Tuesday, March 2, 2010

தொலைத்து கொண்டிருக்கின்றோம் !

வழக்கம் போல் இல்லாமல் சற்று சீக்கரமாகவே  கிளம்பினேன் அலுவலகத்தில் இருந்து. பேருந்து நிலையத்தில்  D 70 பேருந்திற்காக காத்திருந்தேன்,  முதலில் ஒரு பேருந்து வந்தது , சீட் ஏதும்  காலி இல்லாத காரணத்தால் நான் ஏறவில்லை. அப்படியே இரண்டு பேருந்துகளை விட்டுவிட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து அடுத்த பேருந்து வந்தது.சற்று காலியாக இருந்ததால் ஏறினேன், நல்ல வேளையாக அமருவதற்கு இடமும் கிடைத்தது பேருந்தின் கடைசிக்கு  முந்தைய சீட்டில்.

அடுத்த நிலையத்தில் வயதான பாட்டி ஒருவர் முன்புறமாக ஏறினார். அவரை பார்த்தவுடன்  முன்பு அமர்ந்திருக்கும்  யாரேனும் கட்டாயம் இடம் கொடுப்பார்கள் என்று நினைத்தேன். 3 நிமிடங்கள் கழிந்தன யாரும் தன் இடத்தில இருந்து எழுந்து அந்த வயதான பாட்டிக்கு இடம் கொடுக்க வில்லை. நான் எழுந்து போய் அவர்களை அழைத்து வந்து என் இடத்தில அமரவைத்தேன்.

அந்த பாட்டி என்னை ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் மேலும் கீழுமாய் பார்த்தார். அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் முழுதாக தெரியா விட்டாலும் நான் யூகித்த இரண்டு விஷயங்கள்..

ஒன்று, ஜீன்ஸ் போட்டுருந்தாலும் இந்த பொண்ணு  நமக்கு சீட்டு  குடுத்திருக்குன்னா நல்ல பொண்ணுதான்..

இரண்டு,  இந்த காலத்துல யாரு நம்மள மாதிரி வயசானவங்கள பாத்து எழுந்து சீட்டு குடுக்குறாங்க, காலம் மாறி போச்சு ...அது எல்லாம் அந்த காலம் வயசானவங்கள பாத்தவுடனே அனுதாபப்படறதும் மரியாதை குடுக்கறதும்...
பரவால்லையே இப்படி பட்டவங்க  இருக்காங்கன்னா ஆச்சர்யமா தான்  இருக்கு.... 

மறுபக்கம், கடைசி சீட்டில் அமர்ந்திருந்த நான் எழுந்து போய் அந்த பாட்டியை அழைத்து வந்து என் சீட்டில் அமர வைத்தது, அந்த  பேருந்தில் பயணித்த அனைவருக்கும் சற்று ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருந்தது.  முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு சிலர் என்னை சில நொடிகள் வெறித்து பார்த்தனர் ஒரு குற்ற உணர்ச்சியோடு ...

 இதை எல்லாம் என்னை பெருமைப்  படுத்திக்கொள்வதற்காக  சொல்லவில்லை, சற்று யோசித்து பாருங்கள் எங்கே போனது நமது பண்பு....கொஞ்சம் கொஞ்சமாக நமது கலாச்சாரம் எங்கேயோ தொலைந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் உணர்ந்தேன்.

விஷயம் சிறிதாயினும் அதனுடைய தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கின்றது என்னுள்..

7 comments:

  1. நிறையப்பேர் உதவியை செய்யவேண்டும் என்று நினைப்பதோடு சரி (என்னையும் சேர்த்துத்தான்)..
    நீங்கள் செய்துவிட்டிர்கள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பா...

    ReplyDelete
  3. நான் இருந்தாலும் அந்த மாதிரி எழுந்து இடம் கொடுத்திருப்பேனான்றது சந்தேகமே..

    ReplyDelete
  4. பதிவர் திரு. நான் ஆதவன் முலமாக உங்கள் பக்கம் வந்தேன்.

    திரு. நான் ஆதவன் அவர்கள் சொன்னது போல நானும் இடம் கொடுத்திருப்பபேனா என்பது சந்தேகமே.

    நண்பர் திரு. வினோத்கெளதம் அவர்கள் கூறியது போல உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  5. நீங்க ஒரு ஜீன்ஸ் போட்ட மகாலட்சுமி

    ReplyDelete
  6. நான் பேருந்தில் தினமும் பல முறை பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவன், ஆனால் இதுவரை நான் 5 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து சென்றது இல்லை, காரணம் நீங்கள் செய்த நல்ல காரியத்தை என் வாழ் நாள் லட்சியமாக கொண்டவன்...................

    By : selvam

    selvaraj238@gmail.com

    ReplyDelete