இயந்திரமாய் பல் துலக்கி, அரைகுறையாய் குளித்து ஓடுகிறாள் சமையல் அறைக்கு.
ஜானு..கெட் மீ காபி டா செல்லம்...
இதோ ஒரு நிமிஷம் எடுத்திட்டு வரேன்....
கார்த்திக்கு காபி குடுத்து விட்டு, அவளும் அவசர அவசரமாய் ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு சமைக்க ஆரம்பித்தாள்.
பதம் பார்த்து சமைகிறாள்..அஸ்வினுக்கு மிகவும் பிடித்த முட்டை நூட்லஸ்.
இப்போ நமக்கு ஏதாச்சும் சமைக்கணுமே..சரி சாம்பார் வச்சுடலாம்,சாம்பார்னா இட்லிக்கும் தொட்டுக்கலாம் அப்புறம் மத்தியானம் பொழுதும் கழியும் என்று நினைத்து கொண்டே குக்கரில் பருப்பு போட்டு அடுப்பில் வைத்தாள்.
அச்சு எழுந்திடு..ஸ்கூல்'க்கு டைம் ஆயிடுச்சு. கமான்.. கமான் கெட் அப்..
மம்மி 5 mins ப்ளீஸ் என்று சிணுங்கிக்கொண்டே புரண்டு படுக்கிறான் அஸ்வின்..
சொன்னா கேக்காம ராத்திரி பத்து மணி வரைக்கும் டிவி பார்க்க வேண்டியது ...காலைல சீக்கிரம் எழுந்திக்கிறது கிடையாது.. சரி சரி எழுந்திடு டைம் ஆச்சு. ஹோம்வொர்க் என்ன குடுத்திருக்காங்களோ ..என்று பொலம்பி கொண்டே அவனுடைய புத்தகங்களை புரட்டுகிறாள்..
கண்ணா எழுந்திரி டா டைம் ஆயிடுச்சு...ப்ளீஸ் டா...
அஸ்வினும் எழுந்து வந்தான்.
பாத்ரூம்ல ப்ரஷும் பேஸ்டும் வச்சிருக்கேன்...பொய் ப்ரஷ் பண்ணிட்டு வா..என்றதும் அவனும் சென்று ப்ரஷ் செய்துவிட்டு வந்தான்.
வீட்டுபாடம் புத்தகத்தை புரட்டிக்கொண்டே அடடே இன்னைக்கு கொரில்லா படம் ஓட்டிட்டு வரணும்னு சொல்லி இருக்காங்களே..இப்போ என்ன செய்றது. நேத்தே பாத்திருந்தா பக்கத்துக்கு கடைல வாங்கி ஒட்டி இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே..
ஏண்டா பட்டு...பேசாம உங்க அப்பா போட்டோ ஒட்டிடலாமான்னு... பக்கத்துல செய்தித்தாளை புரட்டிகொண்டிருக்கும் கார்த்தியை பார்த்து நக்கல் அடித்தாள்.
கார்த்தி..அவளை பார்த்து லேசா ஒரு நமட்டு புன்னைகையோட ...ஏண்டி செல்லம் என் போட்டோ விட உங்க அப்பன் போட்டோ இன்னும் மாட்சிங்கா இருக்குமே..
இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறச்சல் கெடையாது..காலைல எழுந்து பாவம் பொண்டாட்டி கஷ்ட்டப்படுராளேன்னு ஏதாச்சும் ஹெல்ப் செய்றீங்களா..மாடீங்களே.
காலைல உன்னோட பொலம்பல் ஆரம்பிசிட்டியான்னு மொனங்கிகொண்டே பாத்ரூம்குள் நுழைந்தான் கார்த்தி.
ஒரு வழியாக சமையல், வீட்டுபாடம் , காலை உணவு என்று
அத்தனையும் முடித்து..அவசரமாக அஸ்வின்'யை பள்ளிக்கு கிளப்புகிறாள்.
அச்சு கமான் கமான் ID Card போடு..பாக் மாட்டு டைம் ஆயிடுச்சு ...பஸ் வந்துடும். அம்மாக்கும் ஆபீஸ் போகணும் டைம் ஆயிடுச்சு..என்று சொல்லிக்கொண்டே அவரசரமாய் திரும்புகையில் அவளை பார்த்து சிரிக்கிறாள் அம்மு..ஜானுவின் இளைய மகள் ஒரு வயசு ஆகுது...புதிதாய் பூக்கும் பூவை போல் அவளது கண்கள் மெல்ல திறக்க, அவளுக்கே உரிய மழலையில் ‘அம்மா ’..’அம்மா ’ என்று அழைக்கிறாள். ஜானுவின் மனம் துள்ளி குதிக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க்கிறாள் அவளை அழைக்கச் சொல்லி ….மிக்க ஆசை அவளுக்கு அம்முவின் மழலை கேட்க , ஆனால் நேரம் இல்லை.யாழ் இனிது குழல் இனிது என்பார் மழழை சொல் கேளாதார்! என்று சும்மாவா சொன்னார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு ஏக்கத்துடன் பார்க்கிறாள் அம்முவை.
கடிகார முள் 8 தொட்டது, இவளுக்கு அலுவக பஸ் வரும் நேரம் ஆயிற்று, அஸ்வின்'க்கும் ஸ்கூல் பஸ் வரும் நேரம் ஆகிவிட்டது.
அத்தை.. காபி போட்டு வச்சிருக்கேன், சூடு பண்ணி சாப்பிடுங்க அப்படியே மாமாக்கும் குடித்திடுங்க. அப்புறம் சாம்பார் வச்சிருக்கேன் இட்லிக்கும் மதியான சாப்பாடுக்கும் அதே தான். அட்ஜஸ்ட் பண்ணிகோங்க அத்தை என்று சொல்லிவிட்டு..
அம்முக்கு சிறிய முத்தம் மட்டும் கொடுத்துவிட்டு .'பை டா..குட்டிம்மா , மம்மி சாயந்திரம் சீக்கிரமா வந்துடறேன்...சமத்தா இருக்கணும் சரியா'.. என்று கொஞ்சிவிட்டு அவளை மாமியாரிடம் குடுத்துவிட்டு கிளம்பினாள்..
கொடுத்த முத்தத்தின் ஈரம் குறையவே இல்லை ..அவளுடைய மனசு முழுக்க பிஞ்சு மழலையே சுற்றி கொண்டிருக்க..அலுவலகத்தில் அவள்.
நுனி நாக்கு ஆங்கிலம் ,கம்ப்யூட்டர்,டார்கெட்..இப்படி எல்லாமே வசப்பட்டுவிட்டது அவளுடைய இந்த அலுவலக வாழ்கையில் ...
மதியம் 1 மணி, வீட்டுக்கு போன் செய்கிறாள்.
ஹலோ , அத்தை நான் தான் பேசுறேன். என்ன செய்றா குட்டிம்மா ?
இன்னைக்கு என்னனே தெரியல ஒரே அழுகை "அம்மா" அம்மா" ன்னு அழுதுகிட்டே இருக்கா, சரியா சாப்பிட கூட இல்லை.
ஓ..அப்படியா, என்ன ஆச்சு செல்லத்துக்கு..ம்ச்.. சரி நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்ரம் வருவதற்கு முயற்சி செய்றேன். எங்கே பக்கத்துல குட்டிம்மா இருந்தா காதுல வைங்க நான் பேசுறேன்..
இந்தா குட்டி உங்க மம்மி பேசுறாங்க பேசு..ம்ம் ..பேசு..என்று அம்முவின் காதில் வைத்தாள் ஜானுவின் மாமியார், அம்முவோ ம்ஹும்....உஊம்ம்ம்... என்று சிணுங்க , இவளுக்கு கண்களில் கண்ணீர் தவற பேச்சு வரவில்லை...தொலைபேசியை துன்டித்தாள்.
3 மணி அளவில் திரும்பவும் வீட்டுக்கு போன் செய்தாள் ஜானு .
இந்த முறை ஜானுவின் மாமனார் "ஹலோ" என்றார்.
ஹலோ மாமா...நான் தான் ஜானு பேசுறேன். அஸ்வின் வந்துட்டானா?..
ம்ம் வந்துட்டான் மா....இப்போ தான் வந்தான் , பால் கலந்து குடுத்தேன், குடிச்சிட்டு டிவி பாத்துகிட்டு இருக்கான்.
சரி மாமா நான் வச்சுடறேன், சாயந்திரம் சீக்கிரம் வந்துடறேன். தொலைபேசியை துன்டித்தாள் பெருமூச்சுடன்.
நான் வீட்டுல இருந்திருந்தா, அச்சு ஸ்கூல் விட்டு வந்ததும் அவனை கட்டி அணைச்சு முத்தம் குடுத்து, அச்சு இன்னைக்கு ஒழுங்கா சாப்டியா இல்ல சாப்பாடு மிச்சம் வச்சிட்டியா? டீச்சர் இன்னைக்கு புதுசா என்ன சொல்லி குடுத்தாங்க? இப்படி பல கேள்விகள் கேட்க்க...அவனும் பட பட'ன்னு குறும்பா பதில் சொல்லி இருப்பான்..ஹ்ம்ம்....என்று பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டு, மீண்டும் அலுவலக வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
இதோ ஆசையோடு அவள் எதிர்பார்த்த மாலை நேரம் வந்தாச்சு, வீட்டுக்கு கிளம்ப தயாரானாள், கிளம்பையில் வருகிறது ஒரு ஈமெயில் ..ப்ரோபோசல் வேண்டுமென்றும்.. மிகவும் அவசரம் என்றும் .
அவள் ப்ரோபோசல் ரெடி செய்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் ரமேஷிடம்
ரமேஷ், எனக்காக ஒரு சின்ன உதவி செய்வீங்களா?
சொல்லுங்க ஜானகி, என்ன செய்யணும்.
இன்னைக்குள்ள இந்த ப்ரோபோசல் கஸ்டமர்க்கு அனுபிடனும், நான் ப்ரொபோசல் ரெடி பண்ணிட்டேன் கஸ்டமரோட முகவரி, மற்ற தகவல்கள் எல்லாம் இதுல எழுதி இருக்கேன். இதை கொஞ்சம் பிரிண்ட் அவுட் எடுத்து கொரியர் அனுபிடறீங்களா?
ஓ ஸூர்..கண்டிப்பா செய்றேன்..
நான் அவசரமா போகணும், அதான் கிளம்பறேன்..
நீங்க கிளம்புங்க நான் பாத்துகறேன்.
ஒரு வழியாக எல்லாம் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள் ஆர்வத்துடன்
மழலை மொழி கேட்டு ரசிப்பதற்கு, அவள் வருவதற்குள் தூங்கியே விட்டாள் அம்மு. அம்மு பக்கத்தில் படுக்கிறாள் ஜானு அம்முவை தழுவிக்கொண்டே...சிறிது நேரத்தில்
ஜானுவின் கண்களும் உறங்கின வழியும் கண்ணீரோடு ..
அவள் இதயமோ விழித்திருந்தது..ஏக்கத்தில்!