா, குடும்பத்துக்கு ஏத்தவரான்னு  பார்த்து அம்மா அப்பா கல்யாணம் செய்து வைக்கிறாங்க. பிரச்சனை என்னன்னா யாரையும் பார்த்தவுடனே இந்த காதல் உணர்வு , ஈர்ப்பு ஏற்படறது  இல்லை. சில பேருக்குதான் அந்த மாதிரி அதிர்ஷடவசமா அமையுது. சொன்னாலும் அம்மா அப்பா கேட்க்கிறது இல்லை. கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆயிடும்'ன்னு சொல்லி கட்டிவச்சுடுறாங்க. கல்யாணம் ஆயிடுச்சு, புருஷன் தான் எல்லாம்ன்னு திருப்திபடுத்திகிட்டு வாழ்ந்துடறாங்க.
நான் சொன்ன இந்த காதல் வலி, சுகம், ஈர்ப்பு, தன்னிலை அறியாத ஒரு  உணர்வு..இது எல்லாம் சினிமால தான் நடக்கும்...நிஜ  வாழ்க்கைல நடக்காதுன்னு நிறைய பேரு நினச்சுகிட்டு  இருக்காங்க....அப்படி எல்லாம் இல்லை. நம்ம மனசுக்கு பிடிச்சவன பார்த்தவுடனே இது எல்லாம் கண்டிப்பா நடக்கும்.

என்னோட வாழக்கை புத்தகத்துல காதல் என்ற பக்கம் மட்டும்
நிரப்பபடாமலே  இருக்கு...அதை நிரப்பாமல் வைத்திருக்க நான் விரும்ப வில்லை. அந்த அனுபவங்களை அனுபவிக்காமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் ஆசை இல்லை....." என்று சொல்லி முடித்தாள்.

அனு திடுக்கிட்டு பார்க்கிறாள் சித்ராவை...ஏதும் பேசாமல் அப்படியே  விசித்திரமாக பார்துகொண்டிருக்கிறாள்...

சித்ரா, தன் தோழி அனுவின் பக்கத்தில் சென்று...அவளுடைய கையை  பிடித்து கொண்டு "அனு..ஆயிரம் கேள்விகள் உன் மனசுக்குள் ஓடிக்கொண்டு இருப்பதை என்னால் உணர முடிகிறது ..அத்தனை கேள்விகளுக்கும் பதில்...என்னிடமும் இல்லை...." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சித்ரா.

11 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நல்லா இருக்கு அஷித்தா. வேறுபட்ட கதை.

  உங்க துனிச்சல பாராட்டியே ஆகணும். மனசுல தோனுறத, எத பத்தியும் யோசிக்கமா எழுத ஒரு தில் வேணும் அது உங்களுக்கு இருக்கு

  உங்க கதையை விட உங்க துணிச்சலை ரசித்தேன்.

  ReplyDelete
 3. மனுசங்களை 2 வகையா பிரிக்கலாம். ஒரு விஷயத்த ஆரம்பிக்கும் முன்னாடி, அது சரியா இல்ல தவறான்னு யோசிக்கிறவங்க. இன்னொன்னு, அது பிடிச்சுருக்கா இல்ல பிடிக்கலையான்னு யோசிக்கிறவங்க. முதல் வகை மனுசங்க அவங்க உணர்வுகளை விட அதனால ஏற்படும் விளைவுகளை பத்தி அதிகமா அக்கறை எடுத்துக்குவாங்க. ரெண்டாம் வகை அப்படியே opposite. இவங்களுக்கு, பின்னாடி நடக்குறத பத்தி யோசிச்சு இப்போ கிடைக்கிற சந்தோசத்த ஏன் வீணாக்கணும், இத இப்போ அனுபவிப்போம். மத்தத அப்புறம் பாத்துக்கலாம் னு நினைக்கிறவங்க. சுருக்கமா சொல்லணும் ன்னா 'living in the moment' டைப்.

  நம்ம கதைல வரும், கதாநாயகி எந்த டைப் னு உங்களுக்கே தெரியும் . இந்த கதை உண்மையா இல்ல வழக்கம் போல ஆஷிதா வோட விவகாரமான கற்பனையா னு தெரியல. இருந்தாலும், நான் ஒருவேளை சித்ரா friend ah இருந்தா என்ன சொல்லி இருப்பேன்?

  இந்த பாரு சித்ரா, first, நீ ippo feel பண்றது காதலா னு எனக்கு தோணல. இந்த உணர்வுகளை நியாயப்படுத்த நீ இத காதல் னு உனக்குள்ள சமாதானப்படுத்திக் கொண்டாலும், காதலுக்கு உண்டான புனிதமும், ஆதார அமைப்பும் இதுல இல்ல . உனக்கு அவன் உன்னோட காதலனா / கனவு கண்ணனா தெரியலாம் . ஆனால், அவனுக்கு நீ ஒரு aunty(pasangalukku, oru ponnu marrige agi kulanthai pethale athu aunty than) than. So, அவன் உன்னிடம் என்ன எதிர்பாத்து பழகுறான்னு உனக்கு புரியும் னு நினைக்குறேன்.

  உன் வாழ்க்கை ன்ற புத்தகத்துல 'காதல் (not sure)' ன்ற பக்கத்தில் நீ ரகசியமாக இத எழுதுற போது, உன் கணவர் வாழ்க்கை புத்தகத்தில் இருந்து 'நல்ல மனைவி' ன்ற chapter um, உன் குழந்தை வாழ்க்கை புத்தகத்தில் இருந்து 'நல்ல அம்மா' nra chapter um தானாகவே பியித்து எறியப்படும்...

  நான் எப்பொதுமே ஒரு விஷயம் செய்யலாமா இல்ல வேண்டாமா னு குழப்பம் வந்துச்சுனா, கீழ இருக்குற english quote a than follow பண்ணுவேன்.

  If you can not share with 4 people about what you are doing, then don't do it.

  ReplyDelete
 4. துணிச்சலான கருவை தேர்ந்தெடுத்ததிற்கு பாராட்டுகள் அஷீதா.

  கதைக்கான முடிவை வாசகனின் ஒரு வித யூகத்தில் விட்டது இன்னும் சிறப்பு.

  நண்பர் லஷ்மி சுந்தர் பின்னூட்ட அறிவுரை... :)யாருக்கு அறிவுரை கூறுகிறார்? கதையின் ஆசிரியருக்கா? :)) நண்பர் கூறியது போல கதைமாந்தரை ஒரு விதிகளுக்குட்பட்ட கட்டத்துக்குள் அடைத்து கதையை எழுதச் சொல்வது தமிழ் சினிமா பாணியில் உள்ளது! அறிவுரை கூறுவதையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் கதையின் போக்கு பற்றி நிறைய விவாதிக்கலாம்.

  காதலும் ஒரு உணர்வு.. அதை அனுபவிக்கிறார் கதை மாந்தர். முடிவு எதுவும் எடுக்கவில்லை. அக்கோணத்தில் பார்த்தால் இது வித்தியாசம். வாழ்த்துகள் அஷீதா.

  ReplyDelete
 5. ருசிகரமான சம்பவம்...

  ReplyDelete
 6. ருசிகரமான சம்பவம்...

  ReplyDelete
 7. நல்ல நடை..படிக்கும்பொழுதே ஈர்க்கும் சம்பவங்கள் கண்முன்னே விரிகின்றது.

  லக்ஷ்மி சுந்தர் கருத்தும் சூப்பர்..

  ReplyDelete
 8. லக்ஷ்மி சுந்தர் கருத்து சபாஷ்!
  கற்பனையோ இல்ல நிஜமோ, யதார்த்தம் இல்லை

  ReplyDelete
 9. நல்ல சிறுகதைக்கான கரு.. தொடரலாம்.

  நண்பர் லஷ்மி சந்தர் சொன்ன கருத்துக்கள் சுவாரஸ்யமானவை. எந்த ஒரு கதையிலும் ஒரு நியாயம், தர்மம், தீர்ப்பு, நீதி இருக்கணும்னா அது நிச்சயம் சிறந்த கதையா இருக்கணுங்கற அவசியம் இல்லை.

  நீங்க சொன்னது கதையோட ஒரு முடிவா இருக்கலாம். தப்பில்ல.. ஆனால் இதுதான் முடிவா இருக்கணும்னு விவாதிக்க முடியாது.

  காரணம், எந்தப் படைப்பையும் நாம எடுத்துக்கற கண்ணோட்டத்தைப் பொறுத்துத்தான் முடிவு அமையும்.

  @ அர்ஷிதா...

  கதை முடிவுல இப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்த வகையில நிச்சயம் சிறப்பான ஒன்று. விவாதத்திற்குரியதா இருந்தாலும் விவாதம் செய்ய வைச்சிருக்கற விசயத்திற்கு சல்யுட்.

  ReplyDelete
 10. //If you can not share with 4 people about what you are doing, then don't do it.//

  நல்ல க்யோட்... ஆனா எல்லாத்துக்கும் இதை மாதிரிதான் செய்ய முடியுமா என்ன?

  ReplyDelete
 11. kalyanamana ponnukku kadhal varakudatha enna? kadhal oru silarai partha udan thaan varukira unarvu.... chithravin thavipinai..unara mudikiradu.... ashithavin vekamana nadai... endha kadhaiyil therikiradhu.... nice story.... i cant xpress my comments in tamil..soon i write in tamil

  ReplyDelete