Tuesday, May 4, 2010

"யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" - விமர்சனம்


இணையத்தில்  அறிமுகமான நண்பர்  'நிலாரசிகன்' அவர்கள். நிலாரசிகனைப் பற்றியோ அவரது கவிதைகள் பற்றியோ நான் சொல்லித்தான் தெரியவேண்டியது இல்லை. தமிழ் பதிவர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் மற்றும் தமிழ் இணைய உலகில் மிகவும் அறியப்பட்டவர் நிலாரசிகன். இவரை பார்த்தது இல்லை, அதிகமாக பேசியதும் இல்லை. ஒரு முறை மடலில் பேசிக்கொண்டதோடு சரி. இந்த புத்தகம் படித்த பின் இவரை சந்தித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.
'யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்' நிலாரசிகனின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பை பற்றிய விமர்சனம் எழுதவே  நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  இந்த  சிறுகதை தொகுப்பானது 17 சிறுகதைகளை கொண்டது. ஒவ்வொரு கதையையும்  ஓரிரு பக்கங்களுக்கு மிகாமல் சொல்ல வந்த விஷயத்தை செவ்வனே சொல்லி முடித்திருப்பது இந்த சிறுகதை தொகுப்பின்  சிறப்பு அம்சம். அனைத்து கதைகளுமே மிக அருமை அதில் என்னை வெகுவாய் கவர்ந்த சில கதைகள் பற்றி என் கருத்துக்கள் இங்கே பதிவு செய்கிறேன்...

யாரோ
ஒருத்தியின் டைரி குறிப்புகள்:
சாதரணமாக படிக்க ஆரம்பித்த எனக்கு படிக்க படிக்க ஏதோ இனம் புரியாத சோகம், சுமை சூழ்ந்துகொள்கிறது. படித்து முடித்த கணம் மனதில் ஒரு சுமை ஏறியதை உணர்ந்தேன். இந்த கதையில்  வரும் அந்த சிறுமியின் கதாபாத்திரம் படிப்பவர்  மனதில் பதியுமாறு  கதையை நடத்தி செல்கிறார் நிலாரசிகன். தமிழ் படங்களில் வெளிப்படுத்தும் 'ஆர்பாட்டம்' , 'ஆபாசம்' இல்லாமல் மற்றும் ஆபாச  சுவடுகள் கூட படாமல் அந்த சிறுமியின் வேதனைகள், அல்லல்கள், அவஸ்தைகள் நம் ஆழ்மனதில் நிழற் படங்களாய் பதிய வைக்கிறார். சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று சிக்கி தவிக்கும்  பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை பற்றி எத்தனை படித்திருந்தாலும், இந்த கதை தனித்து நிற்கின்றது. சிறுமியின் சின்ன சின்ன உணர்வுகளையும் , வேதனைகளையும் மூன்றே பக்கங்களில் வெளிப்படுத்திய விதம் அருமை. கதை படித்த இரவு உறங்க முடியவில்லை, படித்து முடித்து 4 நாட்கள் ஆன பிறகும்  என்னால்  இந்த வலியிலிருந்து மீளமுடியவில்லை. ஒரு சிறுகதை இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு "முடியும்" என்று  உணர வைத்திருக்கிறார் நிலாரசிகன் அவர்கள்.


வேட்கையின் நிறங்கள்:
ஓரினச்சேர்க்கை என்ற துணிச்சலான கருவை எடுத்து ஒரு பெண்ணின்  உணர்வுகளை மிக வெளிப்படையாக எழுதிய  நிலாரசிகன் அவர்களுக்கு ஒரு சல்யூட். அங்காங்கே சில இடங்களில் மிகைப்படுத்தி எழுதி இருப்பது போன்ற உணர்வு  இருப்பினும் இரு பெண்களுக்கிடையில் இருக்கும் அந்தரங்கத்தை வெளிபடுத்திய விதம் அருமை. பெண்ணின் மனதில் புகுந்து அவளுடைய  அக உணர்வுகளை  விவரிக்கும் இடங்களிலும் சரி, காமம் கொள்ளும் தருணங்களை விவரிக்கும் இடங்களிலும் சரி , எங்குமே ஒரு சிறு சலிப்பையோ முகச்சுளிப்பையோ உண்டாக்காமல் லாவகமாக எழுதியதுதான் இந்த கதையின் சிறப்பு அம்சம்.
"அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது" இந்த முடிவு அருமை. நிலாரசிகன் அவர்களின் கற்பனை வளமும்  எழுத்தின் தீவரமும் உணர்த்திய வரி.

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்:
நிலாக்குட்டி , ராசாத்தி , சாமி இவர்கள் தான் கதையின் கதாபாத்திரங்கள். இந்த பெயர்களை உச்சரிக்கும்போதே நம்மை ஒரு கிராமத்திற்கு இழுத்து செல்கிறது கதை. இக்கதையில் வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மக்களின் இயல்புகளை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து  மண்வாசனை இந்த கதை படிக்கும் போதே வீசுகிறது. சுருக்கமாக சொன்னால் பாரதிராஜாவின் படம் பார்த்த திருப்தி கிடைத்தது. கதையின் முடிவில் தந்திருக்கும் திருப்பம் அருமை.
ப்ரியாகுட்டி நான்காம் வகுப்பு 'ஏ' பிரிவு:கிராமத்தில்  இருந்து முதன்முதலாக நகரத்திற்கு வேலை பார்க்கவரும் ஒரு இளைஞனின் கதை. வந்த இடத்தில் அவனுக்கு புதியதாய் ஒரு குட்டிதேவதையின் நட்பு கிடைக்கிறது. அதன் பின் வரும் அதிர்ச்சிகள்  தான் கதையின் அம்சம். நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு குட்டி பெண்ணிடம் கிடைக்கும் நட்பு , அவளின் குறும்புகளையும், அவள் சேட்டைகளையும் அழகாக கண் முன் வந்து நிறுத்திகிறார். அந்த சிறுமியுடன் நாமும் சேர்ந்து விளையாடுவதை  போலவே இருந்தது கதையை வாசிக்கும் பொழுது. கதாபாத்திரங்களை தன் வசமே வைத்துக்கொண்டு கதையின் நடையை இயல்பாக  நகர்த்தி செல்லும் திறன் இவருக்கு அலாதியாக இருகின்றது. அதுவே இவருடைய கதைகளுக்கு பலமாக அமைகிறது என்றும் சொல்லுவேன். "தண்ணீருக்கு பதில் சாணித்தண்ணி ஊத்திவிடுவாளோ "  இப்படி யாதர்த்தமான வரிகள் அருமை.
அவளின் கடைசி நிமிடங்களில் அவளுடைய  அன்பின் வெளிப்பாடு   வார்த்தைகளால் விவரிக்க  முடியாதவை. மிகவும் அருமையாக கதையை நடத்தி சென்றிருந்தார் நிலா அவர்கள்.
இப்படிபட்ட ஒரு தோழி நம் வாழ்வில் வந்தால் எப்படி இருக்கும்.. என்ற ஒரு ஏக்கத்துடன் கதை படித்து முடித்தேன். 
 தனலட்சுமி டாக்கீஸ்:
மிகவும்  ரசித்து படித்த கதை. 'கட்டையனின்' கதாபாத்திரம் மிக அருமையாக வந்துள்ளது. கதையின் கடைசியில் கொடுத்த  திருப்பம் மனதை பாதித்தது. எங்கள் ஊர் கொட்டகையும் 8 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டுவிட்டது. கொடுமை என்னவென்றால் அந்த இடத்தில் புதியதாய் முளைத்திருப்பது  ஒரு மது கடை. அந்த இடத்தை  கடந்து  செல்லும் போது  பல சமயங்களில் வேதனை அடைந்ததுண்டு. சிறு வயதில் எங்க ஊரில் இருந்த சீனிவாசா தியேட்டரில் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம்.    அதனால் தான் என்னமோ இந்த கதை என் மனதில் ஆழமாகவே பதிந்து போனது.

அப்பா சொன்ன நரிக்கதை:கிட்டத்தட்ட  மூன்று முறை படித்த பின் தான் எனக்கு இந்த அதை புரிந்தது. இரண்டே பக்கத்தில் எழுதிய கதையில் இவ்வளவு  திருப்பங்கள் கொடுத்தது பாராட்டிற்குரிய  விஷயம். உங்களுடைய கதைகளில் வரும் அதிர்ச்சியான வித்தியாசாமான திருப்பங்கள் பற்றி அறிந்தும், இந்த கதையில் அப்படி ஒரு அதிர்ச்சி இருக்கும் என்பதை கடைசி வரை உணரவில்லை. கதை முடிவில் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கே சில நிமிடங்கள் ஆகின எனக்கு. மனதை பொசுக்கிப் போட்டது போல் வலித்தது அந்த கதை படித்து முடித்த கணம். மனம் வலிக்கும் அளவுக்கு சிறுகதையைக் கொண்டு சென்ற விதம் தான் இந்த கதையின் வெற்றி. ஒரே வார்த்தை தான் சொல்ல முடியும்  "அருமை".
உங்களின் எல்லா கதைகளிலும்  'கடைசி வரி திருப்பங்கள்' அருமை.
அருமையான சிறுகதை தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பு தந்த நிலாரசிகன் அவர்களுக்கும் , இந்த தொகுப்பை வாங்கி கொடுத்த நண்பர் விழியன் அவர்களுக்கும் நன்றிகள்.  தொடர்ந்து எழுதுங்கள். உங்களின் எழுத்து பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உங்களுடைய படைப்புகளின் தீவிர ரசிகை,
அஷிதா.

17 comments:

  1. நல்லதொரு விமர்சனம் அஷீதா.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்..

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  3. படிக்கும் ஆவலை ஏற்படுத்தும் விட்டது

    ReplyDelete
  4. ஒரு இணைய நண்பர் மூலம் இப்புத்தகத்தை வாங்கிப் படிக்க நேர்ந்தது. நிலாரசிகனின் எழுத்தில் புதுமைப்பித்தனின் ஆன்மாவைக் காணுகிறேன்.

    ReplyDelete
  5. ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ங்க‌.. ப‌டிக்கும் ஆர்வ‌த்தை தூண்டிவிட்ட‌து..

    ReplyDelete
  6. நல்லா இருக்கு.. படிக்க வேண்டும்...!!

    ReplyDelete
  7. அஷிதா அவர்களுக்கு நன்றி. தனலட்சுமி டாக்கீஸ் எங்கள் ஊரில் இருந்தது.(ஆம் இருந்தது). ப்ரியாக்குட்டி கதை என் நண்பனின் வாழ்வில் நடந்த கதை.தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பிய ஓர் இரவில் ரயில் பயணத்தில் என்னிடம் பகிர்ந்துகொண்ட கதை.அந்த ப்ரியாக்குட்டியின் ஆத்மா சாந்தி அடைய இறைவேண்டுகிறேன். மனதில் பட்டதை பளிச்சென்று எழுதியதற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம். படிக்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  9. ஆஷிதா,
    உங்க review எ பாத்தா இந்த புக் சூப்பர் ஆ இருக்கும் னு நினைக்குறேன்... உங்க கிட்ட இருந்து இரவல் வாங்கி படிக்கலாம் னு first நெனச்சேன்... ஆனால், இந்த மாதிரி புத்தகங்களை பணம் குடுத்து வாங்கி படிப்பது தான் சரி னு தோணுது... So, நான் வாங்கி படிச்சுட்டு உங்க விமரசனத்த விமர்சனம் பண்றேன்... Meanwhile, இந்த புக் இன்னொரு copy கிடைச்சா வாங்கிட்டு எனக்கு inform பண்ணுங்க...
    பயப்படாதீங்க, காசு குடுத்துருவேன்...

    ReplyDelete
  10. எனக்கு விமர்சனம் எழுதத் தெரியாததால் எழுதவில்லை. முழுத் தொகுப்பையும் படித்துவிட்டேன்.
    இருவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. Nice review. Thanks for sharing!

    ReplyDelete
  12. விமர்சனம் அருமை அஷிதா..

    ReplyDelete
  13. விமர்சனம் அருமை அஷீதா..

    ReplyDelete
  14. நண்பர் நிலாவின் எழுத்து எப்பவுமே அழுத்தமும் ஆழமும் கொண்டது என்பதை இந்த தொகுப்பின் மூலம் இன்னொருமுறை நிரூபித்துவிட்டார். அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன். அஷிதா உங்கள் விமர்சனமும் ரசிப்புத்தன்மையும் அதை எழுதியவிதமும் மிகவும் அற்புதம்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் என் நன்றி:)

    ReplyDelete